கல்விக்கும் குடும்பத்திற்கும் இடையே போராடிய  விமலாம்பிகை

அன்னையர் தின சிறப்புக் கட்டுரை ~இராகவன் கருப்பையா

எப்படியாவது ஒரு பட்டதாரியாகிவிட வேண்டும் எனும் வேட்கை சற்றும் தனியாத நிலையில், 3 குழந்தைகள் பிறந்த பிறகு பல்கலைக் கழகம் சென்று பட்டப்படிப்பை முடித்து தமது குறிக்கோளை நிறைவேற்றினார் விமலாம்பிகை.

தாம் கடந்த வந்த கரடு முரடான பாதைகளை தமது 3 பிள்ளைகளுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி தற்போது அவர்களையும் பட்டதாரிகளாக உருவாக்கி மகிழ்வடைந்துள்ளார் கெடா, கூலிமைச் சேர்ந்த, பணி ஓய்வு பெற்ற இந்த இடைநிலைப் பள்ளி ஆசிரியை.

ஜொகூர், மூவாரில் உள்ள பாலோ எனுமிடத்தில், பெங்காளான் புக்கிட் தோட்டத்தில் பாண்டுரங்கன், சின்னம்மா தம்பதிகளின் 3 பிளைகளில் மூத்த மகளாக பிறந்த விமலாம்பிகை இளவயதிலேயே பெற்றோரோடு சேர்ந்து குடும்ப சுமைகளை சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

தோட்டப்புற வாழ்க்கை தமக்கு மிகவும் சவால் மிக்க காலமாக இருந்தது என்று கூறும் அவர் தண்ணீர், மின்சாரம் மற்றும் முறையான கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாமல் அங்கு அவதிப்பட்ட துன்பங்களை நினைவுகூர்ந்தார்.

“இரவு முழுவதும் மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் பள்ளிப்பாடங்களை செய்துவிட்டு காலையில் கண்ணாடியில் பார்த்தால் முகத்தில் கரி படிந்திருக்கும். அதனை கழுவக்கூட தண்ணீருக்கு நீண்ட தூரம் போக வேண்டியிருக்கும்.”

பஞ்சூரில் உள்ள லணாட்ரோன் தோட்ட தமிழ் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும் இடை நிலைக் கல்வியை மூவாரில் உள்ள துன்  பேரா மற்றும் டத்தோஸ்ரீ ஆமார் டிராஜா பள்ளிகளிலும் அவர் நிறைவு செய்துள்ளார்.

“அந்த காலக்கட்டத்தில் புத்தகங்கள் கூட முழுமையாக வாங்க வசதியில்லாத நிலையில் சீன தோழி ஒருவரிடம் இரவல் வாங்கி படித்த அனுபவங்களும் உண்டு. எஸ்.ஆர்.பி. மற்றும் எஸ்.பி.எம். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற போதிலும் குடும்ப சூழல் காரணமாக மேல் படிப்பை என்னால் தொடர இயலாத நிலையில் அருகில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றேன்”.

“எனது எஸ்.பி.எம். தேர்வின் முடிவுகளைப் பார்த்த என் முன்னாள் தமிழ் பள்ளியின் தலைமையாசிரியர் கண்ணன், எனக்குத் தெரியாமலேயே என் சார்பாக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்தார். அத்தருணத்தில் அவர் செய்த உதவியை என்னால் மறக்கவே முடியாது. அம்முயற்சியால் 1981ஆம் ஆண்டு மே மாதத்தில் லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தேன்.”

“மூன்று ஆண்டுகள் கழித்து சிலாங்கூர், கோலசிலாங்கூரில் உள்ள சுங்ஙை தெராப் தமிழ் பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கிய போதிலும் இன்னும் ஒரு பட்டதாரியாகவில்லையே எனும் ஏக்கம் என்னுள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருந்தது.”

இந்த காலக்கட்டத்தில்தான் சக ஆசிரியர் சந்திரசேகரனை கரம் பிடித்தார் விமலாம்பிகை. அதன் பிறகு 1985ஆம் ஆண்டில் பஹாங், கோல லிப்பிஸில் உள்ள செல்போர்ன் தோட்ட தமிழ் பள்ளிக்கு மாற்றப்பட்ட அவர் 1987ஆம் ஆண்டில் பெந்தாவில் உள்ள புடு தோட்ட தமிழ் பள்ளியில் பணியைத் தொடர்ந்தார்.

