காந்தியின் இன்னா செய்யாமையின் பொருள் – கி.சீலதாஸ்

அக்டோபர் இரண்டாம் நாள் 1869ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியாவில் தமது ஆரம்பக் கல்வியை முடித்து, இங்கிலாந்து சென்று சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞரானார். இந்தியாவிலேயே சில காலம் வழக்குரைஞர் தொழில் செய்த காந்தியால் சிறப்பான இடத்தைப் பெற முடியவில்லை.

எனவே, அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று சட்டத் தொழிலில் சிறப்பான ஒரு நிலையை அடைந்தார். தென்னாப்பிரிக்காவில்தான் வன்செயலுக்கு எதிரான இயக்கம் உருவெடுக்க காரணங்கள் காணப்பட்டன. தமது நாற்பத்தைந்தாம் வயதில் இந்தியாவுக்குத் திரும்பிய காந்தி இந்திய அரசியலில் உற்சாகம் மிகுந்தவராகக் காணப்பட்டார். அதோடு வன்முறையற்ற கொள்கையைப் பரப்பத் தொடங்கினார்.

இந்தக் காலகட்டத்தில்தான் அவரின் வன்முறையற்ற கொள்கை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகப் பேசப்படுகிறது. அதே வேளையில், வன்செயலற்ற கோட்பாட்டைப் பரப்ப அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்  இந்தியச் சுதந்திரத்துக்கான ஆயுதமாகவும் மாறியது. மனித குலம் இம்சிக்கப்படக்கூடாது என்பதே அவரின் நோக்கமாக இருந்தது என்று சொல்லப்பட்டது.

அவரை மகாத்மா என்று போற்றாதவர்கள் எவருமில்லை, பிரிட்டனின் புகழ்மிகுந்த அரசியல்வாதியான சர் வின்ஸ்டன் சர்ச்சிலைத் தவிர. சர்ச்சிலுக்குக் காந்தியை முற்றிலும் பிடிக்காது.

இப்பொழுது காந்தி அடிகளைப் பற்றிப் பலவிதமான எதிர்மறை கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அவை யாவும் காந்தி அடிகளைப் போற்றும் தரத்தைக் கொண்டிருக்கவில்லை. அவரிடம் காணப்பட்ட குறைபாடுகளும் வெளிச்சப்படுத்தப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில்தான் அவரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. காந்தியைக் குறை கூறவோ, அவரின் கொள்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்துவது அன்று இக்கட்டுரையின் நோக்கம். வன்செயல் குறித்து அவர் சொன்ன கருத்து, வாழ்ந்த முறை இன்றளவும் பேசப்படுகிறது. அதைக் குறிக்கோளாகக் கொண்டு சுருக்கமான வடிவம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

காந்தியடிகளின் வாழ்க்கையில் பல்வேறு கருத்துக்கள், செயல்கள் ஆய்வுக்குரியவை. இந்தக் காலகட்டத்தில், இந்த நூற்றாண்டில் வன்முறையை ஒழிக்க இளையர் சமுதாயத்தின் பங்கு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே இந்த ஆண்டின் காந்தி ஜெயந்தியின் ஆய்வுப் பொருள். ஐக்கிய நாடுகளின் 15.6.2007ஆம் நாள் தீர்மானத்தின்படி மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் “அனைத்துலக வன்செயலற்ற” நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு மலேசிய காந்தி நினைவாரியம் மற்றும் இந்நாட்டு இந்தியத் தூதரகம் இரண்டும் இணைந்து காந்தியின் 154ஆம் பிறந்தநாளைத் தலைநகரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

மலேசியாவுக்கான இந்தியத் தூதர் B.N.ரெட்டி, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி நிலோய் பானர்ஜி, துணை அமைச்சர், செனட்டர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் பல நாடுகளின் தூதர்கள், நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டான் ஶ்ரீ நளினி பத்மநாதன், டத்தோ மேரி லிம், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி டான் ஶ்ரீ வி.சி. சார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது காந்தி ஜெயந்திக்கு முத்தாய்ப்பாக இருந்தது.

