இடைத்தேர்தலால் பிறக்கும் விமோசனம் பாடமாக அமையட்டும்

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டமன்ற உறுப்பினரோ மரணமடைந்தாலோ அல்லது பதவி விலகினாலோ அத்தொகுதியில் இடைதேர்தல் நடக்க வாய்ப்புண்டு. அந்தச் சூழல் ‘ஜேக்பொட்’ அடித்ததைப் போன்ற நிலையை உருவாக்கி விடுகிறது.

அதற்கு முக்கிய காரணம், அந்த இடைத்தேர்தல் ஆளும் கட்சியை மீளாய்வு செய்ய மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழக்குகிறது. அந்தத்தருணம்தான் வாக்குறுதிகள் மீண்டும் மக்கள் மத்தியில் விவாதங்களை உண்டாக்கும்.

சம்பந்தப்பட்ட அத்தொகுதியில் எவ்வளவுதான் பிரச்சனைகள் இருந்தாலும் வழக்கமாக கேட்பாரற்றுக் கிடக்கும் சூழலில், இடைத்தேர்தல் எனும் வரும்போது திடீரென அந்த வட்டாரமே உயிர் பெற்று எழுந்து விழாக் கோலம் பூணும். மண மேடை ஏறவிருக்கும் புதுப் பெண்ணுக்குக் கிடைக்கும் கவனிப்பைப் போலான நிலைதான் அங்குள்ள எல்லாருக்கும்.

அத்தொகுதியில் பல்லாண்டு காலமாக உதாசினப்படுத்தப்பட்டு தேங்கிக் கிடந்த திட்டங்கள் எல்லாம் திடீரென உயிர் பெற்று ஊஞ்சலாடும்.

நாடு தழுவிய நிலையிலிருந்து பல்லினக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அத்தொகுதிக்கு படையெடுத்து அங்கேயே முகாமிட்டு அங்குள்ள வாக்காளர்களை போற்றி, புகழ்ந்து, பல்லிளித்து பரிசு மழை பொழிவார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்த நாளிலிருந்து வாக்களிப்பு தினம் வரையில் அந்த 2 வாரங்களுக்கு மட்டும் அங்குள்ளவர்களுக்கு ராஜ மரியாதைதான். கிட்டதட்ட கேட்பதெல்லாம் தங்குதடையின்றி கிடைக்கும்.

ஆனால் தேர்தல் முடிந்த மறுகணமே நிலைமை தலைகீழாக மாறி ‘பழைய குருடி கதவை திறடி’ என்பது போலாகிவிடும். ‘மிடல் கிலாஸ் மாதவன்’ எனும் தமிழ் திரையில், காலையில் பெற்றோருக்கு மரியாதை செலுத்திவிட்டு வேலைக்குச் செல்லும் நடிகர் வடிவேலு, மாலையில் மது போதையில் வீடு திரும்பியதும் அவர்களைப் போட்டு விலாசும் காட்சி தான் நம் ஞாபகத்திற்கு வரும்.

எனினும் அத்தொகுதிக்கான தற்காலிக மதிப்பு மறியாதையெல்லாம் ஒரு அரசியல் கபட நாடகம்தான் என இக்கால தலைமுறை வாக்காளர்களுக்கு தெரியாதா என்ன? அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சுயநல வேட்கையில், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோஞ்திகளைப் போல அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக் கொண்டு நாடகமாடுவார்கள் என்று எல்லாருக்குமே தெரியும்.

அதே வேளையில் சிறு பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்து காரியம் சாதிப்பதைப் போல அந்த வாக்காளர்களை சுலபத்தில் வசீகரிக்க முடியாது என அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.

இருந்த போதிலும் அத்தொகுதி மக்களிடம் இனிப்பு வார்த்தைகளைத் தூவி அவர்களை கவர்ந்திழுப்பதற்கு தங்களிடம் இருக்கும் அத்தனை கைவந்த கலைகளையும் கட்டவிழ்த்துவிடுவார்கள்.

இதுதான் தற்போது சிலாங்கூர், கோல குபு பாருவில் நடந்து கொண்டிருக்கிறது. அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜ.செ.க.வின் லீ கீ ஹியோங் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து எதிர்வரும் மே 11ஆம் நாள் அங்கு இடைத்தேர்தல் நடைபெறவிருப்பது நாம் அறிந்ததே.

கடந்த காலங்களில், தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த போது, நாட்டில் எங்கு இடைத் தேர்தல் நடந்தாலும் அத்தொகுதிக்கு படையெடுத்து எண்ணற்ற சலுகைகளை அறிவிக்கும் அக்கூட்டணியை பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கிண்டலும் கேலியுமாக வசைபாடினார்கள்.

ஆனால் ஒற்றுமை அரசாங்கம் எனும் அடிப்படையில் இப்போது ஒரே குடையின் கீழ் இணைந்துள்ள அவ்விரு கூட்டணிகளும் தற்பொழுது ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ போலாகிவிட்டன.

இத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அம்முடிவு மாநில ஆட்சியில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனும் போதிலும் சரிந்து வருகிறது என்று நம்பப்படும் பிரதமர் அன்வாரின் செல்வாக்கிற்கு இது ஒரு அளவுகோளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அங்குள்ள இந்திய வாக்காளர்கள் செய்யும் முடிவு கிட்டதட்ட நாடு முழுமையிலுமுள்ள நமது ஒட்டு மொத்த சமூகத்தின் மன நிலையையும் பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது.

நம் சமூகத்தினரை ‘கில்லிங்’ என்று சொன்னது முதல், இந்து இளைஞர் ஒருவரை மத மாற்றம் செய்தது, இந்திய பல்கலைக் கழக மாணவி ஒருவரின் கேள்விக்கு எடக்கு மடக்காக பதிலுரைத்தது, நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பேசும் அமைச்சர் ஒருவரை நியமனம் செய்யாதது மற்றும் நமக்கான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலிருப்பது, ஆகியவற்றினால் நமது சமுதாயம் அவர் மீது பெரும் அதிருப்தியில் உள்ளது.

ஆகக் கடைசியாக 2 வாரங்களுக்கு முன், மலாய்காரர்களுக்கு தாம் வழங்கும் சலுகைகளைக் கண்டு இந்தியர்கள் கோபப்படவோ பொறாமைப்படவோ கூடாது என நம் மீது அவர் சுமத்திய வீண் பழியானது, அவர் மீதான நமது மனக் கசப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

எது எப்படியோ, “ஓட்டுப் போடாதீர்கள்” என ஒரு சிலர் செய்யும் வீண் பிரச்சாரங்களுக்கு செவிசாய்க்காமல், அங்குள்ள எல்லா வாக்காளர்களும் நிலமைகள கவனமாக மீளாய்வு செய்து தங்களுடைய ஜனநாயக கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும். வாக்காளர்கள் தங்களின் ஆதரவை அல்லது ஆதங்கத்தை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.