இராகவன் கருப்பையா – பாலஸ்தீன மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க தயாராய் இருப்பதாக ‘யூனிடென்’ எனப்படும் தெனாகா நேஷனல் பல்கலைக்கழகம் செய்துள்ள அறிவிப்பு இத்தருணத்தில் கேலிக்கூத்தான ஒன்றாக உள்ளது.
இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான கல்வித் தவணைக்கு பதிவு செய்யும் புதிய பாலஸ்தீன மாணவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்படும் என அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நூர் அஸ்வான் செய்துள்ள அறிவிப்பு தற்போதைய சூழலுக்கு கொஞ்சம் கூட ஏற்புடையதாக இல்லை.
பாலஸ்தீனின் காஸா பகுதியில் உள்ள ஹம்மாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது உக்கிர போர் நிகழ்வது உலகறியும்.
இதனால் காஸாவின் 2.2 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்போது இடம் பெயர்ந்து ஊண் உறக்கமின்றி குடிநீர் கூட இல்லாமல் பரிதாபகரமான சூழலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு அனைத்துலக நிலையில் உதவிகள் குவிகின்றன போதிலும் ஒரே வழியான எகிப்து நாட்டின் எல்லை நகர் ராஃபா வழியாக நிறைவாக உதவிகள் அங்கு சென்று சேர்வதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.
இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் மலேசியாவும் பலதரப்பட்ட உதவிகளை அங்கு அனுப்ப பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாலஸ்தீனர்களுக்கு அவசரமாக தேவைப்படும், அவர்களுக்கு பயனான பொருள்களை மட்டும் அனுப்புவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் அன்வார் சில தினங்களுக்கு முன் ஆலோசனை வழங்கியதும் நாம் அறிந்ததே.
காஸாவுக்கு வழக்கமாக அனுப்பபடும் எரிபொருள், குடிநீர், மின்சாரம் மற்றும் உணவு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருள்களைஇஸ்ரேல் தற்போது நிறுத்திவிட்டதால் அங்குள்ள மக்கள் சொல்லொன்னா துயருக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே குறைந்த பட்சம் அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் உணவு பொருள்கள், மருந்து வகைகள் மற்றும் இதர உடமைகளை திரட்டி அங்கு அனுப்புவதற்கான முயற்சிகளை ‘யூனிடென்’ மேற்கொண்டிருந்தால் பாராட்டத்தக்க ஒன்றாக அமைந்திருக்கும்.
ஆனால் ‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பதை போல’ இந்த இக்கட்டான சூழலில் உபகாரச் சம்பளம் பற்றி பேசுவது கோமாளித் தனமாக உள்ளது. இந்த அறிவிப்பை கேட்டு பாலஸ்தீன மாணவர்கள் ‘யூனிடென்’னுக்கு வெளியே வரிசை பிடித்தா நிற்பார்கள்? அல்லது பட்டாஸ் வெடித்து கொண்டாடுவார்களா? ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தற்போதைய சூழலுக்கு சம்பந்தமே இல்லாத ஒன்றை பற்றியா பேசுவது?
உயர் கல்வி கற்றிருந்தும் சிலருடைய அறிவிலித்தனத்திற்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்ரேல் – ஹம்மாஸ் போரில் நம் அரசாங்கம் கொண்டிருக்கும் கொள்கைக்கு ஏற்பதான் இந்த முன்னெடுப்பு என ‘யூனிடென்’ அறிவித்துள்ள போதிலும், நடப்பு சூழலுக்கு இது துளியளவும் ஏற்புடையதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மலேசியாவில் தற்போது 580 பாலஸ்தீனர்கள் வசிப்பதாக அகதிகளுக்கான ஐ.நா.வின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ‘யூனிடென்’னின் அறிவிப்பு இவர்களுக்கா அல்லது காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கா என்று தெரியவில்லை.
அந்த அறிவிப்பு இங்கு உள்ளவர்களுக்குதான் என ‘யூனிடென்’ சமாதானம் கூற முற்பட்டாலும், இங்குள்ள பாலஸ்தீனர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கினால் காஸாவில் அவதிப்படுவோரின் போர்கால இன்னல்கள் தீர்ந்துவிடுமா? எது எப்படியோ இது உபகாரச் சம்பளத்திற்கான நேரம் இல்லை என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, போதுமான மதிப்பெண்களுடன் சிறப்பு தேர்ச்சி பெற்றும் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காமலும் உபகாரச் சம்பளம் கிடைக்காமலும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் நம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற மாணவர்களின் அவல நிலை இவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.