கி.சீலதாஸ்,- முரண்பாடுகள்தான் மனுதனின் இயக்குகின்றன என்பதை அலசுகிறார் கட்டுரையளர்
இவ்வையகத்தில் எங்கெல்லாம் மனிதன் கால் பதித்தானோ, வாழ்ந்தானோ அங்கெல்லாம் வேற்றுமையை விதைப்பதில்தான் முனைப்பாக இருந்தான். பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும் அவனின் பழைய, பழக்கமாகிவிட்ட கசப்பான வேற்றுமையைப் போற்றி வளர்க்கும் குணம் மாறவில்லை; மாறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பதைக் காட்டிலும் அதை எளிதில் அசைக்க முடியாத உயர்ந்த இடத்தைப் பெற்றுவிட்டது என்பதே காலத்தின் நினைவுறுத்தல்.
பிறரை அடக்கி வாழ வேண்டும் என்ற பேராசை பலமாக இருந்த போதிலும் பிறர் ஒரு நல்ல நிலையை அடைந்துவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் தாராள மனப்பக்குவம் எக்காலத்திலும் இருக்கவில்லை என்பது மட்டும் தெளிவாக இருக்கிறது. பிறரின் உழைப்பில் காணப்பெறும் நன்மைகளைத் தங்களுக்கென அனுபவித்த ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
ஒரு எல்லையை அல்லது ஒரு நாட்டை விட்டு வேறு இடத்திற்குச் சென்றவன் தனது சுயநலனில் கரிசனம் கொண்டவனாகக் காணப்பட்டான். பிறரின் நிலங்களை, பொருள்களைச் சூறையாடிய ஆக்கிரமிப்பாளன் தனது, தன்னைச் சார்ந்தோரின் நலனில் மட்டும்தான் குறியாக இருந்திருக்கிறான்.
ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் அடிமைகளாகக் கருதப்பட்டு யாதொரு உரிமையும் கொண்டிருக்கவில்லை. அதே சமயத்தில், ஒரு நிலத்தின் அல்லது நாட்டின் உரிமையாளர்கள் அல்லது உரிமை கொண்டாடியவர்கள் தங்கள் உடைமைகளை இழந்து, தங்களின் நிலத்தில் இருந்து துரத்தப்பட்ட வரலாறு ஏராளம். இவையாவும் சாதாரணமாக நிகழ்ந்தவை.
இன்று கூட அன்றாட வாழ்க்கைகளில் பிறரின் உழைப்பில் நிம்மதி காண்போரின் எண்ணிக்கை கூடி வருகிறது. சொந்த நாட்டின் வளத்தைச் சூறையாடுவதிலும் கவனம் மிகுந்தே காணப்படுகிறது.
இதை நமக்கு உணர்த்த போதுமான வரலாற்று சான்றுகள் உள்ளன. எனவே, மனிதன் என்பவன் மன நிறைவற்றவனவாக வாழ்ந்தான். அது அவனின் தனி பண்பாகவே வாழையடி வாழையாக நிரந்தரமாகிவிட்டது. இப்படிப்பட்ட அடக்குமுறை பண்பாட்டைத் தனக்குள்ளேயே வளர்த்துக் கொண்ட மனிதன் தமது ஆதிக்கத்துக்கு எந்தவித தடங்கலும் முடக்கமும் நிகழக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தான், இப்பொழுதும் இருக்கிறான்.
தமது ஆட்சிக்கு, தமது ஆட்சிமுறைக்குச் சவால் வருமானால் எவ்வித மனிதநேய உணர்வுமின்றி சவால் விட்டோரைத் துவசம் செய்யத் தயங்க மாட்டான். ஆக்கிரமிப்பவனிடமிருந்து துளி அளவு கருணையைக் காண முடியாது. அவதியுறுவது சாதாரண மக்கள்.
ஆகமொத்தத்தில், எங்கெல்லாம் மனிதன் வாழ்ந்தானோ அங்கெல்லாம் பிரச்சினைகள் எழாத நேரமே இல்லை. அப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கிளப்பியவர் யார்? அதற்கான காரணம் என்ன?
பிரச்சினைகள் எனும்போது அவை மனித உறவைச் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். எனவே, ஒரு கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அங்கே பிரச்சினை இருக்க வேண்டும். மக்களிடையே பிரச்சினைகள் இருக்க வேண்டும்; பிரச்சினைகள் இல்லையென்றால் அமைதி நிலவும்.
நிலவும் அமைதியானது ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பிடிக்காத நிலையாகும். மக்கள் பிரச்சினைகளோடு சிரமப்பட வேண்டும். அவ்வாறு சிரமத்தில் இருக்கும் போது அதிகாரத்தில் இருப்போர், அதிகாரத்தைக் கைபற்றியவர்கள், பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று கூறுவார்கள். உண்மையில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைவிட, அது எக்காலத்திலும் நீடிக்க வேண்டும் என்பதில்தான் நாட்டமெல்லாம்.
சமரசம் செய்வதாகக் கூறுவோரின் குறிக்கோளாக மாறிவிடுகிறது. ஏன்? மக்கள் தங்கள் சாதாரண பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டுவிட்டால் அவர்கள் சமாதானமாக, நிம்மதியாக வாழ்வார்கள். இந்த அமைதி நிலை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒவ்வாத நிலையாகும். பிரச்சினைகள் நீடித்தால் தான் அதை அரசியலாக்குவோரின் வாழ்வு செம்மையாக இருக்கும்.
