மலேசியாவின் அரசியலமைப்பு மத சார்பற்றது – பகுதி 2 – கி. சீலதாஸ்

தொடர்ச்சி..அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியாகும்!

பாகிஸ்தான் தனது அரசமைப்புச் சட்டத்தில் அந்த நாடு இஸ்லாமிய நாடு எனக் கருதப்படுகிறது. இஸ்லாமிய நாடு எனும்போது அங்கே பிற மதங்கள் இயங்குவதில் சங்கடங்கள் இருப்பதைக் காணலாம்.

இந்தியா தமது அரசமைப்புச் சட்டத்தில் தம்மை ஒரு மதச் சார்பற்ற நாடு எனப் பிரகடனப்படுத்தியது. அந்த நிலை இன்றளவும் நீடிக்கிறது. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஈராயிரம் ஆண்டுகளாக மற்ற மதங்களுக்கு இடமளிக்கும் நாடாகத்தான் பாரதம் இருந்ததே அன்றி எந்த மதத்தையும் அது தடுக்கவும் இல்லை. அதே மனப்பாங்கை மற்ற மதங்கள் கொண்டிருந்தனவா என்பதே பெரிய கேள்வி.

1963ஆம் ஆண்டு மலேசியா அமைக்கப்பட்டது. இது மலாயா கூட்டரசு, சிங்கப்பூர், சபா, சரவாக் இணைந்து கண்ட கூட்டரசு. இந்த அமைப்புக்கு அரசமைப்புச் சட்டம் தேவைப்பட்டது. 1957ஆம் ஆண்டு மலாயா கூட்டரசு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மலேசிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது; ஏற்றுக்கொள்ளப்பட்டது. 9.8.1965இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து விலகியது.

1957ஆம் ஆண்டு மலாயா கூட்டரசு அரசமைப்புச் சட்டமும், 1963ஆம் ஆண்டு காணப்பட்ட மலேசிய அரசமைப்புச் சட்டமும் இஸ்லாம் தான் கூட்டரசின் மதம் என்றபோதிலும் அது இஸ்லாமிய நாடு என்று அறிவிக்கவில்லை. ஆனால், மலேசியாவின் மதச் சார்பற்ற நிலையையே உறுதிப்படுத்தின.

துன் டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமராக இருந்த காலகட்டத்தில் மலேசிய இஸ்லாமிய நாடு என அறிவித்தார். இங்கே நாம் காண வேண்டியது என்ன? துங்கு அப்துல் ரஹ்மானும், துன் உசேன் ஓனும் மலேசியா இஸ்லாமிய நாடு அல்ல என்று உறுதிப்படுத்தினர். அதுதான் வரலாற்று உண்மை.

இன்று, மகாதீரின் தவறான போக்கு பலவிதமான சிக்கல்களுக்கு இடமளிப்பதைக் காணலாம். அதுமட்டுமல்ல, இஸ்லாமிய நாடுகள் எனும்போது பிற மதத்தினர் நிம்மதியாக வாழ முடியாது என்பதை பாகிஸ்தானைப் பார்த்தால் புலப்படும். அதுபோல் இங்கும் வரக்கூடாது என்று நாம் பிரார்த்திக்கலாம்.

ஆனால், சில அரசியல்வாதிகள் மதச் சார்பற்ற நீதித்துறையைக் குறை கூறுவது மட்டுமல்ல அதை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கோருவது காலங்காலமாக நிலவிக் கொண்டிருந்த மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் என்ற அச்சம் பலம் பெறுகிறது.

நீதித்துறையை அவமதிப்பது, நீதிபதிகளைக் குறை கூறுவது, அவர்களை அலட்சியப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் சவாலாகும். அதைத் தவிர்க்கும் பொறுப்பு இன்றைய அரசுக்கு உண்டு!

அரசமைப்புச் சட்டத்தை மதித்து நடக்கும் குணத்தைக் கையாளாவிட்டால் நாடு அவலநிலையை நோக்கிப் பயணிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மகாதீர் போன்றோர் குறுகிய கால ஆதாயத்தில் உற்சாகமாக இருந்தார்கள், இன்றும் அந்த நிலையில் இருந்து மாறவில்லை. இதைத் திருத்த வேண்டும்.

இளைஞர்களைக் கவருவதில் கரிசனம் காட்டுவது எதற்கு? மயங்கிய நிலையில் இருப்பவர்களை அதே நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற சுயநலக்காரர்களின் பேராசையாகும். அரசு பொறுப்பில் இருப்பவர்கள் இந்த ஆபத்தான நடவடிக்கையைக் கவனிக்காமல் விட்டால் நாட்டைக் காப்பாற்றத் தவறியவர்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இந்தக் காலகட்டத்தில் நம் அரசமைப்புச் சட்டத்திற்குச் சவால் விடும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அதற்கு எதிரான பல செயல்களில் ஈடுபட துணிவதில் ஆர்வம் மிகுந்தே காணப்படுகிறது. நம் அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளத்துக்கு அறுபத்தேழு வயதாகிவிட்டது. மலேசிய அமைப்பும் நீண்ட ஆயுளை வலுவடைவதைத் தடுக்கும் முயற்சிகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ மேற்கொள்ளப்படும் முரட்டுத்தனமான போக்கு மிளிர்வதைக் காண்கிறோம். அத்தகைய போக்கு மலேசியாவின் ஆயுளுக்குப் பேராபத்தை விளைவிக்கும் என்பதை உணர்வது மிக முக்கியம்.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியாகும்.