இந்தியத் தூதர் B.N.ரெட்டி தனது உரையில் அனைத்துலக வன்செயலற்ற நாள் என ஏற்றுக்கொள்ள ஏற்பட்ட இடர்பாடுகளை விளக்கினார். இந்நூற்றாண்டின் இளையச் சமுதாயத்தின் பொறுப்பு என்ன? அவர்களிடமிருந்து நாடு எதை எதிர்பார்க்கிறது என்பதை நினைவுபடுத்துவதாக இருந்தது.

இந்த நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஜெக மோகன் சிங் ராஜ்புட் சிறப்பு பேச்சாளராக வருகை தந்தார். அவரின் உலகில் வன்செயல் உலகுக்கு உதவாத ஒன்று என்பதை வலியுறுத்தியதோடு அது இன்றும் பலம்வாய்ந்த கருவியாக விளங்குவதைச் சுட்டிக்காட்டினார்.

இவற்றோடு அடுத்து மிகவும் முக்கியமானதும் சிறப்பாகவும் அமைந்திருந்தது டத்தோ அம்பிகா சீனிவாசனுக்குக் காந்தி நிறைவாரியத்தின் பொதுநல சேவை விருது. டத்தோ அம்பிகாவின் பொது சேவை நாடும் வையகமும் அறிந்த உண்மையாகும்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை அனைத்துலக வன்முறையற்ற நாள் என ஐக்கிய நாடுகள் கொண்டாட வேண்டுமென எடுத்த முடிவுக்குக் காரணம் என்ன என்பதை ஆய்ந்துப் பார்க்கும்போது உலகின் பல பாகங்களில் வன்முறை  தலைவிரித்தாடுவதைக் காணலாம். போர்களால் மட்டும்தான் வன்முறை வெளிப்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

வாழ்க்கையில் ஒவ்வொரு கோணத்திலும் வன்முறையின் கேவலத்தைக் காணலாம். வன்செயல் தனிப்பட்டவர்களின் குணம் என்று சொல்ல முடியாது. அவ்வாறு குறுகிய நோக்கத்துடன் பார்த்தால் வன்செயல் கூடாது என்ற கோட்பாட்டின் மகத்துவம் பொலிவிழந்துவிடும்.

சர்வதிகாரம் – புனித தன்மையைக் கொண்ட சுதந்திரம் அல்லது ஜனநாயகம் ஆகியவற்றின் பேரால் இழைக்கப்படும் கொடுமைகள் இறப்பில் முடிகின்றன, மக்கள் வீடற்ற நிலையைக் கண்டார்கள் என்று கவலையுடன் விளக்கினார் காந்தி அடிகள். அவர் கண்ட இன்னா விளைவிக்கும் தரத்தைக் கைவிட்ட கலாச்சாரத்தைத்தான் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

அரசு துறைகளில் கூட வன்முறை கலச்சாரம் ஓங்கி இருப்பதை நமக்கு வரலாறு புகட்டும் பாடம். பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இபுராஹிம் துன் மகாதீரால் துணைப் பிரதமர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டு, கைது செய்து காவலில் இருந்தபோது அன்றைய காவல்துறை தலைவர் அவரைக் கடுமையாகத் தாக்கி, காயம் ஏற்படுத்தியதை உலகமே கண்டது.

நம் நாட்டுக்கு அவமானம். இப்படிப்பட்ட கொடுமையான நடவடிக்கை இங்கு மட்டும் நடக்கவில்லையே! பல நாடுகளில் நிகழ்ந்தன, நிகழ்கின்றன. சாதாரண மனிதன் இத்தகைய கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவது சகஜமாகிவிட்டது.

கொங்கோவின் முதல் பிரதமர் பெட்ரிஸ் லுமும்பா எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பதை நினைக்கும்போது இன்று கூட அந்த வேதனை நீங்க மறுக்கிறது. அதைவிட கொடுமையான முறையில் கொல்லப்பட்டவர் கியூபாவின் வீரர் செகுவாரா. அரசுகள் நிகழ்த்திய கொடுமையான செயல்களின் பட்டியல் நீளமானது. அதை இங்கே கொண்டுவர இயலாது. ஆனால், வன்முறையைப் பேணாத அரசு துறை கிடையாது என்றால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

வன்முறை  என்றால் என்ன? அடித்து, உதைத்து, காயப்படுத்தி, கொலை செய்வது மட்டும்தானா வன்முறை என்ற தரத்திற்கு உட்பட்டது? இல்லை! வன்முறை என்றால் அது பலவிதமான நடவடிக்கைகளைக் கொண்டது என்று மக்கள் உணர வேண்டும்.