பிறகு 1989ஆம் ஆண்டில் கெடாவிற்கு மாற்றலாகி 3 ஆண்டுகளுக்கு பாடாங் செராயில் உள்ள விக்டோரியா தோட்ட தமிழ் பள்ளியில் கல்வி கற்பித்தார் விமலாம்பிகை.

மூன்று பிள்ளைகள் பிறந்த பிறகுதான் தமது நீண்டநாள் கனவான உயர் கல்வி வாய்ப்பு அமைந்தது என்று கூறும் அவர், 1992ஆம் ஆண்டில் சிலாங்கூர், பாங்ஙியில் உள்ள மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

“ஆசிரியர் பணியில் இருந்து விடுப்பு எடுத்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்த எனக்கு அந்த சமயத்தில் பாதி சம்பளமாக 450 ரிங்கிட்தான் கிடைத்தது. என் கனவரின் பெற்றோர் உள்பட மொத்தம் 7 பேர் கொண்ட குடும்பத்தை சமாளிக்க அந்த சமயத்தில் எங்களுக்கு மிகவும் சிறமமாகத்தான் இருந்தது. எனினும் பட்டதாரியாக வேண்டும் எனும் எனது இலக்குதான் அத்தருணத்தில் எனக்கு பெரிதாகத் தெரிந்தது.”

“அந்த காலக்கட்டத்தில் எனது இளைய சகோதரர் உத்திராபதி எனது படிப்புச் செலவுக்கும் உணவுக்கும் மாதம் 150 ரிங்கிட் கொடுத்து உதவி செய்ததையையும் என்னால் மறக்க முடியாது. சில வேளைகளில் என் கையில் ஒரு ரிங்கிட்தான் இருக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சிலாங்கூரிலிருந்து கெடா திரும்பி 3 குழந்தைகளையும் பார்க்கும் போது எனக்கு தனி உற்சாகம் ஏற்படும். நான்கு ஆண்டுகள் குடும்பத்தை பிரிந்து பட்டப்படிப்பிற்காக நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.”

1996ஆம் ஆண்டில் ஒரு பட்டதாரியாக கூலிமில் உள்ள சியோ மின் இடைநிலை பள்ளியில் ஆசிரியர் பணியை மீண்டும் தொடர்ந்ததாகக் கூறும் விமலாம்பிகை இடைபட்ட காலத்தில் 2013ஆம் ஆண்டு வரையில் அரசியலிலும் கோலோச்சியுள்ளார். தாம் சார்ந்த கட்சியின் மாநில மகளிர் பகுதி செயலாளர், துணைத் தலைவர் மற்றும் தேசிய நிலையில் உச்சமன்றம் வரையில் உயர்ந்துள்ளார்.

அதன் பிறகு பொதுச் சேவையில் ஈடுபடத் தொடங்கிய அவர், கூலிம் இளையோர் நீதிமன்ற ஆலோசகராகவும் கூலிம் மருத்துவ கிளினிக்கின் ஆலோசகர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார். அது மட்டுமின்றி ‘புஸ்பென்’ எனப்படும் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தின் ஆலோசகர் குழுவிலும் கூலிம் இந்து சங்க செயலவையிலும் முக்கிய பங்காற்றுகிறார்.

தமிழில் குறுங்கதை, சிறுகதை மற்றும் அனுபவக் கட்டுரைகள் எழுதுவதிலும் கைதேர்ந்வரான விமலாம்பிகை, அத்துறையிலும் கூட பல பரிசுகளை பெற்றுள்ளார்.

உள்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளுக்கு தற்போது குடி பெயர்ந்துள்ள தமது முன்னாள் மாணவர்களில் பலர் இன்னமும் தம்மை அழைத்து அன்பு மழை பொழிவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறும் விமலாம்பிகையின் மூத்த புதல்வி மாலினி ஒரு மருத்துவராக உள்ளார். மகன் அரவின் மருந்தாளராகவும் கடைசி மகன் சுரேந்தர் ஒரு பொறியியலாளராகவும் பணியாற்றுகின்றனர்.