‘டோல்’ கட்டண கழிவுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் பெருநாள் காலங்களின் போது நெடுஞ்சாலைகளில் ‘டோல்’ கட்டண விலக்கு அளிக்கப்படுவது சமீப காலமாக வழக்கமான ஒன்றாகிவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 தடவை, அதாவது சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தீபாவளி மற்றும் கிரிஸ்மஸ் ஆகிய காலக் கட்டங்களில் இந்த ‘டோல்’ கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஆகக் கடைசியாக இவ்வாரம் கொண்டாடப்பட்ட சீனப் புத்தாண்டுக்கான ‘டோல்’ விலக்கு குறித்த அறிவிப்பை செய்த பொதுப் பணி அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கியின் கருத்துதான் நமக்கு சற்று வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது.

நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுடைய வாழ்வாதாரச் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் ஒற்றுமை அரசாங்கம் இந்த ‘டோல்’ கட்டண விலக்கை வழங்குகிறது என்று அவர் கூறியது ஒரு சிலரை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கலாம். ஆனால் வெகு சன மக்களுக்கு அதனால் பயன் உண்டா?

சகல விலைவாசிகளும் கிடுகிடுவென உயர்ந்து சொல்லொன்னா சிறமத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் இன்னமும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட ஒரு சாராருக்கான 2 நாள் ‘டோல்’ கட்டண விலக்கு எல்லாருடைய பிரச்சினைகளையும் தீர்த்துவிடுமா என்ன?

‘டோல்’ கட்டண விலக்கு வழங்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் விடுமுறையை கழிக்கவோ குடும்பத்தாருடன் பெருநாள்களைக் கொண்டாடவோ நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் திட்டங்களில் மாற்றமிருக்காது. கட்டண விலக்கு இல்லையென்றால் வெறுமனே வீட்டில் பொழுதைக் கழிக்கும் சூழலும் ஒரு போதும் இருக்காது.

ஒவ்வொரு முறை இந்தக் கட்டணக் கழிவு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு கிட்டதட்ட 43 மில்லியன் ரிங்கிட் செலவாகிறது என்று நம்பப்படுகிறது. அதாவது ‘டோல்’ கட்டண வசூலிப்பு நிறுவனங்களுக்கு இழப்பீடாக இத்தொகையை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது.

அப்படி பார்க்கப் போனால் மொத்தம் 4 பெருநாள் காலங்களின் போதும் ஏறத்தாழ 172 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

இது தேவையில்லாத, தவிர்க்கப்படக்கூடிய ஒரு அனாவசிய செலவு என்றே தோன்றுகிறது. பழுதடைந்து கிடக்கும் எண்ணற்ற பிரதான சாலைகளை செப்பனிடுவதற்கு  இத்தொகையை அரசாங்கம் பயன்படுத்தலாம்.

குறிப்பாக நெடுஞ்சாலைகளுக்கு அப்பால் நிறைய சாலைகள் பழுதடைந்து கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. தேர்தல் காலங்களில் மட்டுமே அவற்றுக்கு விமோசனம் பிறக்கும் என்பதும் வெள்ளிடை மலை. பல இடங்களில் சாலை விளக்குகளும் கூட மாதக்கணக்கில் பழுதடைந்து கிடப்பதை நம்மால் காண முடிகிறது.

குண்டும் குழியுமாகக் கிடக்கும் எண்ணற்ற சாலைகள் சிறிய ரக வாகனங்கள், குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு எவ்வாறெல்லாம் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதும் நமக்குத் தெரியும்.

எனவே மக்களின் வரிப்பணத்தை அத்தியாவசியம் இல்லாத விஷயங்களுக்கு செலவு செய்துவிட்டு இதுதான் பரிவு மிக்க அரசாங்கத்தின் முன்னெடுப்பு என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதை விடுத்து மக்களுக்கு பயனளிக்கும் காரியங்களில் கவனம் செலுத்துவதே விவேகமாகும்.