இந்தியர்களுக்கு தேவை அமைச்சர் பதவி அல்ல, அரசியால் ஆளுமை!

இராகவன் கருப்பையா- மிக விரைவில் நம் அரசாங்கத்தில் அமைச்சரவை மாற்றம் ஒன்று நிகழும் என பரவலாக கணிக்கப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதமர் அன்வார்  உறுதியாக எதனையும் குறிப்பிடவில்லை என்ற போதிலும் துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் கோடி காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே அமைக்கப்பட்ட அமைச்சரவை வெகுசன மக்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆக்ககரமாக செயல்படவில்லை என்பது உண்மைதான்.

பல புதிய அமைச்சர்களின் தரம் குன்றிய செயல்பாடுகளினால் மக்கள் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. அன்வாரும் அதனை நன்கு உணர்ந்திருப்பார். இச்சூழலில்தான் அமைச்சரவை மாற்றம் குறித்த வதந்திகள் கசியத் தொடங்கின.

எந்த அமைச்சரை அன்வார் களையெடுப்பார், யாரை உள்ளே கொண்டு வருவார் போன்ற பல ஆரூடங்கள் வலுத்துவரும் வேளையில் அவசரக் குடுக்கைகள் போல சில வட்டாரங்கள் ம.இ.கா.வுக்கு பிரதமர் முழு அமைச்சர் பதவி கொடுக்கவிருக்கிறார் என ஆர்பரிக்கத் தொடங்கிவிட்டன.

ம.இ.கா.வுக்கு முழு அமைச்சர் பதவி கொடுப்பதற்கு அன்வார் ஏன் முடிவு செய்துள்ளார் எனும் கூற்றுக்கு அந்த வட்டாரங்கள் எடுத்துரைக்கும்  காரணங்களும் கூட சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது.

அன்வார் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 11 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் துவண்டுக் கிடக்கும் நம் சமூகத்தின் நிலைப்பாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு மாற்றங்கள் ஏற்படவில்லை. இதனால் ஒற்றுமை அரசாங்கத்திற்கான இந்தியர்களின் ஆதரவு கணிசமான அளவு குறைந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அண்மையில் நடந்து முடிந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் இதன் விளைவுகள் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கும் இது தெரியாமல் இல்லை.

இந்நிலையை நிவர்த்தி செய்யும் பொருட்டு ம.இ.கா.வுக்கு அன்வார் ஒரு முழு அமைச்சர் பதவியையும் துணையமைச்சர் பதவி ஒன்றையும் வழங்கவிருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் உளறித்திரிகின்றன.

ம.இ.கா.வுக்கு முழு அமைச்சர் பதவி கொடுத்தால் இந்தியர்களின் ஆதரவு மீண்டும் தமது பக்கம் திரும்பும் என அன்வார் எண்ணினால் அது முற்றிலும் அறிவிலித்தனம்தான் என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் காலங்காலமாக இந்நாட்டில் நம் சமூகம் ம.இ.கா.வின் அமைச்சர் பதவிக்கா ஏங்கித் தவிக்கிறது? இந்திய சமூகத்தின் ஆதரவை பெருமளவில் இழந்துவிட்ட அக்கட்சிக்கு அரசாங்க பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மக்களிடையே எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. மாறாக அரசாங்கம் மீதான நம் சமூகத்தின் சினத்தை அது மேலும் அதிகரிக்கக்  கூடும்.

அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் அதிகமான இடங்கள், அரசாங்கத்துறையில் வேலை வாய்ப்புகள், இளைஞர்களுக்கு தொழில்துறை வாய்ப்புகள், தொழில் பயிற்சிகள், இன பாகுபாடற்ற சூழல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்குத் தேவையான முன்னெடுப்புகள், முதலியவற்றுக்காகத்தான் நம் சமூகம் அன்றாடம் ஏங்கித் தவிக்கிறது.

இக்குறைபாடுகளுக்கெல்லாம் தீர்வு பிறக்கும் என்றெண்ணிதான் ஒட்டு மொத்த சமூகமும் கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு பிளவுபடாத ஆதரவை வழங்கியது.

ஆக இதனை நிவர்த்தி செய்தால்தான் இந்தியர்களின் ஆதரவை அன்வார் மீண்டும் எதிர்பார்க்க முடியும். மாறாக அமைச்சரவை மாற்றத்தினால் மாய மந்திரம் ஏற்படாது.

எனவே மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உணர வேண்டும்.எனவே இந்திய சமூகம், இனவாத அடிப்படையில் அரசாங்கத்தில் நியமனங்களை பெற்றாலும், ஒரு இனம் என்ற வகையில், அது தனது அரசியல் ஆளுமையை பலப்படுத்த வேண்டும்.

ஆளுமை என்பது ஒரு சமூகத்தின் நீரோட்டமகும். அது ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகளும் அவை தோற்றுவிக்கும் தோரணநடத்தைகள், உணர்வுர்கள், மற்றும் சிந்தனைகளை குறிக்கிறது. அரசியல் ஆளுமையில் சமூகம் மையமாகிறது.