சமய விவகாரங்களுக்கான அமைச்சர் எல்லா மதங்களையும் கவனிப்பாரா?

இராகவன் கருப்பையா – நம் நாட்டின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் முஹமட் நயிம் மொக்தார் இஸ்லாம் மதத்திற்கு மட்டும்தான் அமைச்சரா அல்லது இங்குள்ள அனைத்து சமயங்களும் அவருடைய பார்வையின் கீழ் வருகிறதா என்று தெரியவில்லை.

அவருடைய அமைச்சர் பொறுப்பு இதர அமைச்சுகளைப் போல் தனியாக இல்லாமல்  பிரதமர் இலாகாவின் கீழ் வருகிறது. அதே போல சட்டத்துறை அமைச்சர் அஸ்லினாவும் சபா, சரவாக் விவகாரங்களுக்கான அமைச்சர் அர்மிஸானும் பிரதமர் இலாகாவின் கீழ்தான் உள்ளனர்.

முஹமட் நயிம் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக சமய விவகாரங்களுக்கான அமைச்சர் என்று பொதுவாகத்தான் அழைக்கப்படுகிறார். எனவே இந்நாட்டில் உள்ள எல்லா மதங்களுக்கும்  அவர் பொறுப்பு வகிக்கிறார் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் இந்நாட்டிலுள்ள பல்லினங்களின் வெவ்வேறு சமயங்களையும் அவர் கவனிப்பதாகத் தெரியவில்லை. அப்படியென்றால் இந்து மதம், கிருஸ்துவ மதம், புத்த மதம் போன்ற இதர மதங்கள் தொடர்பான விவகாரங்களை யார்தான் கவனிப்பது?

உதாரணத்திற்கு தைப்பிங் வட்டாரத்தில் உள்ள மாத்தாங் பகுதியில் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு கோயில் சிலை உடைப்பு சம்பவத்தை எந்த அமைச்சர் கண்டித்து பேசினார் என்று தெரியவில்லை.

அச்சம்பவத்தில் ஒரு இளைஞர் கோயிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்தது மட்டுமின்றி வாசலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தையும் சேதப்படுத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டன.

சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்பது நமக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது எனும் போதிலும் இத்தகைய சம்பவங்கள் இன்னமும் ஒரு தொடர் கதையாகவே உள்ளது வேதனையாகவும் உள்ளது.

கோயில் உள்ளே உள்ள சிலைகளினால் இப்படிப்பட்ட ஜென்மங்களுக்கு என்ன கேடு விளைகிறது என்பதுதான் இன்னமும் குழப்பமாக உள்ளது.

பல வேளைகளில் ‘புத்தி சுவாதீனம் இல்லாமல் செய்துவிட்டார்’ என முடிவு செய்யப்படுவதால் தண்டனையில் இருந்து அவர்கள் தப்பிவிடுகின்றனர். இதுபோன்ற முடிவுகளை விசாரணைக்குப் பிறகு காவல் துறையினர் சுயமாக செய்கின்றனரா அல்லது முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறதா தெரியவில்லை.

இத்தகைய சம்பவங்களை அனைத்துத் தரப்பினரும் சட்ட ரீதியாகத்தான் அணுக வேண்டுமே தவிர இன ரீதியாகவோ சமயத்தை தொடர்பு படுத்தியோ தீர்வுகாண முற்படக்கூடாது.

எனவே இந்து மத நலன்கள் தொடர்பான விவரங்களை கவனிப்பதற்கு தெளிவான ஒரு அமைச்சு இல்லாத நிலையில் குறைந்த பட்சம் மலேசிய இந்து சங்கமாவது இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராமல் இருப்பதற்கான யோசனைகளை ஆராய வேண்டும்.

இந்து ஆலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மானியங்களை வழங்குகின்ற போதிலும் சமயம் தொடர்பான இதர விஷயங்களை கவனிப்பதற்குத் தேவையான முக்கியமான முன்னெடுப்புகளை அச்சங்கம் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 1978ஆம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் நிகழந்த கோயில் சிலை உடைப்பு சம்பவங்களையும் அதனால் ஏற்பட்ட கசப்பான விளைவுகளையும் நாம் எல்லாருமே ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்வது அவசியமாகும்.