ஜனநாயகம் என்றால் அது மக்களாட்சியைக் குறிக்கிறது. முடியாட்சி என்றால் மன்னராட்சியைக் குறிக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் என்றால் நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் குறிக்கிறது. முடியரசில் மூன்று வகை உண்டு. ஒன்று வரம்பில்லா முடியரசு, மற்றது வரம்புடை முடியரசு. மூன்றாவது அரசமைப்புக்குட்பட்ட முடியரசு.
மலேசியாவின் ஜனநாயகம் நாடாளுமன்ற மக்களாட்சி முறையாகும். இங்கே முடியரசுகளும் உள்ளன. ஆனால், அவை வரம்பற்ற முடியரசுகள் அல்ல. அவையாவும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவையாகும். அதாவது சட்ட வரம்புக்கு உட்பட்டவையாகும்.
ஜனநாயகத்திற்கு நேர்மாறானது சர்வதிகாரம். அதாவது சர்வதிகார ஆட்சி. ஜனநாயகத்தில் பல அரசியல் இயக்கங்கள் இயங்குவதற்கு உரிமை உண்டு. இதற்கு நேர்மாறானது எதிர்க்கட்சிகளுக்கு இடமளிக்காத ஆட்சி முறை. அப்படிப்பட்ட ஆட்சி முறையும் சர்வதிகாரம் எனப்படும்.
ஜனநாயகத்தில் மக்கள் தானே ஆளுகிறார்கள் என்பார்கள். அது மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் தான் ஆளுகிறார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. மக்கள் நேரடியாக ஆட்சி செய்யவில்லை. அந்த அதிகாரத்தைத் தங்களின் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். அதுவும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மட்டும்தான். மலேசியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வருகிறது. அப்போது மக்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தைத் தொகுதி பிரதிநிதிகளுக்கு அளிக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறதோ அது ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதியைப் பெறுகிறது. பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியானது நாடாளுமன்ற தலைவரைத் தேர்ந்தெடுக்கும். அவரே அக்கட்சியின் பிரதமராக அறிவிக்கப்படுகிறது. அந்த அறிவிப்பு மட்டும் போதாது, அதை மாமன்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் அரசமைப்புச் சட்டம் கூறும் நாடாளுமன்ற ஆட்சி முறை.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யும் பிரதமரை மாமன்னர் ஏற்க மறுக்க முடியுமா? முடியாதுதான்! ஆனால், இங்கேயும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் பத்தொன்பதாம் பிரிவின்படி பதிவு குடியுரிமை பெற்றவர் பிரதமராக முடியாது. பிரதமராக நியமிக்கப்படுபவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருக்க வேண்டும்.
அமைச்சரவையில் யார் அங்கம் பெறலாம் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பிரதமருக்கு உண்டு. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்குக் கூட்டுப் பொறுப்பு கொண்டிருப்பதையும் 43(3) ஆம் பிரிவு தெளிவுபடுத்துகிறது.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் சுதந்திரமாக இயங்க முடியுமா என்பதே முக்கியமான கேள்வி! அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பதானது நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் கட்சி தனது கொள்கைகளை நிலைநாட்ட முற்படும் என்று எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் தனிப்பட்டவரின் மனசாட்சிக்கு அங்கே இடமில்லை என்பதும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கும் போதும், அமைச்சரவையில் பொறுப்பேற்கும் போதும் கட்சித் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட வேண்டும். அப்படி பார்க்கும் போது கட்சியின் தலைவர் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகிறார். அதைத் தொடர்ந்து, பிரதமராக நியமிக்கப்படுகிறார். ஆளும் கட்சியின் கொள்கைகளை வழிநடத்தும் பொறுப்பை பிரதமர் மேற்கொள்கிறார்.
கட்சியின் தலைமைத்துவம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு முழு ஆதரவு தரும் பட்சத்தில் அவர் தமது அதிகாரத்தை ஜனநாயக மரபுப்படி பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கலாம்.
ஆனால், அவ்வாறு பிரதமர் நடந்து கொள்வாரா? அதாவது ஜனநாயக மரபுக்கு இணங்க கூட்டுப் பொறுப்புக்கு மதிப்பளித்து செயல்படுவாரா என்பதே கேள்வி அல்லது தமக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படுவாரா? தனது விருப்பப்படி செயல்பட முடியும் என்பதும் அனுபவம் கூறும் உண்மையாகும்.
