ஜ.செ.க.வின் கொள்கைகள் – அரசியல் யாதார்த்தமா அல்லது இன வாதமா?

இராகவன் கருப்பையா “ஜ.செ.க. ஒரு சீனர் கட்சி, அதனுடன் அரசியல் ஒத்துழைப்பு வைத்துக் கொள்ளக்கூடாது,” என அம்னோ மற்றும் பாஸ் போன்ற மலாய்க்காரக் கட்சிகள் பல்லாண்டு காலமாக அப்பட்டமாகவே இனவாதக் கொள்கைகளை பரைசாற்றி வந்துள்ளன.

எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நிர்பந்தத்தின் பேரில் ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்த அம்னோ அதற்குப் பிறகு அம்மாதிரி பேசுவது இல்லை. இருப்பினும் அம்னோவிற்குள்ளேயே ஒரு சாரார் ஜ.செ.க.வை தீண்டத்தகாத ஒரு கட்சியாகவே தொடர்ந்து பார்க்கின்றனர்.

ஆனால் பாஸ் கட்சி, கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உதயம் கண்ட பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் ஜ.செ.க.வுடன் இணைந்து செயல்பட்ட போதிலும் தற்போது அக்கட்சிக்கு எதிரான தனது இனவாத காழ்ப்புணர்ச்சியை வெளிப்படையாகவே காட்டி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பல்லினங்களைக் கொண்ட ஒரு கட்சி என ஜ.செ.க. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள பல வழிகளிலும் முற்படும் போதிலும் அதன் செயலாக்கங்கள் அப்படியாக இல்லை என்பதுதான் உண்மை.

கடந்த பொதுத் தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மலாய்க்காரர்களை தனது வேட்பாளர்களாக ஜ.செ.க. பல தொகுதிகளில் களமிறக்கிய போதிலும் அவ்வளவாக அதன் ஜம்பம் பலிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். மலாய்க்காரர்கள் அக்கட்சியை இன்னமும் ஏற்றுக்கொள்வில்லை என்பதையே இது புலப்படுத்துகிறது.

ஆனால் அக்கட்சியின் வளர்ச்சிக்காக காலங்காலமாக இரவு பகல் பாராமல் உழைத்து வரும் நம் சமூகத்தினரின் நிலைப்பாடு என்ன? பல்லினங்களைக் கொண்ட கட்சிதான் எனும் போதிலும் சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ள அதன் மறைமுகக் கொள்கைகளில் நம் சமூகத்தினர் எவ்வாறெல்லாம் பந்தாடப்படுகிறார்கள் என்பது ‘உள்ளங்கை நெல்லிக் கனி’.

குறிப்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் குடும்பத்தினரும் அதன் தலைமைச் செயலாளர் எந்தனி லொக்கும்தான் அதனை ஆக்கிரமித்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க இயலாது. அவர்களுடைய அனுமதியின்றி ஒரு அணுவும் நகராது என்றால் அது மிகையில்லை.

கிளேங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவிற்கு கடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட போதே ஜ.செ.க.வின் சுயரூபம் மறுபடியும் தெரிய வந்தது.

அப்பழுக்கற்ற சிறந்ததொரு சேவையாளரான சந்தியாகோ அமைச்சராவதற்கான தகுதியுடைய ஒரு பொருளாதார நிபுணராவார். இருப்பினும் வேட்பாளர் பட்டியலிலிருந்து அவர் விடுபடுவதற்கு இனவாதம் ஒரு காரணம் என அப்போது பேசப்பட்டது.

