பழுதான சுவாசக் கருவிகள், யாரையும் தண்டிக்க முடியாதா?

இராகவன் கருப்பையா – மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவிட் பெருந்தொற்றின் போது கொள்முதல் செய்யப்பட்ட சுவாசக் கருவிகளில்(வெண்டிலேட்டர்) பெரும்பாலானவை பயன்படுத்த முடியாத, பழுதானவை என்பது நமக்கு புதிய செய்தியல்ல.

கடந்த 2020ஆம் ஆண்டில் கொல்லைப்புறமாக நுழைந்து ஆட்சியை கைப்பற்றிய முஹிடின் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக அடாம் பாபா இருந்த போது இந்த முறைகேடு நிகழ்ந்திருக்கிறது.

நீண்ட நாள்களுக்கு முன்பே இது தொடர்பான விவரங்கள் வெளியான போதிலும் தற்போது நாடாளுமன்ற பொது கணக்கியல் குழு இவ்விவகாரம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதால் வெகுசன மக்களின் கவனத்தை இது மீண்டும் ஈர்த்துள்ளது.

இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் இந்த முறைகேடு தொடர்பாக யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதுதான்.

ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்கு  முன் கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது மொத்தம் 136 சுவாசக் கருவிகளை சுகாதார அமைச்சு கொள்முதல் செய்துள்ளது.

எனினும் அவற்றில் 28 கருவிகளை மட்டுமே அந்த சமயத்தில் பயன்படுத்த முடிந்தது. மீதமிருந்த 108 கருவிகள் பழுதானவை என்பதால் அவற்றை பயன்படுத்த முடியாமல் போனது. இதனால் அரசாங்கத்திற்கு 13 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பண இழப்பு ஒரு புறமிருக்க, கொள்முதல் நடவடிக்கைகளில் குளறுபடிகள் இல்லாமல் முறையான கருவிகளை பெறுவதில் கவனம் செலுத்தியிருந்தால் ஆயிரக்கணக்கானோரை காப்பாற்றியிருக்கலாம்.

கோவிட் பெருந்தொற்றினால் நம் நாட்டில் 36,300கும் மேற்பட்டோர் பரிதாபமாக மரணித்தனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மக்கள் தொகையின் விகிதாச்சாரபடி பார்த்தால் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

நாடு தழுவிய நிலையில் உள்ள எண்ணற்ற அரசாங்க மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகளின் பற்றாக்குறையினால் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை அச்சமயத்தில் காப்பாற்ற முடியாமல் போனது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

திறமையற்ற ஒரு பிரதமரையும் தகுதியற்றதொரு சுகாதார அமைச்சரையும் கொண்டு அந்த சமயத்தில் நம் நாடு பட்ட அவலம் சொல்லிலடங்காது. அச்சமயத்தில் அவர்களுடைய கவனமெல்லாம் அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த பதவிகள் பறிபோகாமல் இருப்பதை பார்த்து கொள்வதில்தான் இருந்தது.

எந்த ஒரு அதிகாரத்துவ பத்திரமும் இல்லாமல் அந்த கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் அந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது நமக்கெல்லாம் அதிர்ச்சி தகவல்தான்.

இதுபோன்ற கருவிகள் தொடர்பாக எவ்வித அனுபவமும் இல்லாத ஒரு தனியார் மருத்துவ நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு ஆவனமும் இல்லாமல் மலிகைக்கடையில் மிட்டாய் வாங்குவதைப் போல மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கைதான் நமக்கு வேடிக்கையாக உள்ளது.

இதனை, ‘சட்டத்தில் உள்ள ஓட்டை’ என்பதா, கயவர்களின் புத்திசாலித்தனம் என்று கூறுவதா தெரியவில்லை. காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய அப்பாவிகளின் உயிர்கள் பலியானதும் மக்களின் வரிப்பணம் கரியானதும்தான் மிச்சம்!

இந்த விவகாரத்தை இப்படியே மூடி மறைக்காமல், இது சார்பான விசாரணையை மேற்கொள்ள என்ன தயக்கம் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.