சில திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் பிரச்சினைகள் எழலாம்; எதிர்ப்பும் எழலாம். எதிர்க்கட்சிகள் எதிர்க்கலாம்; மக்களும் எதிர்க்கலாம். ஆனால், பிரதமர் தாம் எடுத்த முடிவை மாற்றுவதாக இல்லை. அவரின் சொந்த கட்சியினரே அதை எதிர்த்த போதிலும் அவருக்கு இருக்கும் ஆதரவை வைத்துக் கொண்டு தமது திட்டத்தை நிறைவேற்றுகிறார். அமைச்சரவை இதற்கு உடந்தையாக இருக்கிறது. எப்படி?
அமைச்சரவையில் எதிர்ப்பு இருந்தபோதிலும் பிரதமருக்கு இருக்கும் ஆதரவு அந்த எதிர்ப்பை மழுங்கடிக்கச் செய்துவிடுகிறது. தமது செல்வாக்கை, அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதமர் தாம் விரும்பியதைச் செய்வதில் வெற்றி காண்கிறார். அதிருப்தி கொண்ட சொந்த கட்சி உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்து விலகலாம் அல்லது கட்சி விசுவாசம் என்ற பேரில் வாய்மூடிகளாக இருந்துவிடலாம். ஜனநாயகத்தில் சர்வதிகாரம் வடிவம் பெற இதுவும் ஒரு வழியாகும்.
மற்றுமொரு முறை எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம். பிரதமர் தமது அமைச்சரவையைத் தேர்ந்தெடுத்த போது தமக்கு ஆதரவாகச் செயல்படுவோரை மட்டும் கவனத்தில் கொண்டிருக்க மாட்டார். மாறாக, தாம் எதைச் சொல்கின்றாரோ அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவோரை மட்டும்தான் நியமிப்பார்.
இது எதைக் குறிக்கிறது? பிரதமர் எதை விரும்புகிறாரோ அதை நிறைவேற்றும் கருவிகளாக அமைச்சர்கள் இயங்குகிறார்கள், இயங்க வேண்டும். அவர்கள் சுயமாக எதையும் செய்ய முடியாது. ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வர வேண்டுமானால் அது முதலில் பிரதமரின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். எனவே, பிரதமரின் சர்வதிகார கரங்கள் வலுவடைந்து இருப்பதைக் காணலாம். இதை வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமானால் பிரதமரின் கட்டளைக்கு உட்பட்டவர்களாக அமைச்சரவை உறுப்பினர்கள் இருக்க வேண்டுமே ஒழிய அதை மீற முடியாது.
ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை என்று நினைப்பது வெறும் பகற்கனவாகும்.
ஜனநாயகத்தின் வழியாக அதிகாரத்தில் அமர்ந்த பிறகு தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள தயங்காதவர்கள் கையில் இருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய தயங்க மாட்டார்கள்.
துஷ்பிரயோகம் செய்வதில் அவர்கள் காட்டும் துணிவு வியப்பை அளிக்கலாம். கட்சிக்காரர்கள் சுயநலத்தில் கவனமாக இருந்தால், மக்கள் அற்ப விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால், ஜனநாயகத்தைத் தவறாகப் பயன்படுத்த தயங்காத தலைவர்களின் காலம் ஓங்கிக் கொண்டே இருக்கும். இவ்வாறு ஜனநாயகத்தை அவமதிக்கும் சக்திகள் ஆட்சியில் பரவலாகக் காணப்படுகின்றனர் என்ற கூற்றில் உண்மையும் உண்டு.
கம்யூனிஸ்ட் நாடுகளும் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், அங்கே தனி மனித உரிமை மறுக்கப்படுவது ஒரு புறமிருக்க, எதிர்க்கட்சிகள் இயங்குவதற்கு அங்கு வாய்ப்பில்லை. ஜனநாயகத்தில் எல்லா பிரதிநிதித்துவத் தொகுதிகளையும் ஒரு கட்சி கை பற்றினால் அங்கும் சர்வதிகாரம் பலம் பெற நிறையவே வாய்ப்பு உண்டு.