உதாரணத்துக்கு, மூன்று கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றன. ஒரு கட்சி மற்ற இரு கட்சிகளைக் காட்டிலும் அதிக இடங்களைப் பெற்றுள்ளது. மற்ற இரு கட்சிகளும் வெற்றி பெற்ற போதிலும் அவை அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகிவிடுகின்றன. இந்த இரு சின்ன கட்சிகளும் கருத்து வேறுபாட்டின் காரணமாகச் சண்டையிட்டுக் கொண்டால் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சிக்குக் கொண்டாட்டம் தான். அந்த இரண்டு சிறுபான்மை கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதில் காலத்தை விரயமாக்குவார்கள்.
பெரும்பான்மை கட்சி அந்த நிலையில் சுகம் காணும். ஏன்? அந்த இரு தரப்பினரும் ஒன்றுபட்டால் பெரும்பான்மையினரிடம் பல நல்ல கோரிக்கைகளை முன்வைக்கலாம். அது ஆபத்தான நிலை எனப் பெரும்பான்மை கட்சி நினைத்துச் செயல்படும்.
அதுபோலவே மக்கள் பிரச்சினையற்றவர்களாக இருந்தால் ஆட்சியில் இருப்பவர்களிடம் துணிந்து, நியாயமான கோரிக்கைகளை வைக்கலாம். அவற்றிற்காகப் போராடி வெற்றி காணலாம். பங்காளி கட்சிகளாக இருந்தாலும் அவை பிரச்சினையின்றி இயங்கக்கூடாது. பிரச்சினைதான் முக்கியம். அது வாழ வேண்டும்.
இந்த முறைதான் காலங்காலமாக நடந்து வந்த அதிகாரத்தில் இருப்போரின் ராஜதந்திரம். அவர்கள் தங்கள் வயிற்றைக் கழுவிக் கொள்ள உதவுவது யார்? சாதாரண மக்கள்!
மக்கள் சிந்திப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஆட்சியில் இருப்போர் மிகுந்த கவனத்துடன் இருப்பர். மக்கள் தங்கள் பிரச்சினைகள் ஏதோ தானாக வந்தது என்று நம்பி மோசம் போவார்கள். உலகத்தில் பவவிதமான அரசியல், சமயக் கோட்பாடுகள் இருக்கின்றன.
எந்த ஒரு கோட்பாடும் வளர்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தாம் சார்ந்திருக்கும் கோட்பாடுதான் உண்மையானது மற்றவை போலியானது, பொய்யானது என்ற மூர்க்க குணத்தைக் கையாளும்போது அதற்கு ஆதரவாகத் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதைக் காணலாம்.
பிரச்சினைகள் துளிர்விட வேறு காரணமே தேவையற்றதாகிவிடுகிறது. சமயத்தோடு இத்தகைய சூழ்நிலையில் அரசியலை இணைப்பது அல்லது அரசு ஒரு சமயத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மற்ற சமயங்களை அழிக்க முற்பட்டால் பிரச்சினைகளுக்கு எந்தக் காலத்திலும் தீர்வு காண முடியாது.
உலகம் பற்பல வேறுபாடுகளைக் கொண்டிருப்பது கண்கூடு. பலவற்றை விசித்திரமானதும்; அதிசயத்தக்கதாக இருக்கும். சிலவற்றை நம்ப முடியாதவைகளாகவும் இருக்கலாம். இயற்கையும் பல வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை நாம் அறியாதது அல்ல. மாறுபடும் பருவக் காலத்தின் போது இயற்கையும் தனது மாறும் தரத்தை வெளிப்படுத்துகிறது. அதைக் கட்டுப்படுத்த முடியுமா? முடியாது.
மனிதனும் பல கோட்பாடுகளைக் கண்டவன். அவை வடிவம் பெற காரணமாகவும் இருந்தான். இவ்வாறு பல சமயக் கோட்பாடுகள், அரசியல் கோட்பாடுகள் என உலக மக்களைப் பிரித்துக் காண்பதில் தான் ஆர்வம் எல்லாம். மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக வாழ வழி காண வேண்டும் என்பதில் அல்ல அவர்களின் கரிசனம்.
அரசியல் பித்தர்கள், தங்களின் பித்தலாட்டத்தால் மனிதர்களின் நிம்மதியைக் கெடுக்கிறார்கள். சமயத்தின் பேரில் சிலர் உலக அமைதியையே கெடுத்து வருகிறார்கள்.
இவற்றிற்குக் காரணம் மனிதனே அன்றி வேறு எந்தச் சக்தியும் அல்ல. மனிதன் தன் சுயநலத்திற்காக நாட்டு மக்களின் நிம்மதியையும், உலக அமைதிக்குக் கேடு விளைவிக்கிறான். இதைத் திருத்துவது எப்படி? அரசியல்வாதிகள் திருந்துவார்களா? எல்லா சமயக் கருத்துகளும் மதிப்பளிக்கும் முதிர்ச்சியை எப்பொழுது பெறுவார்கள்? அவர்களின் முதிர்ச்சியான போக்கில்தான் உலக அமைதி பெறும் என்பது வெறும் கனவா?