நமது அரசியல் விமோசனம் – பூனையின் மணியை யார் கழற்றுவது?

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் இருக்கும் பட்சத்தில் மேலும் 3 புதிய கட்சிகள் கடந்த சில மாதங்களாக உதயமாகிக் கொண்டிருப்பது நமது அரசியல் விழிப்புணர்ச்சிக்கு சவாலாக உள்ளது.

நமது அரசியல் என்பது ஓர் இனத்தின் மக்கள் கூட்டம் என்ற வகையில், இந்த நாட்டில் உள்ள இந்தியர்களாகிய நாம், நமது பிரதிநிதித்துவத்தின் வழி உரிமை சார்ந்த வாழ்வாதாரத்தை இந்த நாட்டில்  நிலைநாட்டுவதாகும்.

அரசியல் உரிமைகோரலுக்கு சவால்

நம்மிடையே பிரிவினைகள் உண்டாகும் போது, நமது ஒற்றுமை பலவீனமாகி அது அரசியல் உரிமைகோரலுக்கு சவாலாக அமைந்து விடுகிறது.

தற்போது உருவாகிவரும் அரசியல் கட்சிகள் நம் சமுதாயத்தில் இருக்கும் அரசியல் பலத்தை உடைத்து, நமது மிஞ்சியிருக்கும் அரசியல் பலத்தை மேலும் பலவீனமாக்குகின்றன.

“சமுதாயத்தின் குரலாக விளங்குவோம், உரிமைகளைத் தட்டிக் கேட்போம், இழந்தவற்றை மீண்டும் பெறுவோம், சமூக வளர்ச்சிக்குப் போராடுவோம்”, என்றெல்லாம் எவ்வளவுதான் கூக்குரலிட்டாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று எல்லாருக்குமே தெரியும்.

நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு தேசிய முன்னணியின் பலம் வாய்ந்த உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்த ம.இ.கா.வே கடைசியில் தோற்றுத்தான் போனது. ஒரு தரமான கொள்கை பிடிப்பும், அரசியல் விழிப்புணர்ச்சியும் அதன் ஆரம்ப காலத்தில் இருந்த போதும், அதிகாரமும், அதனுடன் கலந்த ஊழல் வழிமுறைகளும் கட்சியினிடையே பிரிவினையை விதைத்தன.

கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற மாபெரும் ஹிண்ட்ராஃப் பேரணியைத் தொடர்ந்து சரிவுகண்ட அக்கட்சி இதுவரையிலும் எழுச்சி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

தனது இரும்புக் கரங்களைக் கொண்டு கிட்டதட்ட 31 ஆண்டுகளுக்கு ம.இ.கா.வை வழி நடத்திய அதன் முன்னாள் தலைவர் சாமிவேலு, ஒரு வலுவிழந்த அரசியல் கட்சியைத்தான் விட்டுச்சென்றார்.

அவருக்குப் பிறகு அக்கட்சியின் தலைமை பீடத்தை அலங்கரித்த பழநிவேலு, சுப்ரமணியம் மற்றும் விக்னேஸ்வரன், ஆகிய எவராலும் அதனை வலுப் பெறச் செய்ய இயலவில்லை.  அரசியல் ரீதியில் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’யைப் போல சன்னம் சன்னமாக அக்கட்சி வெகுசன இந்தியர்களின் ஆதரவையும் இழந்து பரிதவித்து நிற்கிறது.

மலேசிய அரசியலில் ஒரு குட்டி ஜாம்பவானாக விளங்கிய ம.இ.கா.வுக்கே இந்நிலையென்றால் ‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்’களாக உதயமாகும் கொசுக் கட்சிகளின் நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்ப்பது அவசியமாகும்.

கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தொழிலதிபர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமைமையில் அரசியல் கட்சி அமைப்புக் கூட்டம் ஒன்று கிளேங் நகரில் நடைபெற்றது. சில முன்னாள் ம.இ.கா. தலைவர்களும் கலந்து கொண்ட அக்கூட்டத்திற்கு பிரதமர் அன்வாரின் ஆசீர்வாதம் உண்டு என்று கூறப்பட்டது.

