நஜிபின் தண்டனை குறைப்பு: பிடிக்காத முடிவு!

இராகவன் கருப்பையா – கடந்த மாதம் 30ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் நஜிபுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைப்பு தொடர்பான சர்ச்சைகள் இன்னமும் ஓயாத நிலையில், அம்முடிவின் விளைவாக பிரதமர் அன்வாரின் அரசியல் எதிர்காலமும் சற்று தடுமாற்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

தொடக்கம் முதல் கொண்டு இந்த தண்டனை குறைப்பு நடவடிக்கையின் பின்னணியில் பல மர்மங்கள் அடங்கியிருப்பதைப் போலான தோற்றம் நிலவுகிறது.

ஜனவரி 30ஆம் தேதி மன்னிப்பு வாரியம் கூடி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான, கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஸலேஹா இஸ்மாயில் கூறிய போதிலும் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் சொல்லவில்லை.

ஆனால் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி அதற்கு அடுத்த நாளே சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு ஊடகம் தெள்ளத் தெளிவாக அம்முடிவை அம்பலப்படுத்தியது. எனினும் அது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை ஏன் தாமதமாக 2 நாள்கள் கழித்து உள்நாட்டு ஊடங்களுக்கு அரசாங்கம் வெளியிட்டது எனும் மர்மம் இன்னும் கலையப்படவில்லை.

இத்தகைய குழப்பங்களுக்கிடையே அந்த தண்டனை குறைப்பானது நஜிபின் குடும்பத்தினர் உள்பட எந்த ஒரு தரப்பினரையும் திருப்திபடுத்தவில்லை என்பதுதான் வேடிக்கை.

அவருக்கு முழு விடுதலை கிடைத்திருக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் வாதிடுகின்றனர். அப்படியென்றால் அவர் எந்த குற்றமும் புரியாத ஒரு அப்பாவியா? அநியாயமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரா? அவருக்கு தீர்ப்பு வழங்கிய நாட்டின் அனைத்து நிலைகளிலான நீதிமன்றங்களும் தவறிழைத்துவிட்டனவா? குடும்பத்தினரின் ஆதங்கம் இத்தகைய கேள்விகளுக்குத்தான் வித்திடுகின்றன.

இதே போன்றதொரு நிலைப்பாட்டைதான் அம்னோவும் கொண்டிருக்கிறது. நஜிபுக்கு முழு விடுதலை கிடைக்க வகை செய்யும் பொருட்டு அதற்கான விண்ணப்பங்கள் செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் அஹ்மட் ஸாஹிட் அறிவித்துள்ளார்.

ஆனால் பிரதமர் அன்வார் நினைத்திருந்தால் நஜிபுக்கு முழு விடுதலை கிடைக்க ஏற்பாடு செய்திருக்க முடியும் என அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் வாதிடுகின்றனர்.

இதில் விசித்திரமான ஒரு விஷயம் என்னவென்றால், தேர்தலில் கிடைக்கும் வெற்றியானது ஆட்சி அதிகாரம் மட்டுமின்றி, சட்டத்தை கையிலெடுக்கும் ஒரு அங்கீகாரத்தையும் வாக்காளர்கள் சேர்த்தே வழங்கியுள்ளதாக நிறைய அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.

குறிப்பாக பெரும்பாலான அம்னோ உறுப்பினர்கள் இத்தகைய குறுகிய மனப்பான்மையை காலங்காலமாக தங்களுடைய கலாச்சாரமாகவேக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

நஜிபுக்கு முழு விடுதலை கிடைக்கவில்லை என்றால் ஒற்றுமை அரசாங்கத்தில் இனிமேலும் தொடர்ந்து இருப்பதில் அர்த்தமில்லை, அதனை விட்டு வெளியேற வேண்டும் என அக்கட்சியின் ஒரு சாரார் கோஷமிடுகின்றனர்.

இந்த சூழ்நிலை அக்கட்சியின் தலைவர் அஹ்மட் ஸாஹிட்டுக்கு ஒரு தலைவலிதான். ஏனெனில் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகும் பக்காத்தானுடனான கூட்டணி தொரரும் என அவர் அறிவித்துள்ள போதிலும் அவருடைய தலைமைத்துவத்திற்கு எதிராக போர்க் கொடி ஏந்தும் தரப்பினரின் பலத்தையும் நாம் குறைவாக மதிப்பிட முடியாது.

நம் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் சட்டத்தை கையிலெடுத்து எப்படியெல்லாம் அதனை பந்தாட எண்ணுகின்றனர் என்பதற்கு நஜிபின் வாழ்க்கை வரலாறு நல்லதொரு உதாரணம்.

பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து கொண்டே எப்படி பக்காத்தானுக்கு ஆதரவு வழங்குகின்றனரோ அதே போன்ற யுக்தியைக் கையாண்டு அம்னோவைச் சேர்ந்த சிலரும் பெர்சத்து பக்கம் சாயக்கூடும்.

அத்தகைய சூழலில் ம.சீ.ச. மற்றும் ம.இ.கா. ஆகிய கட்சிகளின் நிலைபாட்டை நாம் உறுதியாக கணிக்க இயலாது. அவ்விரு கட்சிகளிடம் மொத்தம் 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள போதிலும் அரசாங்கப் பதவிகள் எதனையும் அக்கட்சிகளுக்கு அன்வார் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மக்களின் வரிப்பணத்தை கையாடல் செய்ததன் வழி மாபெரும் குற்றத்தை புரிந்துள்ள நஜிப்புக்கு ஒருபோதும் தண்டனை குறைப்பு வழங்கியிருக்கவே கூடாது என அன்வாரின் பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த பலர் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் மட்டுமின்றி, மலேசிய வழக்கறிஞர் மன்றம் உள்பட எண்ணற்ற உயர் நிலை அரசு சாரா இயக்கங்களும் கூட அம்முடிவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இப்படிப்பட்ட ஒரு சூழல் நிலவும் பட்சத்தில், அன்வார் மிகவும் கவனமாக தனது காய்களை நகர்த்த வேண்டியுள்ளது. துபாய் நகர்வு பிசுபிசுத்து போன நிலையில் நஜிப் விவகாரம்  அன்வாருக்கு மற்றொரு சவாலைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

எனினும் தன் முன்னே தோன்றும் ஒவ்வொரு சவாலையும் சமாளிக்க அன்வார் அரசாட்சியின் தார்மீக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஊழல் நிறைந்த அம்னோவின் ஆதரவும் வேண்டும் என்ற நிலை அன்வாரை பணிய வைக்குமா அல்லது மறாக துணிவைத் தூண்டுமா!