தமிழ்-சீன பள்ளிகளுக்கான பாதுகாப்பு: இனவாதிகளுக்கு வாய்ப்பூட்டாகுமா?

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் தமிழ், சீனப் பள்ளிகள் நிலைத்திருக்க அரசியல் சாசனத்தில் வழி வகுக்கப்பட்டிருக்கிறது என மேல் முறையீட்டு நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக அளித்த தீர்ப்பானது, இனவாதத்தைத் தூண்டி குளிர் காய்ந்து வந்தவர்களுக்கு பலத்த அடி என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக பல மலாய் அரசியல்வாதிகள் ஆண்டாண்டு காலமாக தங்களுடைய பிழைப்புக்கான வீர வசனங்களில் தமிழ், சீனப் பள்ளிகளை கிள்ளுக் கீரையாக பயன்படுத்தி வந்தது நமக்கு மிகுந்த வேதனையளித்தது.

பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டு ஆட்சியில் இருந்த போது அம்னோவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் இவ்விவகாரத்தை ஒரு அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தி வந்தனர். இப்போது ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் அதைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை.

ஆனால் அண்மைய ஆண்டுகளாக பெர்சத்து கட்சியைச் சேர்ந்த சில சில்லறை அரசியல்வாதிகள் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு எதிரான தங்களுடைய குரோதத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆகக் கடைசியாக, தங்களுடைய பாரம்பரியத் தொகுதிகளிலேயே வைப்புத் தொகையை இழந்து மிக மோசமானத் தோல்விகளைத் தழுவிய முன்னாள் பிரதமர் மகாதீரும் அவருடைய புதல்வர் முக்ரீஸும் பேசுவதற்கு உருப்படியான விஷயங்கள் இல்லாத பட்சத்தில் தமிழ், சீனப் பள்ளிகளை உரசிப் பார்த்தார்கள்.

நம் பள்ளிகளை மூட வேண்டும் என கடந்த ஆண்டு முற்பகுதியில் அவ்விருவரும் அடுத்தடுத்து இனத்துவேசக் கருத்துகளை உளறித் தள்ளிய போதிலும் வெகுசன மக்கள் அவர்களை பொருள்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிற்பகுதியில் ‘மலாய்க்காரர்களின் தன்மான மாநாடு’ எனும் மாபெரும் கூட்டம் ஒன்று தலைநகரில் நடத்தப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

மகாதீர் மற்றும் பல அமைச்சர்கள் உள்பட மலாய்க்கார கட்சிகளைச் சேர்ந்த எண்ணற்ற அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும் கலந்து கொண்ட அம்மாநாட்டிலும் தமிழ், சீனப் பள்ளிகள் சீண்டப்பட்டன.

இன்னும் 6 ஆண்டுகளில் அவ்விரு மொழிப் பள்ளிகளும் முற்றாக மூடப்பட வேண்டும் என ஒரு தீர்மானத்தையே அம்மாநாட்டில் அவர்கள் நிறைவேற்றினார்கள்.

இந்நாட்டில் தமிழ், சீனப் பள்ளிகள் இயங்குவதற்கும் மலாய்க்காரர்களின் தன்மானத்திற்கும் என்ன தொடர்பு என்றுதான் இதுவரையில் புரியவில்லை.

நம் நாட்டில் இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி நடுவில் சுகம் காண்பது குறிப்பிட்ட சில தரங்கெட்ட அரசியல்வாதிகள்தான் என்பது சாமாணிய மக்களுக்குக் கூடத் தெரியும்.

ஆனால் தமிழ், சீனப் பள்ளிகள்தான் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கின்றன என்று கொஞ்சம் கூட வாய்க் கூசாமல் விஷக் கருத்துகளை அவர்கள் கக்கிக் கொண்டிருந்தனர்.

அதற்கு ஒரு படி மேல் சென்று, ஒரு கும்பல் இவ்விவகாரத்தை கூட்டரசு நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றது நாம் அறிந்ததே. வழக்கில் அவர்கள் தோல்வியடைந்துள்ள போதிலும் நமக்கு முழு நிம்மதி பிறந்து விட்டது என்று உறுதியாகக் கூற முடியாது.

நீதிமன்றத் தீர்ப்பு தீவிர இனவாத அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டு விட்டது என நாம் நம்பினாலும் எதிர்காலத்தில் புதிதாக முளைத்துவரும் அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி விவகாரத்தை கையிலெடுக்கமாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்நாட்டிலுள்ள எண்ணற்ற அரசியல்வாதிகள், குறிப்பாக ஆட்சியில் இருப்பவர்கள், சட்டத்தை மதிப்பதில்லை. சட்டத்தை தங்கள் வீட்டு சொத்தைப் போல் எண்ணி எப்படியெல்லாம் அதனை தங்களுக்கு ஏற்றாற் போல் வளைக்க முற்படுகின்றனர் என்பதையும் அண்மைய காலமாக நாம் பார்த்து வருகிறோம்.

தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து முடக் கோரி அவர்கள் நீதிமன்றம் செல்ல வாய்ப்பில்லை எனும் போதிலும் தங்களுடைய இனத்தையும்  சமயத்தையும் பாதுகாக்கும் ‘ஹீரோ’க்களாக தங்களை காட்டிக் கொள்வதற்கு இவ்விவகாரத்தை அவர்கள் தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கக் கூடும்.