காணிக்கைக்கு பிறகும் காவடிகளை கண்ணியமாக கையாளுங்கள்!    

இராகவன் கருப்பையா — கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தைபூசம் முடிந்தவுடன் கோயில் வளாகத்தில் குவிந்து கிடக்கும் டன் கணக்கான குப்பை கூழங்கள் தொடர்பான செய்திகளும் படங்களும் பல ஊடகங்களில் பிரசுரமாகி நம் சமுதாயத்திற்கு  தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தும்.

இந்நிலை அண்மைய காலமாக சற்று மாற்றம் கண்டுள்ள போதிலும் பயன்படுத்தப்பட்ட காவடிகள் வேண்டாத குப்பைகளாக அங்குமிங்கும் வீசப்பட்டுக் கிடக்கும் அவலம் இன்னமும் தீரவில்லை.

மாதக்கணக்கில் அல்லது வாரக் கணக்கில் வேண்டுதல் இருந்து விரதங்களை கடைபிடித்து முருகனுக்கு காவடிகள் எடுக்கும் பக்தர்களில் சிலர் தங்களுடைய காணிக்கைகளை  நிறைவேற்றியவுடன் மறுகணமே இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான ஒன்று.

குறிப்பாக பத்துமலையில், மிகுந்த தெய்வீகத் தன்மையோடு ஆற்றங்கரையிலிருந்து காவடிகளை ஏந்தி முருகன் சந்நிதானம் வரையில் செல்லும் அவர்கள் காணிக்கை செலுத்திய அடுத்த விணாடியே அவற்றை குப்பையாகக் கருதுகின்றனர்.

சிலர் குகைக்குள்ளேயே வீசி எறிகின்றனர் மற்றும் சிலர் கீழே கொண்டு வந்து குப்பைத் தொட்டிகளிலும் சாலை ஓரங்களிலும் தூக்கியெறிந்துவிட்டு முருகப் பெருமானுக்கான தங்களுடைய வேண்டுதலை இவ்வகையில் முடித்துக் கொள்கின்றனர்.

அந்தக் காவடிகளில் பெரும்பாலானவற்றில் இந்து தெய்வங்களின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குப்பைக் கூழங்களில் கிடக்கும் அவை கால்களில் மிதிப்படுவது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

பத்துமலை வளாகத்திற்கு வெளியே மேம்பாலத்திற்கு அடியில் சில சேமப்படை காவல் துறையினரும்(எஃப்.ஆர்.யு.) அயல் நாட்டு சுற்றுப் பயணிகளும் காவடிகளின் மீது அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது என பக்தர் ஒரு ‘மலேசியா இன்று’விடம் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்தார்.

அதில் ஒருவர் ‘பூட்ஸ்’ அணிந்திருந்த தனது கால்களை மற்றொரு காவடியின் மீது வைத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாக வருத்தத்துடன் அவர் குறிப்பிட்டார். அந்தக் காவடிகள் குப்பைகளாக வீசப்பட்டவையாதலால் தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என மேலும் அவர் கூறினார்.

காணிக்கை செலுத்தியவுடன் காவடிகள் வேண்டாத பொருள்கள்தான். எனினும் சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை கழிவுப் பொருள்களாகவும் குப்பைகளாகவும் நடத்தாமல் தங்களுடைய இல்லங்களுக்கு எடுத்துச் சென்று முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதுதான் அந்தக் காவடிக்கும் செலுத்திய காணிக்கைக்கும் மறியாதை.

கோயில் வளாகத்திற்கு வெளியே நடக்கும் இத்தகைய அவலங்களை ஆலய நிர்வாகம் தடுக்கவோ தவிர்க்கவோ இயலாது எனும் போதிலும் குகைக்குள்ளே சந்நிதானத்திற்கு அருகில் காவடிகளும் கரும்புகளும் வீசியெறிப்படுவதை அவர்கள் தடுக்க வாய்ப்பிருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் அவ்விடங்களில் சில தன்னார்வளர்களை பணியில் அமர்த்தி, காவடிகளும் கரும்புகளும் அங்கு வீசப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்டவர்களே அவற்றை எடுத்துச் செல்வதற்கு பனிக்க வேண்டும்.

இத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இனிமேலும் இல்லையென்றால் நம் சமயத்திற்கு இழுக்கைக் கொண்டு வரும் இதுபோன்ற அறிவிலித்தனத்திற்கு ஒரு முடிவு இருக்காது.