தமிழ் பள்ளிகளுக்கு மித்ரா வழங்கிய புதுப்பிக்கப்பட்ட கணினிகள்!

இராகவன் கருப்பையா – மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு நம் நாட்டில் உள்ள 525 தமிழ் பள்ளிகளுக்கும் மடிக்கணினிகளை வினியோகம் செய்ய மேற்கொண்டுள்ள முயற்சிகள் மகத்தான ஒரு முன்னெடுப்பு, வரவேற்கத்தக்க ஒன்று.

நம் பிள்ளைகள் சிறு வயது முதல் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கு இத்திட்டம் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சுமார் 3 மில்லியன் ரிங்கிட் செலவில் மொத்தம் 6,000 மடிக்கணினிகள் இதற்கென கொள்முதல் செய்யப்பட்டதாக மித்ராவின் தரவுகள் காட்டுகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் இது வினியோகம் செய்யப்படுகிறது.

எனினும் அந்த 6,000 கணினிகளும் ஏற்கெனவே மற்றவர்களால் பயன்படுத்தப்பட்ட பழைய கருவிகள் என்பதுதான் வருத்தமான விஷயம். அவை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு புதிய பெட்டிகளில் அடைக்கப்பட்டு தமிழ் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.

மித்ரா பணமான 100 மில்லியன் ரிங்கிட் நம் சமூகத்தின் மேம்பாட்டுக்கென விசேஷமாக ஒதுக்கப்பட்ட தொகையாகும். கடந்த காலங்களில் அது முறையாக நிர்வகிக்கப்படாமல் திசை திருப்பி விடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களும் மீதப்பணம் அரசாங்கத்திடமே திருப்பி ஒப்படைக்கப்பட்ட கதைகளும் உள்ளன.

இத்தகைய குளறுபடிகளையெல்லாம் தவிர்ப்பதற்கு அதன் நிர்வாகம் பிரதமர் இலாகாவின் கீழ் கொண்டுவரப்பட்டு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் அந்தப் பணம் முறையாகத்தான் செலவிடப்புகிறதா எனும் ஐயப்பாடு நமக்கு மீண்டும் எழுந்துள்ளது இப்போது. எந்தப் பிரிவினருக்கு எவ்வளவு செலவிடப்பட வேண்டும், அது எவ்வகையில் செலவிடப்பட வேண்டும் போன்ற முடிவுகளில் மித்ரா உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் நிலவுவதாகவும் சுமூகமான உடன்பாடு இல்லை என்றும் நம்பப்படுகிறது.

குறிப்பாக தமிழ் பள்ளிகளுக்கு ஏன் பழைய கணினிகளை வழங்க வேண்டும்? நம் இன மாணவர்கள் ஏன் 2ஆம் நிலையில் நடத்தப்பட வேண்டும்? போதிய பணம் இருப்பதால் புத்தம் புதிய சாதனங்களை வாங்கிக் கொடுக்கலாமே, என வலியுறுத்திய உறுப்பினர்களின் பரிந்துரைகள் உதாசினப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. குழுவை ஓரிருவர் மட்டுமே ஆக்கிரமித்து அவர்களுடைய தான்தோன்றித்தனமான முடிவுகள் மட்டுமே பெரும்பாலான சமயங்களில் அமுல் செய்யப்படுகிறது என்று தெரிகிறது.

புதுப்பிக்கப்பட்ட கணினிகள் வழங்கப்பட்டுள்ளது நிறைய பெற்றோர்களுக்கு மனநிறைவளிக்கவில்லை என மித்ரா இயக்குனர் ரவீந்திரனிடம் குறிப்பிட்ட போது, “நாங்கள் பள்ளிகளுக்குத்தானே கொடுத்தோம், ஏன் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்” என்று அவர் பதிலுரைத்தார்.

நிறைய பள்ளிகளுக்கு அக்கணினிகள் இன்னும் சென்று சேரவில்லை எனும் போதிலும் இதுவரையில் வழங்கப்பட்டுள்ள சாதனங்கள் ‘லெனோவோ’, ‘டெல்’ மற்றும் ‘ஏசர்’ போன்ற புகழ்பெற்ற ரகத்தைச் சேர்ந்தவைதான்.

அவைகளுக்கு ஒரு வருட காலம் உத்தரவாதம் உள்ளதாகத் தெரிகிறது.