விளையாட்டுத்தனமான மெர்டேக்கா காற்பந்து விளையாட்டு

இராகவன் கருப்பையா – தலைநகர் புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் இம்மாதம் 13-17-இல், பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற்ற மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டிகள் கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாத ஒரு கேலிக்கூத்தான ஏற்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியா, தஜிகிஸ்தான், மற்றும் மலேசிய பங்கு கொண்ட, 3 குழுக்கள் கொண்ட இந்த ஆண்டின் போட்டியில், ஒரே ஒரு ஆட்டத்தை மட்டும் மலேசியவுடன் விளையாடிய தஜிகிஸ்தான் கிண்ணத்தை வென்றது.

இந்தியா மற்றும் மலேசியா விளையாடிய போது, பந்தோடு மைதானத்தின் புற்களும் பறந்ததை ரசிகர்கள் வேடிக்கையில் ஒரு வேடிக்கையாக பார்த்தனர். கடந்த காலங்களில் ‘பெஸ்தா போலா மெர்டேக்கா’ என்று அழைக்கப்பட்ட இத்தொடர் இந்த முறை கடுகளவும் வசீகரமில்லாமல் அரங்கேறியது மலேசிய காற்பந்து ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான்.

நம் நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் முயற்சியில் கடந்த 1957ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்போட்டிகள் பிறகு 60ஆம் ஆண்டுகளிலும் 70களிலும் ஆசியாவின் தலைச்சிறந்த காற்பந்து போட்டிகளாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முக்கியமான காரணம் அச்சமயத்தில் நம் நாட்டு காற்பந்து குழுவின் தரம் ஆசிய நிலையில் முன்னணி வகித்த இதர நாடுகள் அஞ்சும் அளவுக்கு உயர் நிலையில் இருந்ததுதான் என்றால் அது மிகையில்லை.

கோல் காவலர் ஆறுமுகம், தற்காப்பு ஆட்டக்காரர்கள் சோ சின் ஆன், சந்திரன் (படம்1) மற்றும் சந்தோக் சிங், மத்திய திடல்  ஆட்டக்காரர்கள் ஷுக்கோர்  சாலே மற்றும் ஜமால் நாசிர், முன் வரிசையில் மொக்தார் டஹாரி (படம்2) மற்றும் தனபாலன் போன்ற திறன்மிக்க ஆட்டக்காரர்கள் மலேசியக் குழுவை ஆசியாவின் தலைச்சிறந்த குழுக்களில் ஒன்றாக மிளிரச் செய்தனர்.

1972ஆம் ஆண்டில் மலேசியக் குழு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றதை நாம் இங்கு அவசியம் நினைவுக் கூறத்தான் வேண்டும்.

அந்த காலக்கட்டதில் ஆண்டு தோறும் நடைபெரும் ‘பெஸ்தா போலா மெர்டேக்கா’ போட்டிகளில் தென் கொரியா, ஜப்பான், மொரோக்கோ, இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தவறாமல் கலந்து கொள்வது வழக்கம்.

ஏறத்தாழ 8 – 10 நாடுகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆசியா முழுவதும் பேசப்படும் அளவுக்கு மிகவும் விறுவிறுப்பாக அப்போட்டிகள் நடைபெறும்.

தலைநகர் மெர்டேக்கா அரங்கில் நடைபெரும் அப்போட்டிகளில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சர்வசாதாரணமாக மலேசியா வெற்றி கொள்ளும் எனும் விவரம் தற்போதைய இளைய தலைமுறையினர் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அந்நாடுகள் எல்லாம் தற்போது உலகக் கிண்ண இறுதி சுற்றுகள் வரையில் முன்னேறியுள்ள வேளையில் மலேசியா உலக தர வரிசையில் 134ஆவது இடத்தில் பரிதாபகரமாக  உறங்குகிறது.

இந்நிலையில் அண்மைய மெர்டேககா கிண்ண போட்டிகளில் மலேசியாவை பிரதிநிதித்த குழுவில் குறைந்தது 7 பேர் இறக்குமதி ஆட்டக்காரர்கள் – அதாவது அந்நிய நாட்டவர். இது ஒரு கேலிக்கூத்தான நிலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அனைத்துலக தர வரிசையில் 99ஆவது இடத்தில் உள்ள இந்தியாவும் 110ஆவது இடத்தில் உள்ள தஜிகிஸ்தானும் அப்போட்டிகளில் கலந்து கொண்ட இதர நாடுகளாகும். இஸ்ரேலுக்கும் ஹம்மாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் போர் வெடித்துள்ள நிலையில் பாலஸ்தீன் கடைசி நேரத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. அதன் காரணமாக ஒரு விளையாட்டில் கூட பங்கெடுக்காமல் தஜிகிஸ்தான் நேராக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

‘ஒப்புக்கு சப்பாணி’யைப் போல போட்டிகளை நடத்தாமல் பழைய மாதிரி அதிகமான குழுக்களை வரவழைத்து இந்த மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டிகளை மீண்டும் பிரபலப்படுத்துவது பற்றி மலேசிய காற்பந்து சங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இனபாகுபாடில்லாமல் முழுக்க முழுக்க உள்நாட்டு விளையாட்டளர்களுக்கு பயிற்சியளித்து பலமான ஒரு குழுவை அச்சங்கம் தயார் செய்ய வேண்டும்.

குறைந்த பட்சம் ஆசிய நிலையில் தனது புகழை மலேசியா மீண்டும் எட்டிப் பிடிப்பதற்கு இதுபோன்ற ஆக்ககரமான முன்னெடுப்புகள் அவசியமாகும். இல்லையேல் உலக தர வரிசையில் நம் நாட்டுக்கு மேலும் மோசமான சறுக்கல் ஏற்படுவதை  யாராலும் தடுக்க முடியாது.