இராகவன் கருப்பையா – இந்நாட்டின் பிரதமராவதற்கு வரிசை பிடித்து நிற்போரை ஒரு நீண்ட பட்டியலிட்டால் 100ஆவது இடத்தில் கூட ஒரு இந்தியரின் பெயரையோ சீனரின் பெயரையோ பார்க்க முடியாது.
மலாய்க்காரர் அல்லாத ஒருவர் மலேசிய பிரதமராக முடியும் என நாட்டின் அரசியல் சாசனத்தில் உள்ள போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் அதற்கான சாத்தியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் சில மலாய் அரசியல்வாதிகளின் போக்கானது, அடுத்த மாதமே அப்படி ஒன்று நடந்து விடுமோ எனும் ஒரு அச்சத்தை திணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனைத்தான் ஆங்கிலத்தில் ‘எஃப்ரேய்ட் ஒஃப் தி ஓன் ஷேடோ'(சொந்த நிழலைக்கண்டு பயப்படுகிறான்) என்பார்கள். அதாவது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றை எண்ணி அஞ்சுவது இதன் பொருள். அந்த வகை உணர்வை திணிக்க முற்படுகின்றனர்.
கடந்த மாதம் லண்டனில் மலேசிய மாணவர்களை சந்தித்து உரையாடிய ஜ.செ.க.வின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், பராக் ஒபாமாவை சுட்டிக் காட்டி, அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டின் அதிபராவதற்கு 320 ஆண்டுகள் பிடித்தது என்று குறிப்பிட்டார்.
அதே போல மலேசியாவிலும் சிறுபான்மையினர் பிரதமராவதற்கு அரசியல் சாசனத்தில் இடமுண்டு எனும் போதிலும் அடுத்த 100 ஆண்டுகளில் கூட அதற்கான சாத்தியம் இல்லை என அவர் பேசியது மலாய்காரர்களை புண்படுத்திவிட்டது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
இந்த புகார் அசட்டுத்தனமான ஒரு வீண் விதண்டாவாதம் எனும் போதிலும் காவல் துறையினர் அதனை பதிவு செய்து லிம் கிட் சியாங்கை விசாரணை செய்ய அழைத்துள்ளது வேடிக்கைதான்.
முன்னாள் பிரதமர் மகாதீர் இவ்விவகாரம் குறித்து கடந்த காலங்களில் பல தடவை அப்பட்டமாக பேசியுள்ளார். அப்போதெல்லாம் எந்த மலாய்க்காரரும் புண்படவில்லை, அவருக்கெதிராக யாரும் காவல்துறையில் புகார் செய்யவும் இல்லை. ஏனெனில் நாட்டின் அரசியல் சாசனத்தில் உள்ளதைத்தான் அவர் சொல்கிறார் எனும் உண்மையை அப்போதைய அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.
ஆனால் ‘தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்பதைப் போல இப்போதுள்ள குட்டித் தலைவர்கள் அதனை பெரிதுபடுத்தி ‘ஹீரோக்களாக’ தங்களை காட்டிக் கொள்ளப் பார்க்கிறார்கள். இவர்கள் அரசியல் சாசனத்தை அறிந்திராத அரை வேக்காடுகள் என்று சொன்னாலும் மிகையில்லை.
‘இந்நாட்டில் ஒரு மலாய்க்கார முஸ்லிம்தான் பிரதமராக முடியும்’ என அரசியல் சாசனத்தை நாடாளுமன்றத்தில் மாற்றியமைக்க வேண்டும் என பெர்சத்து கட்சியின் இளைஞர் தலைவரான வான் ஃபைஸால் துடிப்பதைக் கண்டு சிலர் கேலி பேசவும் செய்கின்றனர்.
இவர் பல வேளைகளில் கோமாலித்தனமான அறிக்கைகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர். கோவிட் தொற்றின் போது வெகுசன மக்கள் சிறமப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ‘புதிதாக பண நோட்டுகளை அச்சிட்டு மக்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும்’ என பரிந்துரை செய்து பொருளாதார நிபுணர்களின் கண்டனத்திற்குள்ளானது நமக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது.
மற்றொரு கோணத்தில் பார்ப்போமேயானால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் பிரதமராகவும் அமெரிக்க துணையதிபராகவும் இன்னும் பல நாடுகளின் தலைவர்களாகவும் இருப்பது இவர்களுக்கு உண்மையிலேயே இனமறியாத ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளதோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால் அங்கெல்லாம் உள்ள அரசியல் முதிர்ச்சி நம் நாட்டில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. எனவே அவர்கள் அச்சப்படுவதில் கொஞ்சம் கூட அர்த்தமில்லை அவசியமுமில்லை.
இதற்கிடையே இதனையெல்லாம் நன்கு உணர்ந்துள்ள மூத்த அரசியல்வாதியான முன்னாள் பிரதமர் முஹிடின் ‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார்’.
கொல்லைப்புற அரசிலுக்கு பெயர் பெற்றவரான அவர், ‘மாறிவரும் அரசியல் சூழலில் மலாய்க்காரர்தான் பிரதமர் பதவியில் அமர்வார் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது’ என்று அறிக்கை வெளியிட்டு நிலைமையை மோசமாக்க முற்பட்டுள்ளார்.
எவ்வளவுதான் அரசியலில் அனுபவம் இருந்தாலும் தங்களுடைய பிழைப்புக்காக இனவாதத்திற்கு தொடர்ந்து உரமிட்டு குளிர்காயத் தயங்காத அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பது இதன் வழி புலப்படுகிறது.