இந்தியர்கள் மட்டும் தான் ஊழல்வாதிகளா?

கி. சீலதாஸ் – ஊழல் என்றால் உலக அளவில் அது இந்தியர்களிடம் தான் மிகவாகக் காணப்படுவதாகக் கருத்து பரவி வருகிறது. இந்தக் கருத்துக்கு அடிப்படையாக ஏதோ ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அதன்வழி இந்தக் கண்டுபிடிப்பு உறுதியாயிற்று என்று சொல்லுகிறார்கள்.

இப்படிப்பட்ட கருத்துகளின் காரணத்தை விளக்கும் போது, இந்தியர்கள் சாதகமான முடிவை எதிர்பார்க்கும் போது, நன்றியுடன் எதையாவது தருவார்களாம். உதாரணத்திற்கு, இறைவனிடம் வரம் கேட்கும் போது, கேட்ட வரம் கிடைத்தால் “நான் அதைச் செய்வேன்! இதைச் செய்வேன்!” என்று உறுதிமொழி வழங்கப்படுமாம். அதாவது கடவுளிடம் பேரம் பேசி நன்மை பெற நினைப்பார்களாம் இந்தியர்கள்.

இங்கே சமயம் குறிப்பிடப்படாவிட்டாலும் பொதுவாக இந்தியர்களைக் குறிவைத்து ஊழல்களுக்கு மதிப்பளிப்பவர்கள் என்று முடிவு கட்டுவது ஒரு நியாயமான, ஆழமான ஆய்வு என ஏற்றுக்கொள்ள சங்கடமும், சிரமும், வேதனையும் உண்டு. இதை இனத்துவேஷம் என்றால் கூட தகும். ஆய்வு என்றால் அது முழுமையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.

உலகில் ஊழல் செய்யாத இனம் எது? நாடு எது? உண்மையில், உலகில் ஊழல் செய்யாத நாடே கிடையாது. உலகில் ஊழல் குறைந்த நாடுகள் உள்ளனவே அன்றி, ஊழல் அறவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எந்த நாடும் இல்லை.

உலகில் ஊழல் மிகவும் குறைந்த நாடுகள் இருப்பதைத்தான் அனைத்துலக ஒளிவு மறைவற்ற இயக்கம் வெளிப்படுத்துகிறது. ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் தர வரிசைப் பட்டியலில் 1. டென்மார்க், 2. ஃபின்லாந்து, 3. ஜெர்மனி, 4. இலக்ஸம்பர்க், 5. நெதர்லாந்து, 6. நார்வே, 7. நியூசிலாந்து, 8. சிங்கப்பூர், 9. சுவீடன், 10. சுவிட்சர்லாந்து ஆகியன அடங்கும்.

இந்த நாடுகளில் ஊழல் இல்லை என்று சொல்வதற்கில்லை. வாய்ப்புகள் குறைவு, அவ்வளவுதான். இந்த நாடுகளில் மக்கள் ஊழல் கலாச்சாரத்தை நம்பவில்லை; வெறுக்கிறார்கள் என்று சொல்லலாம். இதிலிருந்து என்ன புலப்படுகிறது?

உலகத்தில் ஏதோ ஒரு வகையில் ஊழல் நடக்கிறது. ஒரு நல்ல முடிவைக் காண கையாளப்படும் தவறான அணுகுமுறையும் ஊழல்தான். ஆனால், ஊழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத நாடுகள் பல உள்ளன. ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாகவே மேற்கொள்ளப்படுவதைக் காணலாம்.

எனவே, கடவுளிடம் பேரம் பேசி, நன்மை பெற நினைப்பவர்கள் இந்தியர்கள். எனவே, ஊழல் தருவதும், ஏற்றுக் கொள்வதும் அந்த இனத்தின் தவறான கலாச்சாரமாகவோ கருதப்படுவதில்லை என்று கூறுவது ஆய்வில் கடுமையான குறை இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சமயம் குறிப்பிடப்படாவிட்டாலும் வழிபாடு தளங்களைக் குறிப்பிடும்போது அது இந்துக்களைக் குறிவைப்பதைக் காணலாம்.

சீனச் சமுதாயத்தினர் கூட தங்களுக்குச் சாதகமான சில காரியங்கள் நடக்க வேண்டும் என்பதால் தங்களின் இஷ்ட தெய்வங்களை வேண்டுவது ஒன்றும் புதிதல்லவே. வேண்டிய பலன் கிடைத்தால் ஏதாவது கைம்மாறு செய்வதாக உறுதி அளிப்பார்கள். அதை என்னவென்பது?

