இராகவன் கருப்பையா – மலேசிய இந்தியர்களுக்கான உருமாற்றுப் பிரிவான மித்ராவுக்கு புதிய தலைவராக தலைநகர் ‘பத்து’ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நியமனம் பெற்று ஏறக்குறைய ஒரு மாத காலம் கடந்து விட்ட நிலையிலும் அக்குழுவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒரு தகவலும் இன்னும் வெளிவராமல் இருக்கும் நிலை சற்று பதட்டமாக உள்ளது.
கடந்த ஆண்டில், சிலாங்கூர், சுங்ஙை பூலோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமணன் தலைமையில் இயங்கிய குழுவினர் சுறுசுறுப்பாக செயல் திட்டங்களைத் தொடக்கி நமக்கு நம்பிக்கையூட்டினர்.
ஒதுக்கப்பட்டத் தொகையை முழுமையாக நம் சமுதாயத்தின் பயன்பாட்டுக்கு செலவழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்து நமக்கு உற்சாகமூட்டினார்கள். “ஒரு சல்லி காசு கூட அரசாங்கத்திடம் திருப்பி கொடுக்கமாட்டோம்” என்று உறுதியளித்தார்கள்.
ஆனால் கடைசி நேரத்தில் நடந்தது என்ன? சமுதாயத்திற்கு உறுதியளித்தபடி முழுத் தொகையையும் முடித்தாக வேண்டும் எனும் வேட்கையில் அவசர அவசமாக தான்தோன்றித்தனமாக செலவழித்தாக நம்பப்படுகிறது.
ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அனாவசியமாக பணத்தைக் கொடுத்தீர்கள் என ஊடகங்கள் உள்பட சமூகத்தின் பல்வேறு தரப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு இன்னமும் கூட அவர்கள் பதிலளிக்கவில்லை. நாடு தழுவிய நிலையில் 70கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டதாக மித்ரா தரவுகள் காட்டுகின்றன.
ஆளும் கட்சியின் கீழ் உள்ள எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஆண்டு ஒன்றுக்கு தலா 3.5 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் வழங்குகிறது. அதில் 2 மில்லியன் ரிங்கிட் தொகுதி மேம்பாட்டுக்கும் 1.5 மில்லியன் ரிங்கிட் நன்கொடைகள் மற்றும் இதர அத்தியாவசிய செலவுகளுக்குமாகும்.
இப்படி இருக்கையில் ஏன் மித்ரா பணமும் அவர்களிடம் கொடுக்கப்பட்டது என்பதே வெகுசன மக்களின் ஆதங்கமாகும். மித்ரா பணம் நம் சமூகத்தின் மேம்பாட்டுக்கென்றே ஒதுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியர்களுக்கு மட்டும்தான் அத்தொகையை பயன்படுத்தினர் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
எனவே இதுபோன்ற அவலம் இவ்வாண்டும் ஏற்படாமல் இருப்பதை பிரபாகரனும் அவருடைய குழுவினரும் உறுதி செய்வது அவசியமாகும்.
நாட்டின் தற்போதைய சூழலையும் இந்தியர்கள் மீதான அரசாங்கத்தின் பார்வையையும் வைத்துப் பார்ப்போமேயானால் நம் கண்களுக்கு விடிவெள்ளியாகத் தெரிவது தற்போதைக்கு ‘மித்ரா’ மட்டும்தான் என்றால் அது தவறாகாது.
ஆண்டு தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட விவரங்கள் ஏதேனும் வராதா என நம் சமூகத்தின் ஒரு சாரார், குறிப்பாக பி40 தரப்பினர் மிகவும் ஏக்கத்தோடும் ஆவலோடும் காத்திருக்கின்றனர் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
ஓரிருத் திட்டங்கள் குறித்த தகவல்கள் புலனத்தில் அவ்வப்போது காணப்படுகின்ற போதிலும் உதவிக்காக காத்திருப்போரை அவை சென்று சேருகின்றனவா என்று தெரியவில்லை.
சாமானிய மக்கள் மித்ராவின் இணையத்தளத்தில் புகுந்து அதன் திட்டங்கள் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் எளிய மக்கள் சுலபத்தில் புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த இணையத்தளம் ‘யூஸர் ஃப்ரன்லி’ எனப்டும் பயனர் நட்பாகவும் இல்லை.
உதவித் திட்டங்களை தாமதமாக ஆரம்பித்து, பிறகு கால அவகாசம் போதாமல் கடந்த கால அவலங்களைப் போல் பாக்கித் தொகையை மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைத்து விடுவார்களோ எனும் அச்சம் கூட எழத் தொடங்கியுள்ளது.
மித்ரா குழுவில் அங்கம் வகிப்போரின் விவரங்கள் கூட இன்னமும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் அக்குழுவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது நாம் அறிந்ததே. பிரபாகரனின் நியமனத்திற்குப் பிறகு மேலும் மாற்றங்கள் ஏதேனும் செய்யப்பட்டனவா என்று தெரியவில்லை.
தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிவிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் முழு கவனமும் அங்குதான் இருக்கும் எனும் போதிலும் அதனை ஒரு காரணமாக நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனெனில் மித்ரா ஒதுக்கீடு நம்மில் பலருக்கு வாழ்வாதாரப் பிரச்சனை. அது மட்டுமின்றி மித்ராவை நிர்வகிப்பது தங்களுடைய பிரதானக் கடமைகளில் ஒன்று என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
“யோசனைகளை வரவேற்கிறன். என் அலுவலகத்திற்கு வாருங்கள். என்னிடம் வந்து பேசுங்கள்,” என அண்மையில் தலைநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது பிரபாகரன் குறிப்பிட்டார்.
இது போன்ற மேடைப் பேச்சு வசனங்களை கேட்பதற்கு காதுகளுக்கு இனிமையாகத்தான் உள்ளன. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமா எனும் கேள்வியும் எழவேச் செய்கிறது.
ஏனெனில் நம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோரை தொடர்பு கொள்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. தொலைபேசி அழைப்பு மூலமாகவோ புலனம் வாயிலாகவோ அவர்களை தொடர்பு கொள்வது ‘குதிரைக் கொம்பு’தான். இதில் பிரபாகரனும் விதிவிலக்கில்லை.
மித்ரா குழுவுக்குத் தலைவராக பிரபாகரனை நியமித்த பிரதமர் அன்வாரின் முடிவு கூட சரியானதுதானா எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில், இது போன்ற பல எதிர்மறையான அம்சங்களைக் கடந்து தனது ஆற்றலை நிரூபிப்பது அந்த இளைஞரின் பிரதானக் கடமையாகும்.