இராகவன் கருப்பையா – இந்நாட்டில் நம் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பிரதமர் அன்வார் நன்கு அறிந்துள்ளார். ஆனால் நமக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்றுதான் இதுவரையில் தெரியவில்லை.
நாம் எதிர்நோக்கும் குறைபாடுகள் குறித்தும் அதனால் எழுந்துள்ள குமுறல்கள் சம்பந்தமாகவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அன்வாருக்கு தெளிவுபடுத்தப்பட்டது என சிலாங்கூர், கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் குறிப்பிட்டார்.
நம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், அந்த இன்னல்கள் கவனிப்பாரற்றுக் கிடப்பது தொடர்பான கருத்துகளையும் கடந்த மாதம் தொடர்ச்சியாக கணபதி ராவ் தனது முக நூலில் பதிவிட்டு வந்தது நாம் அறிந்ததே.
“முக நூலில் பதிவேற்றம் செய்வதை விடுத்து, தனியாக அல்லது சுயமாக உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து இப்பிரச்சனைகளை ஏன் அன்வாரிடம் நேரடியாக கொண்டு செல்லவில்லை? அப்படி செய்திருந்தால் ஆக்ககரமான தீர்வு கிடைத்திருக்கும் அல்லவா,” என ‘மலேசியா இன்று’ வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நம் சமூகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களும் செணட்டர்களும் ஒன்று கூடி நாடாளுமன்ற வளாகத்திலேயே அன்வாரை சந்தித்து, இவ்விவகாரம் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாக கணபதி ராவ் தொடர்ந்து விவரித்தார்.
மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் நமது பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீடு, பல்கலைக் கழகங்களில் ஒதுக்கப்படும் இடங்கள், தமிழ் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு, கல்வியமைச்சில் ஆலோசகர்களாக தமிழ் கல்வியாளர்கள், மற்றும் ‘மித்ரா’ நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை குறித்தும் பிரதமரிடம் பேசப்பட்டதாக அவர் சொன்னார்.
அதோடு, கடந்த காலங்களில் ‘மித்ரா’ பணம் செலவு செய்யப்பட்டது மீதான தடயவியல் தணிக்கை பற்றியும் அவரிடம் விவாதிக்கப்படடதாக கணபதி ராவ் கூறினார்.
அந்த சந்திப்பின் இறுதியில், “அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும்,” என்று அன்வார் தங்களிடம் உறுதியளித்ததாக கணபதி ராவ் மேலும் விவரித்தார்.
எனினும் அதன் பிறகு பிரதமரை மீண்டும் பார்ப்பதற்கான சந்திப்புறுதி இன்று வரையில் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டதுதான் நமக்கு சற்று வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது.
நம் சமூகம் எதிர்நோக்கும் அவ்வளவு பிரச்சனைகளும் கவனிக்கப்படாமல் கிடப்பில் உள்ள பட்சத்தில் கணபதி ராவ் போன்ற ஒரு முன்னணித் தலைவரை சந்திப்பதற்கு ஏன் அன்வருக்கு இன்னமும் அவகாசம் கிடைக்கவில்லை எனும் கேள்வி எழுவதில் நியாயம் உள்ளது.
கணபதி ராவ் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. அவர் ஜ.செ.க.வைச் சேர்ந்தவர் எனும் போதிலும் பக்காத்தான் கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பேச நினைப்பதோ இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பான விஷயங்கள்.
அவர் சொல்வதைப் பார்க்கப் போனால் ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்த பிறகும் அன்வாரை அவரால் சந்திக்க இயலவில்லை என்பது நமக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது.
நம் தலைவர்களில் பெரும்பாலோர் ‘பல் இல்லா புலிகள்’ ஆகிவிட்டது ஏதோ ஒரு வகையில் உண்மைதான். எனினும் ‘கைகள் கட்டப்பட்ட’ நிலையில் அவர்கள் இருப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் போல் தெரிகிறது.
அன்வாருக்கு எதிரான நம் சமூகத்தின் அதிருப்தி அலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் நமது தலைவர்களை சந்திப்பதற்கு அவர் வாய்ப்பு வழங்கத் தயங்குவது அல்லது வழங்க இயலாமல் இருப்பது பல கேள்விகளுக்கு வித்திடுகிறது!