‘ஹராம்’ வரி விவகாரத்தில் அரசு மவுனம் களைய வேண்டும்

இராகவன் கருப்பையா – மதுபான விற்பனை மற்றும் சூதாட்டம் போன்ற நடவடிக்கைகளின் வழி வசூலிக்கப்படும் வரிகளை அரசாங்கம் மலாய்க்காரர் அல்லாதாருக்கென ஒதுக்க வேண்டும் என பல ஆண்டுகளாகத் தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கம் பதிலேதும் கூறாமல் மவுனமாகவே இருந்து வருவது நமக்கு வியப்பாக உள்ளது மட்டுமின்றி ஏமாற்றமாகவும் இருக்கிறது.

மது விற்பனை, சூதாட்டம், போன்றத் துறைகளில் இருந்து கிடைக்கும் வரிப்பணம் இஸ்லாமியர்களின் சமய கொள்கைகளுக்கு முரண்பாடான ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதன் தொடர்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய போக்கு வரத்து அமைச்சர் எந்தனி லோக் கருத்துரைத்திருந்தார்.

அதாவது மதுபானம் மற்றும் சூதாட்டம் ஆகியத் துறைகளில் இருந்து கிடைக்கும் வரிப்பணம் தனியாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ், சீனப் பள்ளிகள் மற்றும் சமூக, கலாச்சார இயக்கங்கள் போன்ற முஸ்லிம் அல்லாத அமைப்புகளுக்கு இத்தொகையை பயன்படுத்தலாம் எனவும் அவர் யோசனை தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போதைய அமைச்சரவையில் முக்கியமான அங்கம் வகிக்கும் அவர் அந்த யோசனையை நடைமுறைபடுத்துவதற்கு எவ்விதமான முன்னெடுப்புகளை மேற்கொண்டார் என்பதுதான் கேள்விக்குறி.

இவ்விவகாரம் குறித்து ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் கூட சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். மதுபானம் மற்றும் சூதாட்டம், ஆகிய துறைகளில் இருந்து கிடைக்கும் வரி தொடர்பான கணக்கு விவரங்கள் குறித்து அரசாங்கத்திடம் கேட்கப்படும் என கடந்த 2021ஆம் ஆண்டு முற்பகுதியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தத் தொகை மொத்தமாக மலாய்க்காரர் அல்லாதாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரும் மகஜர் ஒன்று பிரதமரிடம் வழங்கப்படும் என விக்னேஸ்வரன் அச்சமயத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் முஹிடின் ஆட்சியின் போது  நிதியமைச்சராக இருந்த தெங்கு ஸஃப்ருல் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின் மீது தனது அதிருப்தியை தெரிவித்த விக்னேஸ்வரன் அவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த யோசனை நாட்டின் வரலாற்றில் அமுல்படுத்தப்படாத ஒரு விஷயம் என்பதால் நமக்கெல்லாம் அப்போது மிகுந்த மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனால் அப்படியொரு மகஜர் முஹிடினிடமோ, அதன் பிறகு ஆட்சியமைத்த சப்ரியிடமோ, தற்போதைய பிரதமர் அன்வாரிடமோ வழங்கப்பட்டதா இல்லையா என இன்று வரையில் தெரியவில்லை. அப்படியே சமர்ப்பித்திருந்தால் அரசாங்கம் அதற்கு எவ்வாறு பதிலுரைத்தது எனும் விவரங்களும் வெளியாகவில்லை.

அவ்விவரங்களை அறிய ம.இ.கா. உறுப்பினர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகமும் இன்னமும் ஆவலாகக் காத்திருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.

அப்படியொரு மகஜர் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லையென்றால் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் தெளிவுபடுத்த அவர் கடப்பாடுக் கொண்டுள்ளார்.

சிலாங்கூர், கோல குபு பாருவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் பெரிக்காத்தான் வேட்பாளருக்காக சில தினங்களுக்கு முன் பிரச்சாரம் செய்த முன்னாள் துணையமைச்சர் சந்திரக்குமாரும் இதனைத் தொட்டு பேசியுள்ளார்.

மதுபானம் மற்றும் சூதாட்டத்தின் வழி கிடைக்கும் வரிப்பணம் நாட்டிலுள்ள முஸ்லிம் அல்லாதாரின் நலனுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என கூட்டரசுப் பிரதேச முன்னாள் துணையமைச்சரான அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் எல்லாருமே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது இப்படிப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக வாய்த்திறக்காமல் ஊமையாகக் காலத்தை கடத்துவதை மக்கள் உணராமல் இல்லை.

எனினும் அரசாங்கமும் இவ்விஷயத்தில் ஊமையாக இருக்காமல் தெளிவான ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டால் மலாய்க்காரர் அல்லாதாரின் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு காண வழி பிறக்கும் என்பதில் ஐயமில்லை.