~இராகவன் கருப்பையா – இந்நாட்டில் நம் சமூகத்தின் உருமாற்றத்திற்கென ‘மித்ரா’வின் வழி ஆண்டு தோறும் அரசாங்கம் ஒதுக்கி வரும் 100 மில்லியன் ரிங்கிட் சிறிய தொகைதான் என்றாலும் கடந்த காலங்களில் அந்த உதவி நிதி பல்வேறு தரப்பினரால் கையாளப்பட்டு அதன் பயன் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வில்லை என்பது அதன் மிகப்பெரிய பலவீனமாகும்.
கடந்த 2018ஆம் ஆண்டில் தேசிய முன்னணி அதன் ஆட்சி அதிகாரத்தை இழந்ததைத் தொடர்ந்து அந்நிதியை புதிய நபர்களின் வந்த போதிலும் நலிந்து கிடக்கும் நம் சமூகத்திற்கு முழுத் தொகையும் செலவிடப்படாமல் மீதத் தொகை மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்பட்ட அவலமும் ஒரு துரதிர்ஷ்டம்தான்.
இருந்த போதிலும் கடந்த ஆண்டு மித்ராவிற்கென சிறப்பு செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக முழுத் தொகையும் நம் சமூகத்திற்கு செலவு செய்யப்பட்டது என்பது இனிப்பான செய்தி.
எனினும் அந்நிதி சரியான முறையில்தான் செலவு செய்யப்பட்டதா, உண்மையிலேயே உதவி தேவைப்படுவோரை சென்று சேர்ந்ததா, எனும் கேள்வி மக்கள் மனங்களை இன்னமும் வருடிக் கொண்டுதான் இருக்கிறது.
முறையான திட்டமிடல் இல்லாத பட்சத்தில், அந்த 100 மில்லியன் ரிங்கிட்டின் பெரும் பகுதி எதிர்பார்த்த அளவுக்கு ஆக்ககரமான வகையில் செலவு செய்யப்படவில்லை என்று நம்பப்படுகிறது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தற்போது அக்குழுவிற்கு புதிய தலைவராக தலைநகர் பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரனை பிரதமர் அன்வார் நியமனம் செய்துள்ளார். இந்த முடிவு கூட சரியானதா என்ற வினா எழுகிறது.
கட்சி அரசியல்வாதிகள் கல்வி சார்ந்த துறையில் நிபுணத்துவ தன்மையுடன் செயல்படக்கூடிய திறன் உள்ளவர்களா?
அக்குழுவின் இதர உறுப்பினர்களில் மாற்றங்கள் செய்யப்படுமா தெரியவில்லை. ஆனால் கடந்த கால குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் கொண்டு இவ்வாண்டு நம் சமூகம் நிறைவான பயன்களை அடைவதை பிரபாகரன் உறுதி செய்வது அவசியமாகும்.
உதாரணத்திற்கு நம் சமூகத்தைச் சேர்ந்த வசதி குறைந்த 10,000 உயர் கல்வி மாணவர்களுக்கு தலா 2,000 ரிங்கிட் வழங்கப்படும் என மித்ராவின் அப்போதைய தலைவர் ரமணன் அறிவித்திருந்தார். அதற்கென 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்ட போதிலும் அத்திட்டம் எந்த அளவுக்கு நிறைவு பெற்றது என்று தெளிவாகத் தெரியவில்லை.
ஏனெனில் விண்ணப்பம் செய்திருந்த எண்ணற்ற மாணவர்களுக்கு அந்த உதவித் தொகை கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி மித்ரா தரப்பில் இருந்து எவ்வித பதிலையும் அவர்கள் பெறாதது மிகுந்த விரக்திக்கு இட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
பிரிதொரு கோணத்தில் பார்ப்போமேயானால் உயர் கல்வியைப் பொருத்த வரையில் 2,000 ரிங்கிட் என்பது மிகவும் சிறிய தொகையாகும். அதனால் அவர்கள் அதிகம் பயனடைந்துவிட முடியாது.
வசதி குறைவான குடும்பங்களைச் சேர்ந்த நம் இன மாணவர்கள் நிறைய பேர் அரசாங்க பல்கலைக் கழகங்களில் இடம் கிடைக்காமல் அவதிப்படுவதை ஆண்டு தோறும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அவர்களில் சிறப்பு தேர்ச்சி பெற்ற சுமார் 100 பேரை தேர்வு செய்து முழு உபகாரச் சம்பளமாக தலா 3 இலட்சம் ரிங்கிட்டை வழங்கினாலும் 30 மில்லியன் ரிங்கிட்தான் தேவைப்படும். இதன் வழி பி40 தரப்பில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 100 புதிய பட்டதாரிகளை மித்ரா உருவாக்கியது என்று பொருள்படும்.
இப்படிப்பட்ட திட்டங்களை அமுல்படுத்துவது குறித்து பிரபாகரன் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இது போன்றதொரு முன்னெடுப்பின் வழி கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் மித்ரா பெரும் பங்காற்ற முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எல்லாம் தேவையில்லாமல் ஒதுக்கீடு செய்து பணத்தை விரயம் செய்யாமல் ஆக்ககரமானத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினால் நம் சமூகத்திற்கு அது பயனான ஒன்றாக அமையும்.