இராகவன் கருப்பையா – “யெஸ், ஐ எம் எ கிளிங். சோ வாட்?”(ஆமாம், நான் ‘கிளிங்’தான். அதற்கென்ன இப்போ?) என சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் பிரபல ஊடகவியலாளரான ஃபா அப்துல், விரிவான, தெளிவான, பொருள் நிறைந்த ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் தமக்கு எதிராக சக மாணவர்கள் பயன்படுத்திய இந்த ‘கிளிங்’ என்ற வார்த்தை எப்படியெல்லாம் தம் மனதை பாதித்தது எனவும் ஆசிரியர்கள் கூட அதனை பொருள்படுத்தவில்லை என்றும் அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆகக் கடைசியாக, பிரதமர் அன்வாரும் கூட கிளிங்’எனும் வார்த்தையை பயன்படுத்தி ஒட்டு மொத்த இந்தியர்களின் இதயங்களையும் புண்படுத்தியுள்ளார். ‘ஹிக்காயாட் ஹங் துவா’ புத்தகத்தில் உள்ள வரலாற்று பின்னணியைத்தான் தாம் சுட்டிக்காட்டி பேசியதாகவும், இந்தியர்களை புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை எனவும் அவர் சமாதானம் கூற முற்பட்ட போதிலும், அந்த சொல்லை அவர் மொத்தமாக தவிர்த்திருக்க வேண்டும் என்பதே வெகுசன மக்களின் ஆதங்கமாகும்.
கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர் மகாதீர் கூட பல சந்தர்ப்பங்களில் நம் சமூகத்தினரை கிளிங்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர் பிறகு மன்னிப்பும் கோரியுள்ளார்.
ஆனால் இவர்தான் நம் இனத்தின் விடிவெள்ளி, ஒளி விளக்கு, என்று எண்ணி கடந்த பொதுத் தேர்தலில் அதிக பட்ச ஆதரவை வழங்கிய நம் சமூகத்தினருக்கு அன்வார் பேசியது பெருத்த ஏமாற்றம்தான். ‘உள்ளத்தில்’ உள்ளதுதானே உதட்டில் வரும்’ என ஒரு சிலர் வாதிடுவதிலும் நியாயம் உள்ளது.
தலைவர்களே இப்படி சர்வசாதாரணமாக அந்த சொல்லை நமக்கு எதிராக பயன்படுத்துவதால்தான் கீழ் நிலையில் உள்ளவர்களும் எவ்வித தயக்கமுமின்றி அதே சொல்லைக் கொண்டு நம்மை வாட்டி வதைக்கின்றனர்.
நாட்டின் ஊழல் நிலவரத்தை கூட ஒரு உதாரணமாக இத்தருணத்தில் நாம் எடுத்துக் கொள்ளலாம். அதாவது, முன்னாள் பிரதமர் நஜிப் மேகா ஊழலில் ஈடுபட்டதால் கீழ் நிலையில் ஊழல் புரிந்தோரை அவரால் கண்டிக்க இயலவில்லை. அதே போல்தான் இந்த கிளிங் விவகாரமும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இந்நாட்டில் இந்தியர்களையும் கிளிங் எனும் சொல்லையும் பிரிக்க முடியாது என்பதுதான். இருந்தாலும் அதைப் பற்றி கொஞ்சம் கூட நாம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார் ஃபா அப்துல்.
நம்மை சிலர் கிளிங்’ என்று அழைக்கும் போதிலும் நாம் சோம்பேறிகள அல்ல. மானியங்களையும் உதவித் தொகைகளையும் நம்பி நாம் வாழவில்லை. மற்றவர்களின் பண பலத்தைப் பார்த்து நாம் பொறாமைக் கொள்வதில்லை. கல்வியறிவில் நாம் பின்தங்கியவர்கள் அல்ல. வாழ்க்கையில் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கு விசேஷ சலுகைகளுக்காக காத்துக்கிடப்பவர்கள் அல்ல.
நாம் கடுமையாக உழைக்கக் கூடிய, விவேகமான, புத்திசாலித்தனமான கிளிங்’ என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் ஃபா அப்துல்.
இந்த நிலை நமக்கு மட்டும் இல்லை. மற்றொரு இனத்தைச் சார்ந்தவர்கள் கூட பல வேளைகளில் ‘பாபி'(பன்றி) என்றும் ‘பங்ச பாபி'(பன்றி இனம்) என்றும் அழைக்கப்படுவது உண்டு. ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. மாறாக உழைப்பிலும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும்தான் அவர்களுடைய முழு கவனமும் உள்ளது.
எனவே இந்த கிளிங்’ எனும் சொல்லைக் கண்டு இனிமேலும் நாம் வீண் மன உளைச்சலுக்கு ஆளாகாமல், அதனை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் ‘சோ வாட்’ என அதனை புறம் தள்ளிவிட்டு உழைப்பிலும் உயர்விலும் கவனம் செலுத்துவோமேயானால் எந்த ஒரு இழிச்சொல்லும் அதன் பிறகு நம்மை நெருங்காது.