கம்யூனிஸ்ட் நாடுகளில் கடவுள் நம்பிக்கை கிடையாது. அங்கு மட்டும் ஊழல் இல்லையா? அந்த நாடுகளில் ஊழல் புரிவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறதாம்.

பகுத்தறிவாளர்கள் என்று கூறுவோர் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் கடவுளை அவமதித்துப் பேசும் குணமுடைய நாஸ்திகர்கள் குறிப்பாகத் தமிழக நாஸ்திகர்களின் ஊழல் கடுமையாக இருப்பதை இந்த ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ளாதது ஏன்?

தமிழகத்தில், அதில் இந்தியக் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ராஜாஜி, காமராஜர் போன்றவர்கள் அரசு பொறுப்பில் இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் ஊழல் அவ்வளவாக இருக்கவில்லை.

அறிஞர் அண்ணாதுரை ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது கூட ஊழல் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவரின் மரணத்திற்குப் பிறகு, கலைஞர் கருணாநிதியின் ஆட்சி வந்தது. ஊழல் வேதாளத்தின் தாண்டவம் சகிக்க முடியாத நிலையை எட்டிவிட்டது என்கிறார்கள். விஞ்ஞான முறையில் ஊழல் புரிவதில் கருணாநிதி இயக்கத்தினர் கைதேர்ந்தவர்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை இழிவுபடுத்துவதில் சூரர்கள். அவர்களின் இழிவான குணத்தை ஒருபோதும் கைவிடாத மூர்க்கக் குணத்தோர். அவர்களை இந்த ஊழல் விவகாரத்தில் இருந்து ஒதுக்கிவிட்டு கடவுள் நம்பிக்கையுடையவர்களை மட்டும் குறிவைப்பது நியாயமான, அறிவுப்பூர்வமான ஆய்வு எனக் கருத முடியாது.

மலேசிய இஸ்லாமிய நாடு என சில அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல. இங்கும் ஊழல் கடுமையாகவே இருப்பதை இந்த ஆய்வாளர்களின் கவனத்தில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன?

தேர்தல் காலங்களில் வாக்கு வேட்டையில் மும்முரமாக இறங்குவோரைக் கவனத்தில் கொள்ளாதது ஏன்? தமிழ்நாட்டில் தேர்தல் காலத்தின் பணப் புழக்கம் அதிகரிக்கிறது. இந்த நாட்டிலும் அது இல்லை என்று சொல்ல முடியுமா? அறிஞர் அண்ணா காஞ்சிபுர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து நின்றவரும் ஒரு முதலியார். அண்ணாவும் முதலியார். தேர்தலின் போது அண்ணா சொன்னது என்ன? என்னிடமும் பேழைப் பேழைப் பணம் உள்ளது என்றார். இதன் பொருள், “நீ மட்டும் பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்க நினைத்தால் என்னிடமும் பணம் இருக்கிறது”. தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கும் காணிக்கையா இது? அந்தத் தேர்தலுக்குப் பிறகு, அறிஞர் அண்ணாவின் மனம் மாறியிருக்கலாம். ஊழலுக்கு இடமளிக்காத ஆட்சியைத் தந்தவர்களின் வரிசையில் அவர் இணைந்துவிட்டார்!

தகவல் ஊடகங்களில் வரும் செய்தி உண்மையெனில் இந்த நாட்டையே ஊழல் வழியில் சூறையாடியவர்கள் இன்று கூட கவுரவமான நிலையில் இருக்கிறார்கள். மக்கள் அவர்களை நம்புகிறார்கள், மதிக்கிறார்கள் என்றால் கடவுள் நம்பிக்கைக்கும் ஊழலுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. ஊழல் புரிவோர் தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏதாவது கொடுத்து விடுவார்கள். அது தங்களின் ஊழலை மறைத்து விடுகிறது.

ஊழல் வழியாகப் பணம் ஈட்டுபவர்கள் எந்த ஒரு காலத்திலும் நிம்மதியாக வாழ மாட்டார்கள். நீதி வெல்லாவிட்டால், அநீதி நீடிக்கிறது! அநீதியின் ஆயுசு கம்மி!அதிகாரம் 76-இல் வள்ளுவர், செல்வம் தேவை என்றும் , நல்வழியில் ஈட்டிய செல்வம் மகிழ்ச்சியையும் ஒழுக்கத்தையும் தரும் என்கிறார். பகைவரை வெல்ல அதனினும் பெரிய ஆயுதம் கிடையாது என்கிறார்.