காஸாவுக்கு ஆதரவு காட்ட  பள்ளி பிள்ளைகளை துப்பாக்கி ஏந்த சொல்வதா?

இராகவன் கருப்பையா –பாலஸ்தீனின் காஸா முனையில் மூண்டுள்ள போரினால் கடுமையான துயருக்கு ஆளாகி அவதிப்படும்  அந்நாட்டு மக்களுக்கு பரிவுகாட்டி அவர்களுக்கு பல வகையிலும் உதவிக்கரம் நீட்ட அனைத்துலக சமூகம் முனைப்பு காட்டி வருகிறது.

அவ்வகையில் நாமும் மனிதாபிமான அடிப்படையில் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்து வரும் வேளையில் நமது கல்வி அமைச்சு கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக செயல்பட்டு பொது மக்களின் சினத்திற்கு ஆளாகியுள்ளது.

இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து ஒரு வார காலத்திற்கு நாடளாவிய நிலையில் உள்ள அனைத்து அரசாங்க பள்ளிகளிலும் இதர கல்விக் கூடங்களிலும் ‘பாலஸ்தீன ஒற்றுமை வாரம்’ அனுசரிக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்தது.

இதெல்லாம் பள்ளி பிள்ளைகளுக்கு தேவையில்லாத ஒன்று. அவர்களுடைய மனங்களை குழப்ப வேண்டாம். அவர்கள் கல்வியில் கவனம் செலுத்த விட்டுவிட வேண்டும் என எண்ணற்ற அரசு சாரா அமைப்புகளும் பல்வேறு இயக்கங்களும் மன்றாடி கேட்டுக் கொண்ட போதிலும் அதனை கடுகளவும் கவனத்தில் கொள்ளாத கல்வியமைச்சு பிடிவாதமாக அத்திட்டதை அமல் செய்தது.

இந்த ஒற்றுமை வாரம் 29ஆம் தேதிதான் தொடங்கப்பட வேண்டும் எனும் போதிலும் ஒரு சில பள்ளிகள் ஆர்வக் கோளாறினால் 27ஆம் தேதியே பிள்ளைகளின் கவ்வியை பாழாக்கி அவர்களுக்கு போர் பயிற்சி கொடுப்பது போலான நிகழ்ச்சிகளை தொடங்கிவிட்டனர்.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கூட பாலஸ்தீன சின்னங்களுடன் போலி துப்பாக்கிகளை ஏந்தி போரில் சுடுவதைப் போலான நிகழ்ச்சிகளை படைத்து கூத்தடிப்பதை பல காணொளிகள் அம்பலப்படுத்தியுள்ளன.

இந்த அக்கிரமத்தை ஆசிரியர்கள் புரியும் முட்டாள்தனம் என்று சொல்வதை விட வேறு எப்படிதான் வர்ணிப்பது என்று தெரியவில்லை. ஒற்றுமை வாரத்தின் வழி பள்ளி பிள்ளைகளிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்  அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கக் கூடும். நிச்சயம் இப்படிபட்ட கொடூரமான வன்முறை தொடர்புடைய சிந்தனைகளை பிள்ளைகளின் மனங்களில் விதைப்பதற்காக இருக்காது.

பிரிதொரு சம்பவத்தில், தரையில் விரிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் நாட்டு கொடியின் மேல் பிள்ளைகளை ஏறி மிதிக்கச் சொல்லி பார்த்து மகிழ்ந்தார்கள். இப்படியா சிறுவர்களுக்கு நன்னெறி பண்புகளையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுப்பது? இப்படிபட்ட அட்டூழியங்கள் எல்லாம் நம் நாட்டில்தான் நடக்கிறது என்பதை நினைத்து பார்க்க நமக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது.

இது தொடர்பான எண்ணற்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில்  அதிக அளவில் பகிரப்பட்டு நாடு தழுவிய நிலையில் ஆயிரக்கணக்கானோரின் கண்டனத்திற்கு வழி வகுத்துள்ளது மட்டுமின்றி பிரதமர் அன்வாரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

இத்தகைய செயல்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என அன்வார் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து கல்வியமைச்சும் தற்போது கடுமையாக சாடியுள்ளது. பிரதமர் தலையிடும் வரையில் அமைச்சும் மவுனமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

தீவிரவாத சிந்தனைகளை தூண்டுவது மற்றும் போலி துப்பாக்கிகளை ஏந்துவது போன்ற நிகழ்வுகளுக்கு நிச்சயம் அனுமதி இல்லை என அமைச்சு கண்டனம் தெரிவித்த போதிலும் ‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ எனும் நிலைதான் இப்போது.

ஏனெனில் சம்பந்தப்பட்ட காணொளிகள் அநேகமாக வெளிநாடுகளில் கூட தற்போது பரவி, நம் நாட்டின் நற்பெயருக்கு அநாவசிய களங்கத்தை ஏற்படுத்த வித்திட்டிருக்கும். பிறகு என்ன, நம் நாட்டை பாராட்டவா போகிறார்கள்?

இதுதான் மலேசிய கல்வியமைச்சின் லட்சணமா என பிற நாடுகள் கேலி பேசும் அளவுக்கு இந்த ‘பாலஸ்தீன ஒற்றுமை வாரம்’ அமைந்துவிட்டது வேதனையான ஒன்று. ஏற்கெனவே நம் நாட்டின் கல்வித் தரம் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமாக உள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும்.

முதற்கண் இப்படியொரு ஒற்றுமை வாரத்தை கல்வியமைச்சு தொடங்கியிருக்கவே கூடாது. எனென்றால் பிறகு ‘ரஷ்யா – யுக்ரேன் போருக்கான ஒற்றுமை வாரம்’, ‘இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான காஷ்மீர் எல்லைப் போருக்கான ஒற்றுமை வாரம்’ என இது ஒரு தொடர்கதையாகவே மாறிவிடும்.

இதற்கிடையே ‘பாலஸ்தீன ஒற்றுமை வாரம்’ போன்ற தேவையில்லாத நிகழ்வுகளுக்கு பிள்ளைகளை உட்படுத்த போவதில்லை என சரவாக் மாநில அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து இதிலிருந்து ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.