அரசாங்க ஓய்வூதியம் கஜானாவை காலியாக்கிறது – பூனைக்கு மணி கட்டும் கதை

இராகவன் கருப்பையா – அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை மிச்சப்படுத்தலாம் என அண்மையில் சில பொருளாதார வல்லுனர்கள் செய்துள்ள பரிந்துரை அமலாக்கத்திற்கு வரக்கூடிய சாத்தியமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசாங்கத்தில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் வேலை செய்துள்ள ஒருவர், அவர் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதும் பெறுகிறார். அதே போல 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளவருக்கு அவருடைய இறுதி வருமானத்தில் 60% பணம் ஆயுள் முழுவதும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது..

இதுநாள் வரையில் அரசு வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளோருக்கு ஓய்வூதியம் வழங்க நம் அரசாங்கத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு மொத்தம் 30 பில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது. இத்தொகையானது நாட்டின் வரவு செலவு திட்டத்தில் ஏறத்தாழ 10% என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகை சன்னம் சன்னமாக அதிகரித்து எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வாக்கில், அதாவது இன்னும் ஏழே ஆண்டுகளில் 46 பில்லியனைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு காலக்கட்டத்தில் அரசாங்கத்திற்கு அது மிகப்பெரியதொரு சுமையாக அமையக் கூடும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆபத்தான சூழலை சமாளிப்பதற்கு இனி வரும் காலங்களில் அரசாங்க ஊழியர்களுக்கு ‘இ.பி.எஃப்’ எனப்படும் ஊழியர் சேமநிதி திட்டத்தை அமுல்படுத்துவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அண்மையில் பரிந்துரை செய்திருந்தார்.

ஆனால் இந்த யோசனைக்கு ‘கியூபெக்கஸ்’ எனப்படும் அரசு ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, “வேண்டவே வேண்டாம், நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என போர் கொடி தூக்கிவிட்டது.

கைரியின் அந்த பரிந்துரை அரசாங்கத்தில் தற்போது பணிபுரியும் யாரையும் பாதிக்காது. மாறாக அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அரசு பணியில் அமரும் ஊழியர்களுக்கு ஈ.பி.எஃப். திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என கைரி தெளிவுபடுத்திய போதிலும் கியூபெக்ஸின் பிடிவாதத்தில் தளர்வு இல்லை என்பது சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது.

அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள போதிலும் பொருளாதார  சூழலின் தேவைகளுக்கு ஏற்ப அதனை சீர்திருத்தம் செய்வதில் தவறில்லை.

ஈ.பி.எஃப். திட்டத்தோடு பொதுச் சேவை ஊழியர்களுக்கென விசேஷமான கட்டாய காப்புறுதித் திட்டம் ஒன்றையும் அமுலாக்கம் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். பணி ஓய்வு பெற்றவுடன் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை இது உறுதி செய்யும்.

எனினும் இத்தகைய யோசனைகள் எல்லாம் வெறும் ‘தண்ணீரில் எழுதிய கதை’யாக மறையக் கூடிய வாய்ப்புதான் அதிகமாக உள்ளது. ஏனெனில் வருங்கால அரசு ஊழியர்களுக்குதான் இந்த யோசனை எனும் போதிலும் நடப்பில் உள்ள பெரும்பாலோர் இதனை ஒரு மிரட்டலாகவே  கருதக் கூடும்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒட்டு மொத்த அரசாங்க ஊழியர்களின் வெறுப்புக்கு நடப்பு அரசாங்கம் ஆளாகும். இது ஒரு ஆபத்தான நிலைமை என ஆளும் கட்சியினருக்கும் நன்றாகவே தெரியும்.

நடப்பு ஓய்வூதியத் திட்டம் தொடருமேயானால் கூடிய விரைவில் அரசாங்கம் அதிக அளவிலான நிதிச் சுமையையும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ளும் சாத்தியம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ள போதிலும் அரசு ஊழியர்களின் கோபத்திற்கு ஆளாக அரசாங்கம் தயாராய் இருக்காது.

ஏனெனில் தேர்தலின் போது அரசு ஊழியர்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினால் என்னவாகும் என அரசியல்வாதிகளுக்கு மிகத் தெளிவாக தெரியும்.

இது அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் என்பதால் நாடாளுமன்றத்தில்தானே இதற்கு தீர்வுகாண முடியும்! ஆனால் அவை உறுப்பினர்களே மவுனம் காத்தால் இதற்கு என்னதான் தீர்வு?