அதே போல பினேங் பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியில் அதன்  முன்னாள் உறுப்பினர் கஸ்தூரி பட்டு மீண்டும்  போட்டியிடுவதில்லை என முடிவெடுத்த போது வேறொரு இந்தியருக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மாறாக பினேங் முதல்வர் சவ் கோன் யோ அங்கு போட்டியிட்டார். அவர் வழக்கமாக போட்டியிடும் இடமான தஞ்சோங் தொகுதி லிம் கிட் சியாங்கின் புதல்வியும் லிம் குவான் எங்கின் இளைய சகோதரியுமான லிம் ஹுய் யிங்கிற்கு வழங்கப்பட்டது. புதியவர் எனும் போதிலும் உடனே அவர் துணையமைச்சராகவும் நியமனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

லிம் குவான் எங்கின் மனைவி பெட்டி சியூ கடந்த 1999ஆம் ஆண்டு தொடங்கி மலாக்காவின் கோத்த லக்சமானா மற்றும் டுரியான் டாவுன் தொகுதிகளில் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதையும் நாம் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும்.

முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்தற்கும் இனவாதம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அவ்வமைச்சுக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஸ்தீவன் சிம்மின் பெயர் ஏற்கெனவே பரிந்துரை செய்யப்பட்டதாகவும் சரியான நேரத்திற்கு அவர் காத்திருந்ததாகவும் பேசப்படுகிறது.

சிவகுமார் நீக்கப்பட்டதற்கு சேவைத் தரம்தான் காரணமென்றால் தமது அமைச்சரவையில் கிட்டதட்ட பாதி பேரை பிரதமர் அன்வார் மாற்றியிருக்க வேண்டும் எனும் உண்மையை நாம் மறுக்க இயலாது.

ஜ.செ.க.வில் இனவாதம் காலங்காலமாகவே இருந்து வருகிறது என்பதை அக்கட்சியின் தோற்றுனர்களில் ஒருவரான ஜோன் ஃபெர்னாண்டஸ் நீண்ட நாள்களுக்கு முன்னாடியே குறிப்பிட்டிருந்தார்.

லிம் கிட் சியாங், தேவன் நாயர் மற்றும் மேலும் சிலரோடு சேர்ந்து கடந்த 1966ஆம் ஆண்டில் ஜ.செ.க.வை தொடங்கிய ஜோன் ஃபெர்னாண்டஸ் 1974ஆம் ஆண்டிலிருந்து 1978ஆம் ஆண்டு வரையில் நெகிரி செம்பிலானில் உள்ள ராசா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் சிரம்பான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்ற அவர் ஜ.செ.க.வின் இனவாதக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் 2013ஆம் ஆண்டில் அக்கட்சியிலிருந்து விலகினார். கடந்த மாதம் தமது 82ஆவது வயதில் மரணமடையும் வரையில் அரசியலில் இருந்து அவர் ஒதுங்கியே இருந்தார்.

நீண்ட நாள்களாக ஜ.செ.க.வின் உறுப்பினராக இருந்த பஹாங், சபாய் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு மற்றும் முன்னாள் பினேங் மாநில துணை முதல்வர் இராமசாமியும் கூட இதே காரணங்களை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டில் அக்கட்சியிலிருந்து விலகினார்கள்.

தற்போதைய அமைச்சரவையில் ஜ.செ.க.வை பிரதிநிதித்து மொத்தம் 5 முழு அமைச்சர்கள் உள்ள போதிலும் நம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஐவரில் 4  பேர் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சீக்கியர் ஆவார்.

அரசியல் யதார்தமாக அதை பர்த்தால், அதன் பலம் சீனர்களின் ஆதரவில்தான் உள்ளது. பெரும்பான்மையான சீனர்களின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவு அக்கட்சிக்கு கிடைக்கிறது.

இந்தியர்களின் நிலைப்பாடு சற்று மாறுபட்டது. பெரும்பான்மையாபோர் மஇகா வழி தேசிய முன்னணியில் இருந்த காலமும் உண்டு. ஆனால் இப்போது சிதறு தேங்காய் போல் காணப்படுகின்றனர். இவர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் கொண்ட அரசியல்வாதிகள் கண்டிப்பாக இருப்பார்கள். விடிவெள்ளியாக உதிப்பார்கள் என்று நம்புவோம்.