இரதம் நிற்கும் இடங்கள் குறைக்கப்பட வேண்டும்

இராகவன் கருப்பையா – கடந்த 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணிக்கு தலைநகர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி இரதம் பத்துமலை சென்றடைவதற்கு கிட்டதட்ட 19 மணி நேரம் பிடித்தது.

ஆண்டு தோறும் இந்த இரத ஊர்வல நேரம் நீண்டு கொண்டுதான் போகிறதேத் தவிர நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு ஒத்துப் போவதாகத் தெரியவில்லை.

சாலை போக்குவரத்து நெரிசல் உள்பட இரதத்தோடு நடந்து செல்லும் பக்தர்களுக்கும் இது அசௌகரியத்தை ஏற்படுத்துவதால் குறித்த நேரத்தில் இரதம் பத்துமலையைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கு கோயில் நிர்வாகம் தகுந்த வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.

ஏறத்தாழ் 30 ஆண்டுகளுக்கு முன் தைபூசத்திற்கு முதல் நாள் விடியற்காலை சுமார் 4 மணிக்குத் தொடங்கும் இந்த இரத ஊர்வலம் நண்பகல் சுமார் 12 மணி வாக்கில் பத்துமலையைச் சென்றடையும்.

எனினும் காலப் போக்கில் சாலைகளில் அதன் ஊர்வலத்திற்கு அதிக நேரம் தேவைப்பட்டதால் காவல் துறையினரின் ஆலோசனையின் பேரில் நள்ளிரவு 12 மணிக்கே மாரியம்மன் கோயிலிலிருந்து  புறப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இவ்வாண்டு இரு தினங்களுக்கு முன், அதாவது செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கே இரத ஊர்வலம் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் புதன்கிழமை மாலை 4.30 மணிக்குப் பிறகுதான் அது பத்துமலை திருத்தலத்தை சென்று சேர்ந்தது.

கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போதெல்லாம் வழி நெடுகிலும் அதிகமான இடங்களில் பக்தர்களின் அர்ச்சனைகளுக்காக இரதத்தை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால் கால தாமதம் இன்னும் மோசமாகிக் கொண்டுதான் போகிறது.

தற்போதெல்லாம் அதிக அளவிலான வணிகத்தலங்கள் தங்களது அலுவலகங்களின் முன் பந்தல்களை அமைத்து இரதத்தை நிறுத்த வகை செய்வதன் வழி முருகப் பெருமானின் அருளைப்பெற முற்படுகின்றன. இந்துக்கள் மட்டுமின்றி பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதை நம்மால் காணமுடிகிறது.

இவ்வாறான வணிகத்தலங்களின் இடங்களைத் தவிர்த்து, இதர இடங்களில் இரதத்தை நிறுத்துவதற்கான ஒரு வழிமுறையை கோயில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.

அதாவது தலைநகர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பத்துமலை சென்றடையும் வரையிலான அதன் 13 கிலோமீட்டர் ஊர்வலத்தின் போது எந்தெந்த இடங்களில் பக்தர்களின் அர்ச்சனைகளுக்காக இரதம் நிறுத்தப்படும் என முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக பக்தர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களை அடையாளம் கண்டு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் அத்தகைய இடங்களில் பந்தல்களை அமைத்து, அந்த வட்டாரத்தில் உள்ள பக்தர்கள்  அவர்களுக்கு அருகாமையில் உள்ள பந்தலில் காத்திருக்க ஊக்குவிக்க வேண்டும்.

வணிகத்தலங்களின் பந்தல்களோ கோயில் சார்பானவற்றோ குறைந்த பட்சம் சுமார் 300 மீட்டர் இடைவெளியில் இருப்பதை உறுதி செய்தால் சிறப்பாக இருக்கும்.

இனி வரும் காலங்களிலாவது இது போன்ற ஒரு முன் ஏற்பாட்டை செய்தால் ஒவ்வொரு 100 மீட்டர் இடைவெளியிலும் இரத ஊர்வலம் நிறுத்தப்பட்டு கால தாமதம் அடைவதை தவிர்க்க வாய்ப்புள்ளது.

இல்லையேல் சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பது மட்டுமின்றி, இரதத்தோடு நடந்து செல்லும் பக்தர்களின் அசௌகரியம் மேலும் மோசமாவதோடு, மீண்டும் மீண்டும் காவல் துறையினரின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அநாவசிமாக நாம் அடிபணிய வேண்டியிருக்கும்.