பல்வேறு கோணங்களில் மகாதீரை மடக்கிய தொலைக்காட்சி நிருபர்

இராகவன் கருப்பையா – தமிழ்நாட்டின் தந்தித் தொலைக்காட்சிக்கு முன்னாள் பிரதமர் மகாதீர் அண்மையில் அளித்த பேட்டியினால் ஏற்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. எனினும் அப்பேட்டியின் போது தொடுக்கப்பட்ட ஒரு சில கூரிய கேள்விகள் அவரை நிலைதடுமாறச் செய்ததை நாம் மறுப்பதற்கில்லை.

பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘ஹார்ட் டோக்’ எனும் புகழ்பெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் அதன் நிருபர் ஸ்தீவன் செக்கர் கேள்விக் கணைகளை தொடுக்கும் பாணியிலேயே தந்தித் தொலைக்காட்சியின் ஹரிஹரனும் மகாதீரை மடக்கினார். நிலைமையை சமாளிக்க சில தருணங்களில் மகாதீர் தடுமாறிய போதிலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல் அவர் அளித்த பதில்கள் நம்மை சிந்திக்க வைப்பதை விட சிரிக்க வைத்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதில் வல்லவர் என்பதை மகாதீர் மீண்டும் நிரூபித்துள்ளார். “நீங்கள் இந்திய வம்சாவழியைச் சேர்ந்வர் என்பதில் பெருமைப் படுகிறீர்களா,” என்று ஹரிஹரன் கேட்ட போது, “இல்லை, நான் இந்தியன் கிடையாது, ஏனெனில் எனக்கு எந்த இந்திய மொழியும் தெரியாது. மலாய் மொழிதான் பேசுகிறேன், மலாய் கலாச்சாரத்தையே பின்பற்றுகிறேன்,” என்று அவர் மழுப்பினார்.

கடந்த 2017ஆம் ஆண்டில், ‘மகாதீர் த/பெ இஸ்கண்டார் குட்டி’ எனும் ஒரு அடையாளக் கார்டின் நகலை தற்போதைய துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் அம்னோ பேராளர்களிடம் காண்பித்ததை நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும். அப்போதைய உள்துறை துணையமைச்சர் நூர் ஜஸ்லானும் கூட அதனை உறுதிப்படுத்தினார். இதன் தொடர்பாக அஹ்மட் ஸாஹிட் மீது மகாதீர் பிறகு வழக்குத் தொடுத்தது வரலாறு.

“ஏன் ஒருவர் தனது வழித்தோன்றலை மறக்க வேண்டும், அதற்காக ஏன் அவர் வெட்கப்பட வேண்டும்” என ஹரிஹரன் கேள்வி எழுப்பிய போது, “மலேசிய இந்தியர்கள் மலேசியாவை சொந்தம் கொண்டாட வேண்டுமென்றால் இனம், மொழி, என எல்லா வகையிலும் அவர்கள் மலேசியாவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவிற்குதான் அவர்கள் விசுவசமாக உள்ளனர்,” என்று மகாதீர் குற்றஞ்சாட்டினார்.

எனவே மலாய்க்காரர்களுக்கு மட்டும்தான் மலேசியா சொந்தம் என மகாதீர் சற்று திமிராக வலியுறுத்திய போது ஹரிஹரன் மீண்டும் அவரை மடக்கினார். “அப்படியென்றால் ‘ஓராங் அஸ்லி’ எனப்படும் பூர்வக்குடியினருக்குதானே மலேசியா சொந்தமாகும்,” என்று ஹரிஹரன் கருத்துரைத்த போது சற்று தடுமாறிய மகாதீர், “அது உங்கள் கருத்து,” என்று சமாளித்துக் கொண்டார்.

கடந்த 2003ஆம் ஆண்டில் முதல் முறையாக அவர் பதவி ஓய்வு பெற்ற சில ஆண்டுகளில் மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தினர் அவரை பாராட்டி விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்வில் பேசியபோது, “எனது நாடி நரம்பில் இந்திய ரத்தம் ஓடுகிறது என்பதை ஒப்புக் கொள்ள நான் வெட்கப்பட வேண்டியதில்லை” என்று கூறியதை அவரே தற்போது மறந்துவிட்டார்.

“மலேசிய இந்தியர்கள் இந்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை. அவர்கள் மலாய்க்காரர்களாக மாறவில்லை, எனவே இந்நாட்டை அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது,” என்றெல்லாம் அவர் பிதற்றியது தற்போது நாடு தழுவிய நிலையில் காட்டுத் தீ போல் பரவி பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“மலேசிய இந்தியர்கள் இந்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை, இந்திய பிரதமர் மோடிக்குத்தான் விசுவாசமாக உள்ளனர்” என இந்திய சட்டத்துறையினருக்கு பயந்து இங்கு ஓடிவந்து ஒலிந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய மத போதகர் ஸாக்கிர் நாய்க் சில ஆண்டுகளுக்கு முன் விஷக் கருத்துகளை உமிழ்ந்தது நமக்குத் தெரியும். அதனைக் கண்டித்த அப்போதைய பிரதமர் மகாதீர், ஸாக்கிருக்கு வாய் பூட்டுப் போட்டார். அச்சம்வத்தைக் கூட மகாதீர் தற்போது மறந்துவிட்டு அதே குற்றத்தைப் புரிந்துள்ளார். இவருக்கு யார் இப்போது வாய் பூட்டு போடுவது?

எது எப்படியோ, தனது சொந்த கோட்டையான லங்காவி தொகுதியிலேயே கடந்த 14ஆது பொதுத் தேர்தலின் போது அவர் ஒரு ‘செல்லா காசாக’ உருமாற்றப்படார். வைப்புத் தொகையை இழக்கும் அளவுக்கு அங்குள்ள வாக்காளர்கள் அவரை நிராகரித்ததை நாம் இன்னும் மறக்கவில்லை.

எனவே “மலேசியாவிற்கான நமது விசுவாசத்தை மதிப்பீடு செய்வதற்கு இவர் யார்,” எனும் நிலையில் ஒரு ‘செல்லா காசின்’ அனாவசிய பிதற்றலுக்கு இனிமேலும் செவிசாய்த்து நமது பொன்னான நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காமல் அடுத்தக் கட்டத்திற்கு நாம் நகர வேண்டும்.