மலேசிய இந்தியர்களுக்கான அரசியல்கட்சிகள்

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் அரசியல் கட்சிகள் அமைக்கும் போட்டியொன்று இருக்குமேயானால் அநேகமாக நம் சமூகம் சுலபத்தில் வெற்றி பெறுவது திண்ணம். இப்பிரிவில் நாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜனநாயக நாடுகளில் அரசியல் கட்சிகள் அமைக்கப்படுவது தனிப்பட்ட உரிமை என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் மலேசிய இந்தியர்களின் போக்கு இவ்விவகாரத்தில் வரம்பு மீறி போய்க் கொண்டிருப்பதைப் போல் தெரிந்தாலும், அதில் கலந்திருக்கும் அரசியல் விழிப்புணர்சியை கண்டு நாம் வியப்பும் கொள்ள வேண்டும்.

இந்நாட்டில் நம் சமூகத்தின் மக்கள் தொகை 3 மில்லியனுக்கும் குறைவாகத்தான் உள்ளது. ஒரு காலக்கட்டத்தில் நாட்டின் மக்கள் தொகையில் 10 விழுக்காடாக இருந்த இவ்வெண்ணிக்கை ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக தற்போது 7 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருக்கிறது.

இருந்த போதிலும் குறைந்தது 10 வெவ்வேறு அரசியல் கட்சிகள் நம் இனத்தை தற்பொழுது பிரித்தாள்வது ஒரு வேதனையான விஷயம். ம.இ.கா.வோடு மக்கள் சக்தி, ஐ.பி.எஃப், எம்.யு.ஐ.பி., மீரா, பஞ்சாபியர் கட்சி, கிம்மா, எம்.ஏ.பி., மலேசிய இந்திய நீதிக் கட்சி, போன்ற ஏனைய கட்சிகள் வரிசை பிடித்து நிற்கின்றன.

இவற்றுள் ம.இ.கா.தான் மிகவும் பழமையான கட்சி. கடந்த சுமார் 30 ஆண்டுகளில் ‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காளான்’களைப் போல எண்ணற்றக் ‘கொசுக் கட்சிகள்’ தேவையில்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக தோற்றம் கண்டன. இக்கட்சிகளினால் சமுதாயத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை எனும் நிதர்சனத்தை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எல்லாமே சுயநலம்தான்!

நாடு தழுவிய நிலையில் சிறு சிறு கோயில்கள் உருவான கதைதான் இந்த அரசியல் கட்சிகளுக்கும். அதாவது, பல வேளைகளில் ஒரு கோயில் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்விகாணும் ஒருவர் சுமார் 300 மீட்டர் தொலைவில் மற்றொரு கோயிலைக் கட்டி அதற்கு தலைவராகிவிடுவார். நாடு முழுவதிலும் அருகருகே கோயில்கள் இருப்பதற்கு இதுதான் மூலக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதே போல்தான் அரசியல் கட்சிகளும். தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத ஒருவர் ஜனநாயக உரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தனக்கென ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்து கொள்வார்.

கடந்த 1985ஆம் ஆண்டில் அப்போதைய ம.இ.கா. தலைவர் சாமிவேலுவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் உதவித் தலைவர் வி.கோவிந்தராஜு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ‘ஜனநாயக மலேசிய இந்தியர் கட்சி’ எனும் ஒன்றைத் தொடக்கினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து அப்போதைய அம்னோ தலைவர் மகாதீருக்கும் நிதியமைச்சர் ரஸாலி ஹம்சாவுக்கும் இடையே தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவியது நிறைய பேருக்குத் தெரியும். நூலிழையில் தோல்வி கண்ட ரஸாலி ‘செமாங்ஙாட் 46’ எனும் ஒரு போட்டிக் கட்சியைத் தோற்றுவித்ததும் நாம் அறிந்ததே. அதே போல கடந்த 1998ஆம் ஆண்டில் அம்னோவில் இருந்து விலக்கப்பட்ட அப்போதைய துணைப் பிரதமர்அன்வார் பி.கே.ஆர். கட்சியைத் தொடங்கியது வரலாறு. நாட்டின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் மேலிருக்கும் மலாய்க்ரர்கள் இப்படி அதிகமான கட்சிகளைத் தொடக்குவதை நியாயப்படுத்தலாம்.

நமது நிலைதான் தற்போது கேலிக்கூத்தாக உள்ளது. நம் சமூகத்தை பிரதிநிதித்து தற்போது இருக்கும் கட்சிகள் போதவில்லை என்பதைப் போல மேலும் 3 புதிய கட்சிகள் உதயமாகவிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் வியப்பு என்னவென்றால் இவர்கள் எல்லாருமே உயர் கல்வி பெற்றவர்கள், சீரிய சிந்தனையுடையவர்கள்.

ஒரு கட்சி ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கப் போவதாகவும் மற்றொன்று  தீவிரவாதக் கூட்டணியான பெரிக்காத்தானுடன் இணையப் போவதாகவும் பிரிதொரு கட்சி நடுநிலையாக இருக்கப் போவதாகவும் அரசல் புரசலாக பேசப்படுகிறது.

‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ எனும் அடிப்படையில் மற்ற இனத்தவர்கள் நம்மை பார்த்து கைக்கொட்டி சிரிப்பதில் கடுகளவும் வியப்பில்லை.

இந்தியர்கள் தங்களின் உரிமைகளை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கு புதிய அரசியல் கட்சி ஒன்று தேவை என பினேங் மாநில முன்னாள் துணை முதல்வர் இராமசாமி அண்மைய காலமாக முழங்கி வருவதைப்பார்த்தால் அவருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒரு கட்சி தொடக்கப்படும் போது இதைத்தானே எல்லாருமே சொல்கிறார்கள்! இதில் மதிமயங்க ஒன்றுமில்லை என்பதை இராமசாமி நன்கு உணர வேண்டும்.

மூன்று தவணைகளுக்கு துணை முதல்வராக இருந்த அவர் 4ஆவது முறையாக வாய்ப்புக் கிடைக்காததால் விரக்தியில் இதைனையெல்லாம் செய்கிறார் என்பதும் மக்களுக்கு தெரியாமல் இல்லை.

எனவே புதுக் கட்சி தொடங்குவோம், மக்களுக்கு சேவையாற்றுவோம், என ‘அரைத்த மாவையே அரைத்து’க் கொண்டு ஏற்கெனவே நொந்து போயிருக்கும் நம் சமுதாயத்தின் உணர்வுகளை மேலும் உரசிப் பார்த்து  அரசியல் நடத்த இராமசாமி முனைவது அவரது இக்கட்டான நிலையின் பிரதிபலிப்பாகும்.