புத்தக வெளியீடும் இலவு காத்த கிளிகளும்

இராகவன் கருப்பையா – அண்மைய காலமாக நம் நாட்டில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது நமக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விசயமாகும்.

நாடு தழுவிய நிலையில் பல்வேறு இடங்களில் மாணவர் பற்றாக்குறையினால் பல தமிழ் பள்ளிகள் மூடப்படக் கூடிய சூழலை எதிர்நோக்கியுள்ள பட்சத்தில், அதிகரித்துள்ள இத்தகைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் நமக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு புறமிருக்க புதிய எழுத்தாளர்களின் வருகையும் நமக்கு புதுத் தெம்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையில்லை.

எனினும் இத்தகைய நிகழ்வுகளுக்கு நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு, குறிப்பாக பொருளாதார ஆதரவு  அவ்வளவாக ஊக்கமளிக்கும் வகையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்கவோ வாழ்த்துரை வழங்கவோ வரும் அரசியல்வாதிகள் தங்களுடைய உரையின் போது வழங்கும் இனிப்பானத் தகவல்கள் பெரும்பாலான சமயங்களில் நமக்கு மிகவும் உற்சாகமூட்டும் வகையில் அமைந்திருக்கும்.

“புத்தகத்தை அச்சடிப்பதற்கு ஏற்பட்ட மொத்த செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.” “இன்றைய நூல் வெளியீட்டு விழாவுக்கு செலவிடப்பட்டத் தொகையை நான் செலுத்துகிறேன்.” இதுபோன்ற அறிவிப்புகளை அவர்கள் செய்யும் போது சம்பந்தப்பட்ட நூலாசிரியர் மட்டுமின்றி மண்டபத்தில் குழுமியிருப்போரும் மகிழ்ச்சியடைகின்றனர்.

வேறு சில அரசியல்வாதிகள் குறிப்பிட்ட ஒரு தொகையை அறிவித்து, அதற்கான புத்தகங்களை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதியளிப்பார் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை வாங்கிக் கொள்வதாகக் கூறுவார்.

ஆனால் இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் அப்படி உற்சாக அறிவிப்பை செய்யும் அரசியல்வாதிகளில் ஒரு சிலர்தான் சொன்னபடி பணத்தை உடனே கொடுக்கின்றனர்.

மேலும் பலர் தாங்கள் செய்யும் அறிவிப்போடு தங்களுடைய கடமையை முடித்துக் கொள்கின்றனர். செயலாளரை பிறகு தொடர்பு கொள்ளும்படி ஆலோசனை கூறிவிட்டுச் செல்வார்கள். ஆனால் அதன் பிறகு சம்பந்தப்பட்ட செயலாளரையோ அந்த அரசியல்வாதியையோ தொடர்பு கொள்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை.

பல வேளைகளில் அது ‘இலவு காத்த கிளியின் கதையாகவே முடிந்துவிடுகிறது. சம்பந்தப்பட்ட நூலாசிரியர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உள்ளூர புழுங்கி மன வேதனையுடன் மவுனமாகவே இருந்துவிடுகிறார்.

இதற்கிடையே அந்த அரசியல்வாதியின் உரையும் அவர் செய்த அறிவிப்பும் ஊடகங்களில் பாராட்டத்தக்க வகையில் பந்தாவாக பிரசுரம் கண்டு, பணத்தை அவர் உடனே கொடுத்துவிட்டதைப் போலான ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது.

வேண்டுமென்றால் நிகழ்ச்சிக்கு வரும்போதே அதற்கானத் தொகையை அவர்கள் கொண்டு வந்துவிடலாம். எடுத்து வர இயலாத அளவிற்கு மிகப் பெரியத் தொகையையா அவர்கள் அறிவிக்கிறார்கள்? அதுவும் இல்லையென்றால் ஒரு காசோலையை அவர்கள் தயார் செய்து கொண்டு வரலாம்.

எனினும் சில அரசியல்வாதிகளின் இத்தகைய நிலைப்பாடு நூல் வெளியீட்டாளர்களைப் பொருத்த வரையில் புதிதான ஒன்றல்ல. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல அரசியல்வாதிகளின் போக்கும் இதேபோல்தான் இருந்திருக்கிறது.

கடந்த கால பெருந்தலைவர்களில் சிலர் கூட இப்படிதான் வாய்க்கு வந்த வாறு  அறிவிப்புகளை செய்துவிட்டு பிறகு நிகழ்ச்சி முடிந்தவுடன் மவுனமாக இருந்துவிடுவார்கள். தொலைபேசி வசதிகள் அதிகமாக இல்லாத அக்காலக் கட்டத்தில் நூல் வெளியிட்டவர்கள் செய்வதறியாது தடுமாறிய காலங்களும் உண்டு.

இத்தகைய அரசியல்வாதிகளுக்கு ஞாபக மறதியா, அலட்சியப் போக்கா அல்லது வேண்டுமென்றே இப்படி நடந்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் தற்போதைய நவீன காலத்திலும் இது போன்ற நிலை தொடர்வதுதான் நமக்கு வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது.