கௌசல்யா- கடந்த 13ஆம் திகதி துன் மகாதீர் அவர்கள் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மலேசிய இந்தியர்களும் சீனர்களும் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்று கூறியுள்ளார். மேலும், பண்பாடு, கலாச்சாரத்தைத் துறந்து மலாய்க்காரர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத வரை நமக்கு இந்த நாடு சொந்தமில்லை எனவும் கூறியுள்ளார்.
முதலில் எது விசுவாசம்? பெரும்பான்மை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகச் சொந்த அடையாளங்களைத் துறப்பதா? ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அவ்வாறு கூறுவாரானால் அது அகம்பாவமே அன்றி வேறில்லை.
இவரால் மலேசிய இந்தியர்களையும் சீனர்களையும் தங்களின் சுய அடையாளத்தோடு ஏற்க முடியாதது, இவரின் சகிப்புத்தன்மையற்ற மனநிலையையே வெளிப்படுத்துகிறது. 20 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்தும் அதை வளர்த்துக் கொள்ளாதது வருத்தமே.
நாங்கள் இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படுகிறோம். நாட்டின் பன்முகத்தன்மையை வரவேற்கிறோம். அனைத்து இனத்தவர்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் மதிக்கிறோம். அதுதான் நாங்கள் மலேசியா மீது வைத்திருக்கும் விசுவாசத்திற்குச் சான்று.
மேலும், நான்கு தலைமுறைகளாக இந்த மண்ணில் கடுமையாக உழைத்திருக்கிறோம். எங்கள் மூதாதையர்கள் நாட்டின் மேம்பாட்டிற்காக வியர்வை சிந்தியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நாடு யாருக்குச் சொந்தம் என்று இவர் நமக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த நாடு மலாய், சீனர், இந்தியர், பழங்குடி மக்கள் அனைவருக்குமானது. இந்த மண்ணிற்காக உழைத்த, உழைக்கிற மக்களுக்கானது.
ஒரே மதம், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பது இட்லரின் குரூர கொள்கையின் வெளிப்பாடு. அதுவே துன் மகாதீர் அவர்களின் பேச்சில் வெளிப்படுகிறது. இது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என்ற பகுத்தறிவின்றி செயல்பட்டுள்ளார் துன் மகாதீர். மலேசியத் தமிழர்கள் சுயமரியாதைக்காரர்கள். துன் மகாதீரின் இச்செயல் எங்களின் சுயமரியாதையைக் கேள்விக்குட்படுத்துகிறது. இதைக் கருஞ்சட்டை இளைஞர் படை வன்மையாகக் கண்டிக்கிறது.
செயலாளர், கருஞ்சட்டை இளைஞர் படை