எனினும் அன்வாருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என பிரதமர் இலாகா அறிக்கை வெளியிட்ட மறுகணமே அரசியல் கட்சி தோற்றுவிக்கும் எண்ணம் ஏதும் தனக்கு இல்லை என தியாகராஜன் மறுத்தார்.

அதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்து பினேங் மாநில முன்னாள் துணை முதல்வர் இராமசாமி தலைமையில் ‘உரிமை’ எனும் ஒரு அரசியல் கட்சியின் அமைப்புக் கூட்டம்  தலைநகரில் நடைபெற்றது. இதில் ஜ.செ.க. கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே அவசர அவசரமாக வீறுகொண்டெழுந்த இளைஞர் கூட்டம் ஒன்று, ‘மலேசிய இந்திய மக்கள் கட்சி'(எம்.ஐ.பி.பி.) எனும் புதிய அரசியல் கட்சியையொன்றை தோற்றுவிப்பதாக அறிவித்தது.

இவ்விரு கட்சிகளும் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்தால் பெரிக்காத்தான் கூட்டணியில் இணைவதற்கு போட்டா போட்டியிட்டு முந்த முனைவதைப் போல் தெரிகிறது. ஏனெனில் இராமசாமி தலைமையிலான ஒரு குழு பெர்சத்து கட்சியின் செயலாளர் ஹம்சாவை அண்மையில் சந்தித்தது. அதே வேளையில் பெரிக்காத்தான் கூட்டணியில் சேர விண்ணப்பிக்கப் போவதா எம்.ஐ.பி.பி.யின் தலைவர் புனிதன் அவசர அறிவிப்பு ஒன்றை செய்தார்.

ஆட்சி கவிழ்ப்பு குறித்து பெரிக்காத்தான் தலைவர்கள் அண்மைய காலமாக அடிக்கடி பேசி வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். கட்சி தாவலுக்கு எதிரான புதிய சட்டம் அமுலில் உள்ள போதிலும் மத்திய அரசாங்கத்தை மாற்ற முடியும் என பெர்சத்து கட்சியின் துணைத்தலைவர் ஃபஸால்  அஸுமு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறினார். அதே போல ஒரு அரசாங்கத்தை எந்த நேரத்திலும் மாற்ற அரசியல் சட்டத்தில் இடமுண்டு என பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் இம்மாதத் தொடக்கத்தில் கோடிக் காட்டினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் கொல்லைப்புறமாக நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றி பதவி சுகங்களை அனுபவித்த அவ்விரு கட்சிகளும் இன்னமும் அதே எண்ணத்தில்தான் அரசியல் நடத்துகின்றன என்பது நன்றாக புலப்படுகிறது.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது, தக்க சமயத்தில் உள்ளே நுழைந்தால், ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் பதவி சுகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதை இந்த இரு இந்தியக் கட்சிகளும் நன்கு உணர்ந்துள்ளன என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் எப்படிப்பட்ட கூட்டணியில் இணைய முற்படுகிறோம், எம்மாதிரியான விளைவுகள் ஏற்படக்கூடும் போன்ற அம்சங்களை அவை சீர்தூக்கி பார்த்தனவா என்று தெரியவில்லை.

ஒட்டு மொத்தத்தில், இந்தியர்களிடையே மிச்சம் மீதியிருந்த அரசியல் பலமும் கேள்விகுறியாகியுள்ளது. இந்த நிலை மாற்றம் காணும் சூழல் எழ வேண்டும் என்றால், ஆளுமை கொண்ட புதிய தலைமுறை அரசியலை ஒரு சமூக கடைமையாக கொண்டு அந்தச் ‘சாக்கடையில்’ இறங்க வேண்டும்.

பூனையின் கழுத்தில் மணியிருந்த்தால் எலிகளுக்கு கொண்டாட்டமாம்.