இராகவன் கருப்பையா – அண்மைய காலமாக நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பு இளம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை ‘மெண்டரின்’ மொழி கற்கச் செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
நம் பிள்ளைகள் ‘மெண்டரின்’ மொழி கற்பதில் தவறில்லை. ஆனால் அவர்களைச் சீனப் பள்ளிக்கு அனுப்பி “மை சில்ரன் ஆர் இன் சைனீஸ் ஸ்கூல்”(என் பிள்ளைகள் சீனப் பள்ளியில் பயில்கின்றனர்) என்றும் பெருமையாக அவர்கள் பறைசாற்றிக் கொள்கின்றனர்.
‘மெண்டரின்’ மொழி உலகளாவிய நிலையில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக மலேசியாவில் தனியார் தொழில்துறை தொடர்புகளுக்கு அம்மொழி அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது என்றால் அது மிகையில்லை.
எனவே அம்மொழியை நம் பிள்ளைகள் கற்றுக் கொள்வதில் தவறே இல்லை. மாறாக அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் கூடத் தவறாகாது.
ஆனால் தாய் மொழியான தமிழை உதாசினப்படுத்திவிட்டு மெண்டரின் மொழியைக் கற்க வகை செய்வது, தாய்மொழி பற்றாளர்களுக்குக் கடுகளவும் ஏற்புடையதாக இல்லை. இத்தகைய போக்கைத் தாய் மொழிக்கு இழைக்கப்படும் துரோகம் என்று கூடச் சொல்லலாம் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட பிள்ளைகளில் நிறையப் பேர் பள்ளியில் மெண்டரின் மொழியில் உரையாடுடின்றனர், வீட்டில் ஆங்கிலம் பேசுகின்றனர். அதனால், ஆற்றல் கொண்ட ஒரு தரப்பினரிடையே தமிழ் மொழி முற்றாக விடுபட்டுப்போகும் அவலத்திற்குள்ளாகிறது.
தாய் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் குறைந்த பட்சம் அவர்களைப் பகுதி நேரத் தமிழ் வகுப்புகளுக்கு அனுப்பினால் சிறப்பாக இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அப்படி நடப்பதில்லை. ‘டியூஷன்’ வகுப்புகளையும் அவர்கள் மெண்டரின் மொழியில்தான் மேற்கொள்கின்றனர்.
தங்கள் பிள்ளைகளைச் சீனப்பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோரில் நிறையப் பேர் அம்மொழியைக் கற்றவர்கள் அல்ல. இத்தகைய சூழலில் அந்தப் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், எப்படிப் படிக்கிறார்கள், அவர்களுடைய கல்வி வளர்ச்சி எப்படி இருக்கிறது போன்றவற்றைக் கண்காணிப்பது சிரம்மாகிவிடுகிறது.
‘ரிப்போர்ட் கார்ட்’ எனப்படும் அவர்களுடைய ‘கல்வி அறிக்கை அட்டை’யைப் பார்த்துத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குக் கூட ஆசிரியர்களையோ மற்றவர்களையோதான் நம்பியிருக்க வேண்டும்.
அவர்களுடைய வளர்ச்சியை முறையாகக் கண்காணிக்க இயலாத பட்சத்தில், “என் பிள்ளைகள் சீனப்பள்ளியில் பயில்கிறார்கள்” என்று சொல்லித் திரிவது ‘பெருமைக்கு எருமை மேய்த்த கதை’ போல்தான்.
ஆக நம் பிள்ளைகளைச் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பி அம்மொழியில் அவர்கள் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது விவேகமான கண்ணோட்டமாகாது.
அவர்கள் அம்மொழியில் சரளமாக உரையாடும் அளவுக்குத் திறம்பெற, பகுதி நேர மெண்டரின் வகுப்புகளுக்கு அனுப்பினாலே போதுமான முன்னெடுப்பாகும்.
பிற்காலத்தில் அவர்கள் பெரியவர்களானவுடன் தாய் மொழியான தமிழில் பேசத் தெரியாமல் மெண்டரின் மொழியிலும், ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும் மட்டுமே பேசும் நிலையில், அவர்கள் இழந்த அந்தத் தாய்மொழி கல்வி எட்டாக்கனியாகிவிடும்.
இவ்வாண்டின் கல்வி தவனை முடியும் தருவாயில் இருக்கும் இத்தருணத்தில் அடுத்த ஆண்டு தங்களுடைய பிள்ளைகளைச் சீனப் பள்ளிகளுக்கு அனுப்ப எண்ணியிருக்கும் அல்லது பதிவு செய்திருக்கும் பெற்றோர்கள் அது குறித்து மறுபரிசீலனை செய்வதே ஒரு விவேகமான செயலாகும்.