சமுதாய குமுறல்களை யார்தான் அன்வாரிடம் எடுத்துரைப்பது?

இராகவன் கருப்பையா – புதிய அரசாங்கம் அமையப் பெற்று ஒரு ஆண்டைக் கடந்தவிட்ட நிலையிலும் நம் சமூகம் இன்னமும் கவனிப்பாரற்றுதான் கிடக்கிறது எனும் குமுறல்கள் இந்நாட்டு இந்தியர்களிடையே  உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் நமக்கென கொடுத்த சரமாரியான வாக்குறுதிகளை பிரதமர் அன்வார் நிறைவேற்றத் தவறிவிட்டார் எனும் ஆதங்கம் தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் ஒரே இந்திய அமைச்சராக இருந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் நீக்கப்பட்டு ஒரு சீக்கியரான கோபிந் சிங் நியமனம் பெற்றது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

அரசாங்கத்திடம் நமது தேவைகளை கொண்டு செல்வதற்கும் நம் சமூகத்தின் குறைபாடுகளை எடுத்துரைப்பதற்கும் தமிழ் பேசும் அமைச்சர் ஒருவர் இல்லாமல் போனது ஒரு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

இந்நாட்டு இந்தியர்களுக்கு முறையான ஒரு தலைமைத்துவம் இல்லை எனும் உண்மையை கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணி அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியது. எனினும் அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ் பேசக்கூடிய பிரதிநிதிகள் அமைச்சரவையில் இருந்ததால் குறைந்தபட்சம் மாயையான ஒரு உணர்வு நம்மிடையே இருந்தது.

ஆனால் தற்போது அதுவும் கூட இல்லாத நிலையில் நமக்கென ஒரு தலைமைத்துவம் அறவே இல்லாமல் போய்விட்டது எனும் உணர்வு பரவலாக தலைதூக்கியுள்ளதைப் போல் தெரிகிறது.

அந்த ஹிண்ட்ராஃப் பேரணியின் பிரதானத்  தலைவர்களில் ஒருவராக விளங்கிய தற்போதைய கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், நம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அந்த இன்னல்கள் கவனிப்பாரற்றுக் கிடப்பது தொடர்பாகவும் கடந்த ஒரு வார காலமாக தனது முகநூலில கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

இது ஒரு துணிச்சலான முன்னெடுப்புதான். ஏனெனில் ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே, கைகள் கட்டப்பட்டுள்ள ஒரு தோரணையில் மிகவும் வெளிப்படையாக அவர் கருத்துரைத்துள்ளார்.

நாட்டின் மக்கள் தொகையில் நாம் 6 விழுக்காட்டுக்கும் மேல் உள்ள போதிலும் அரசாங்க சேவையில் நமது பிரதிநிதித்துவம் வெறும் 3.8 விழுக்காடுதான், மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் நமது பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீடு வெளிப்படையாக இல்லை, மித்ரா நிதியான 100 மில்லியன் ரிங்கிட் போதாது, அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் நம் பிள்ளைகளுக்கு போதிய இடம் கிடைக்கவில்லை, போன்ற விவகாரங்கள் குறித்து மிகவும் விரிவாகவே அவர் கருத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

அது மட்டுமின்றி, காலங்காலமாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் தமிழ் பள்ளிக்கூடப் பிரச்சினைகள் மற்றும் கோயில் விவகாரங்கள் குறித்த ஆதங்கத்தையும் அவர் தனது முக நூலில் வெளியிட்டுள்ளார்.

இந்தக் குறைபாடுகள் எல்லாமே நமக்கு புதிய பிரச்சினைகள் அல்ல. மாறாக, நீண்ட நாள்களாகவே கிடப்பில் உள்ள ஒன்றுதான். இதர நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிட்டதட்ட எல்லாருமே தெரிந்தும் தெரியாததைப் போல் இருக்கும் சூழலில் கணபதி ராவ் மட்டும் சற்று சிரத்தையெடுத்து இவற்றை மீண்டும் வலியுறுத்தியுள்ளது பாராட்டத்தக்க ஒன்றுதான்.

இருந்த போதிலும், முக நூலில் பதிவேற்றம் செய்ததை விடுத்து, தனியாகவோ அல்லது சுயமாக ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தோ இப்பிரச்சினைகளை அன்வாரிடம் நேரடியாகக் கொண்டு சென்றிருந்தால் ஆக்ககரமான தீர்வு கிடைத்திருக்கக் கூடும் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

“இனவாரியாக நான் மக்களின் பிரச்சினைகளை கவனிக்கப் போவதில்லை. மாறாக உதவித் தேவைப்படும் அனைத்து இனத்தவருக்கும் நான் உதவி செய்வேன்,” என அன்வார் பல முறை அறிவித்துள்ள போதிலும் சரிந்து போயிருக்கும் மலாய்க்காரர்களின் ஆதரவை மீண்டும் திரட்டுவதில்தான் அவர் அதிகம் கவனம் செலுத்துகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

இத்தகைய சூழலில் நாம் பதுங்கிப் பதுங்கி பயந்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. “நமது உரிமையைத்தான் நாம் கோருகிறோம்,” எனும் அடிப்படையில் அன்வாரிடம் நேரடியாகவே கணபதி ராவ் இவ்விவகாரங்களை கொண்டு சென்றிருக்க வேண்டும்.