வேஷ்டி கட்டி பட்டமளிப்புக்கு சென்ற மாணவர்கள்

இராகவன் கருப்பையா – பேராக், தஞ்சோங் மாலிமில் உள்ள ‘உப்சி’ எனப்படும் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு இந்தியப் பாரம்பரிய முறைப்படி வேஷ்டியோடு சென்ற மூன்று மாணவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

அந்தப் பட்டமளிப்பு விழாவிற்கான அதிகாரத்துவ உடைகளின் பட்டியலில் ‘வேஷ்டி’ இல்லாததால் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இளநிலைக் கல்வியியல்(தமிழ் மொழி)  துறையில் பட்டம் பெற்ற விண்ணமுதன் எனப்படும் சரண் சுக்லாம் ஆத்மலிங்கம் கூறினார்.

இதனால் கடைசி நேரத்தில்  உடைகளை மாற்றிப் பிரதான மேடைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதே நிலைக்கு ஆளான மகிழன் எனப்படும் நவீன் கணேசனும் இனியன் எனப்படும் லோகராஜ் மோகனும் குறிப்பிட்டனர். எனினும் மேடையை விட்டுக் கீழே இறங்கியவுடன் மீண்டும் வேஷ்டியணிய அவர்களுக்குத் தடையில்லை.

தனியார் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் வேஷ்டி கட்டி மேடையேற அனுமதி வழங்கப்படுவதால் தங்களுக்கும் அனுமதி கிடைக்கக் கூடும் என்று தாங்கள் எண்ணியதாகச் சரண் மேலும் கூறினார்.

இவ்விவகாரம் அரசாங்க நடைமுறை என்பதால் கல்வியமைச்சில் இதற்கான மாற்றங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாது. அதிகாரப்பூர்வ உடைகளின் பட்டியலில் வேஷ்டியையும் இணைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எனினும் ‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்பதுதான் கேள்வி.

குடும்பத்தில் மூத்த பிள்ளையான சரணின் பெற்றோர்கள் இருவருமே தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். அவருடைய  இரு இளைய சகோதரர்களும் உயர்கல்வி நிலையங்களில்  பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தமிழ் கல்வியியலில் முதுநிலை பட்டப்படிப்பை(Master’s of Education in Tamil Language) தொடரும் இவர், அதே துறையில் முனைவர் பட்டம் பெற இலக்கு கொண்டுள்ளார்.

தாமும் முனைவர் பட்டம் வரையில் கல்வியைத் தொடர்ந்து தமிழ்க்கல்வி சார்ந்து பணிபுரிய எண்ணியுள்ளதாகக் கூறுகிறார் நவீன் கணேசன். ஏழு பேர் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 3ஆவது பிள்ளையாகப் பிறந்த இவர்தான் அக்குடும்பத்தின் முதல் பட்டதாரி. தற்போது அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கல்வியில் முதுநிலை படிப்பை நவீன் மேற்கொண்டுள்ளார்.

இளநிலைக் கல்வியில் பட்டம் பெற்ற லோகராஜ் மோகனும் இவர்களைப் போலவே தமிழ் கல்வியில் முதுநிலை கல்வியைத் தொடர இலக்கு கொண்டுள்ளார். இவருடைய இரு மூத்த சகோதரிகளும் பெற்றோர் மோகன் – சாந்தகுமாரி, ஆகிய நால்வருமே தனியார் துறையில் பணிபுரிகின்றனர். குடும்பத்தில் இவர் மட்டும்தான் பட்டதாரி.

இதற்கிடையே வேஷ்டியோடு சென்ற ஷர்வின்ராஜ் கன்னியப்பன் எனும் மாணவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. சுமார் 6 மாதங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் வலது காலில் ஏற்பட்ட கடுமையான காயங்களினால் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மேடைக்குச் சென்றார்.

காலில் போடப்பட்டிருக்கும் கட்டினால் கால்சட்டை அணிய முடியாத பட்சத்தில் வேஷ்டி கட்டி மேடைக்குச் செல்ல ஷர்வின்ராஜிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

உயிரியல் துறையில் பட்டம் பெற்ற இவர், கன்னியப்பன் – வாசுகி தம்பதியரின் 4 பிள்ளைகளில் 3ஆவதாக பிறந்தார். இதே துறையில் அடுத்த ஆண்டு முதுகலை படிப்பைத் தொடர எண்ணம் கொண்டிருக்கும் ஷர்வினின் இலட்சியம் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆவது.