சமூக ஒப்பந்தக் கொள்கை, ஏழை இந்தியர்களுக்கும் தேவை

இராகவன் கருப்பையா – பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது, உயர் கல்வி நிலையங்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையில் நிலவும் குளறுபடிகள் குறித்து பேசிய மாணவர் நவீன் முத்துசாமியின் காணொளி நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘சமூக ஒப்பந்தம்'(Social Contract) எனும் பெயரில் இல்லாத ஒன்றை உருவாக்கி, ஏற்றத்தாழ்வான இட ஒதுக்கீட்டு முறையில் நம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற மாணவர்கள் இடம் கிடைக்காமல் படும் அவதி குறித்து தெளிவாகவும் துணிச்சலாகவும் நவீன் என்ற மாணவர் எடுத்துரைத்தார்.

மலாக்காவில் உள்ள ‘யுத்தெம்'(UTeM) எனப்படும் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’ துறையில் பயின்ற நவீன் சிறந்த மாணவராக தேர்வு பெற்றார்.

அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது “இவ்விவகாரம் குறித்து மேடையில் பேச வேண்டாம்” என ஏற்கெனவே அவருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இருந்த போதிலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், பழுத்த அனுபவம் வாய்ந்த ஒரு சமூக ஆர்வலரைப் போல நறுக்கென விஷயத்தை அவர் பேசி முடித்தார்.

இதில் விசித்திரம் என்னவென்றால் நவீன் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளியாகி தொலைக்காட்சி செய்திகளிலும் கூட ஒளிபரப்பப்பட்ட பிறகுதான் நம் அரசியல் தலைவர்களுக்கு புதிய விழிப்பு நிலை ஏற்பட்டது.

‘கோட்டா'(Quota) எனப்படும் ஒரு ஒதுக்கீட்டு வழிமுறை1970-இல் உருவாக்கப்பட்டது. 1969 மே-23 இனகலவரதிற்கு பிறகு சமூக சீரமைப்பு என்ற புதிய பொருளாதார கொள்கையின் கீழ் இது உருவாக்கப்படது. இதன் வழி கீழ்மட்ட நிலையில் பூமிபுற்றாக்கள் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில், அவர்களுக்கு விசேச சலுகைகள் வழங்க அரசமைப்பு சட்டங்கள் மாற்றப்பட்டன. அதன் வழி சமூக பொருளாரம் என்பது இன பாகுபாடு அற்ற நிலையில் அனைவரும் பயன் பெற வேண்டும்  என்பதுதான் கொள்கை.

நாளடைவில் அதுவே நடைமுறையாகி இப்போது அந்த கொள்கை அதன் இலட்சியத்தை அடைந்திருந்தும் இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஆனால் அது முழுக்க முழுக்க பூமிபுற்றாக்களுகுதான்.

அந்த காலக்கட்டத்தில் அந்நடைமுறை ஏற்புடையதாக இருந்திருக்கக் கூடும். ஆனால் தற்போதைய சூழலில் அதிக அளவிலான நம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெறுகின்றனர் எனும் உண்மையை நாம் உணர வேண்டும்.

இது, நம் அரசியல் தலைவர்களுக்கும் தெரியாமல் இல்லை. “நானும் பேசினேன்” என்பதற்காக ஊர் மெச்சிக்க அவ்வப்போது பட்டும் படாமலும் கருத்துரைத்துவிட்டு காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் பாதிக்கப்படும் எண்ணற்ற மாணவர்கள் விரக்தியினால் அவதிப்படுவதை அவர்கள் கண்டு கொள்வதில்லை.

சில தினங்களுக்கு முன் பினாங்கு  மாநில ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நேத்தாஜி ராயர் இவ்விவகாரம் குறித்து அவையில் பேசினார். அது பற்றி வேறு யாரும் பேசினார்களா தெரியவில்லை.

நவீனின் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் ராயரின் முனைப்பு என்பதில் துளியளவும் ஐயமில்லை. கடந்த நவம்பர் மாதத்தில், 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன், இந்திய, சீன வாக்காளர்களை கவர்வதற்கு பிரதமர் அன்வார் எப்படியெல்லாம் பேசினார் என்பதை ராயர் சுட்டிக் காட்டினார்.

“இந்திய, சீன வாக்காளர்கள் அன்வாருக்கு 100 விழுக்காடு ஆதரவளித்தனர். ஆனால் ஏன் இன்னமும் இந்த அவலம்” என நாடாளுமன்றத்தில் அவர் கேள்வி எழுப்பினார்.

எனினும் இன்னும் ஓரிரு தினங்களில் இதுவும் கடந்து போகும், வழக்கம் போல மறக்கப்பட்ட சின்ன விஷயமாகிவிடும் – நவீனைப் போல இன்னொரு மாணவர் பொங்கியெழும் வரை,  அல்லது இன்னொரு மாணவர் இறக்கும் வரை!

அப்படியென்றால் யார்தான் இப்பிரச்சினைக்கு முறையான தீர்வு காண்பது? எப்போதுதான் நம் மாணவர்களின் இன்னல்கள் தீரும்? கவனிப்பார்களா நம் அரசியல் தலைவர்கள்?