ஊழல் மலிந்து காணப்படுகிறது. இந்த நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளில் இதன் கொடுமை பரவிக் கொண்டிருக்கிறது. நம் அண்டை நாடான சிங்கையில் ஊலலுக்கு இடமில்லை என்று நாம் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. ஆனால், இன்று அங்கும் அது தனது கொடூரத்தை வெளிப்படுத்த தொடங்கிவிட்டது.

மனக்கேடான ஊழல் பழக்கத்திற்கு உடன்படுவோர் என்றைக்கு நாடு அவர்களுக்காக இயங்கவில்லை, நாட்டுக்காக அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை உணருகிறார்களோ ஊழல் ஒழிந்துவிடும் என்றார் காந்தி அடிகள்.

உண்மைதானே! ஊழலின் கொடுமையை, கேவலத்தை உணராத சமுதாயம் தானே வளர்ந்து வருகிறது. ஊழல் செய்வதால் மக்கள் பாதிப்படைகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் மறுக்கப்படுகிறது. அதுவும் வன்செயல்தானே! எண்ணத்தால் விளைவிக்கப்படும் வன்செயல் என்றாலும் என்ன தவறு?

இந்தக் காலகட்டத்தில் ஓர் இலக்கை அடையும் பொருட்டு வன்முறை  பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கலாச்சாரம் பலமடைந்து வருகிறது. அதுவும் வன்முறை  என்பதில் என்ன பிசகு?

எங்கெல்லாம் நியாயம், நீதி மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வன்முறை  கலாச்சாரத்தின் வலிமையைக் காணலாம். வன்முறை என்றால் கொலை, கடுமையான காயம் விளைவிப்பது மட்டுமல்ல பிற கலாச்சாரங்களை, மொழிகளை, சமுதாய நீதி மறுக்கப்படுவது, பொருளாதார நீதி மறுக்கப்படுவது சட்டத்தால் இழைக்கப்படும் அநீதிகளாகும்.

இவையும் வன்செயல் கொண்டவை என்றால் தகும். பிறரை, பிறரின் கலாச்சாரத்தை, மொழிகளை, பாரம்பரியத்தை அழிக்க முற்படுவதும் எண்ணத்தால் உருவாகும் வன்செயல். பிறருக்கு அநீதி நிகழும் வகையில் நடந்து கொண்டால் அதுவும் எண்ணத்தின் முடிவால் காணப்படும் வன்முறையாகும்.

புலால் உண்ணாமை மட்டும் அகிம்சை ஆகாது. எவ்வித கொடுமையையும் இழைக்காத வாழ்க்கை முறைதான் நமக்குக் தேவை. எனவே, இன்றைய இளையர் சமுதாயம் காந்தி அடிகள் கண்ட அகிம்ஸா கொள்கையை விரிவாக ஆய்ந்து அதன் ஆழமான பொருளை உணர்ந்து செயல்பட்டால் நாடு சுபிட்சமடையும். உலகம் அமைதியைக் காணும்.

இன்றைய உலகில் அமைதி இல்லை, மக்களுக்கு நிம்மதியும் இல்லை. அதைக் கெடுப்பவர்கள் வன்முறை கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நாம் நிம்மதியாக இருக்க வேண்டும், மற்றவர்களின் நிம்மதியற்ற நிலையைப் பற்றி நமக்கு கவலையில்லை என்பதும் வன்முறையே. அதைத் தவிர்க்க வேண்டும்.

வன்முறை கலாச்சாரத்தை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்துப் பார்ப்பதைவிட அதை விரிவாகக் காண வேண்டும். அதுவே இன்றைய இளைஞர்களின் பொறுப்பு.