தமிழ்ப்பள்ளியை தரத்துடன் தாண்ட கைகொடுத்த புவனேஸ்வரி

ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை ~இராகவன் கருப்பையா – இடைநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் படிவத்தில் தடம் பதிக்கவிருக்கும் நமது ஆறாம் வகுப்பு மாணவர்களை முறையாக செம்மைப்படுத்துவதே தமது முதன்மைக் குறிக்கோள் என்று கூறுகிறார் ஆசிரியை புவனேஸ்வரி.

இதுநாள் வரையில் அவர் பணியாற்றியுள்ள அத்தனை பள்ளிக் கூடங்களிலும் இதற்காகவே தமது நேரத்தின் பெரும்பகுதியை  செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் வகுப்பில் சிறப்பான அடைவு நிலை இல்லையென்றால் ஒன்றாம் படிவத்தில் கால் பதிக்கும் முன் அவர்கள் புதுமுக வகுப்பிற்கு செல்ல வேண்டியிருக்கும். இதனால் அவர்களுடைய முன்னேற்றம் சற்று தாமதமாகிறது.

எனவே அவர்கள் புதுமுக வகுப்பிற்கு செல்லாமல் நேரடியாக படிவம் 1க்குச் செல்வதற்கான ஆற்றலை அவர்களிடையே  உருவாக்கி அதனை வலுப்படுத்துவதே தமது தலையாய நோக்கம் என்று கூறுகிறார் ஜொகூர், குளுவாங்ஙில் உள்ள மெங்கிபோல் தோட்ட தமிழ் பள்ளியின் தலைமையாசிரியையான புவனேஸ்வரி.

இத்தகைய அயராத முயற்சிகளின் பலனாக, வாழ்நாளில் தாம் மாற்றலாகிச் சென்ற எல்லா பள்ளிகளிலுமே ஆறாம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் 7ஏ மற்றும் 8ஏ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட பெருமளவில் அதிகரித்தது தமக்கு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது என்றார் அவர்.

பேராக், தைப்பிங்ஙில், ஆறுமுகம் – சரோஜினி தம்பதிகளின் 5 பிள்ளைகளில் 3ஆவதாக பிறந்தவர்தான் புவனேஸ்வரி. தந்தையின் பணியிட மாற்றம் காரணமாக அவர்கள் பிறகு குளுவாங்ஙில் குடியேறினார்கள்.

தமது ஆரம்பக் கல்வியை 1971ஆம் ஆண்டில் ஹாஜி மனான் தமிழ் பள்ளியில் தொடங்கிய அவர் கான்வேன் பள்ளியில் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்த பிறகு 1991ஆம் ஆண்டில் தலைநகர் ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டில்  ஒ.யு.எம். பல்கலைக்கழகத்தில் சேர்ந்த புவனேஸ்வரி 3 ஆண்டுகள் கழித்து இளங்கலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.

தமது ஆசிரியை பணியை சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள விவேகானந்தா தமிழ் பள்ளியில் தொடங்கிய அவர் 1998ஆம் ஆண்டில் குளுவாங்ஙிற்கு மாற்றலாகி பாமோல் தமிழ் பள்ளியில் சேவையைத் தொடர்ந்தார்.

பிறகு 2001 ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரையில் தாம் பயின்ற ஹாஜி மனான் தமிழ் பள்ளியிலேயே ஆசிரியையாக பணியாற்றியதை தம்மால் மறக்க இயலாது என்று கூறும் புவனேஸ்வரி 2008ஆம் ஆண்டில் தலைமையாசிரியையாக பதவி உயர்வு பெற்று மெர்சிங் தமிழ் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

ஒரு ஆண்டுக்குப் பிறகு யொங் பெங் தமிழ் பள்ளிக்கு பணியிட மாற்றம் கண்ட அவர் 2012ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு லம்பாக் தமிழ் பள்ளியில் சேவையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையில் புக்கிட் ரெங்கம் தமிழ்  பள்ளியில் பணியாற்றிய போது கோவிட் பெருந்தொற்று பெருத்த சவாலாக இருந்தது என்றார் அவர்.

கோரனி நச்சிலின் தாக்கம் தணிந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக குளுவாங் மெங்கிபோல் தோட்ட தமிழ் பள்ளியில் சிறப்பாக சேவையாற்றிவரும் புவனேஸ்வரி கல்வித்துறைக்கான  பல்வேறு அரசாங்க விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவற்றுள் குறிப்பிடத்தக்கவை கடந்த 2005ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட ‘சிறந்த சேவைக்கான விருது,’ 2014ஆம் ஆண்டில் கிடைத்த ‘துணைப் பிரதமர் விருது,’ மற்றும் 2016ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட சிறந்த சேவைக்கான மற்றொரு விருது.

“தந்தைதான் எனது கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தவர். அதே போல என் தாயார் பக்க பலமாக இருந்து எனது வெற்றி பாதைக்கு வித்திட்டார்,” என்று கூறும் புவனேஸ்வரியின் கணவர் முனைவர் இளந்தேவன் அண்ணாமலையும் அனுபவமிக்க ஒரு மலாய் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பள்ளிகளில் பயின்று சிறப்பு தேர்ச்சி பெற்ற அவர்களுடைய 3 புதல்விளும் தற்போது பட்டதாரிகளாக உள்ளனர். மூத்த மகள் இளையரசி ஒரு வழக்கறிஞராகவும் இளைய மகள் இளையவாணியும் கடைசி மகள் இளையவேணியும் மருத்துவர்களாக உள்ளனர்.

“ஆறாம் ஆண்டு மாணவர்கள் மீது சற்று அதிகமான கவனம் செலுத்தினால் அவர்கள் தைரியமுடனும் தன்னம்பிக்கையுடனும் ஒப்புவிக்கும் ஆற்றல் வளர்ந்து, வாசிப்பு, எழுத்து, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பாண்டியத்துவம் பெறவும் உதவ முடியும்.”

“இடைநிலைப் பள்ளியில் அவர்கள் எதிர் நோக்கக் கூடிய சவால்களை எதிர் கொள்ள அவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஊன்றுகோலாகவும் இருக்கு முடியும்,” என்று மீண்டும் வலியுறுத்தும் ஆசிரியை புவனேஸ்வரி இவ்வாண்டு இறுதியில் பணி ஓய்வு பெறவிருக்கிறார்.

ஆசிரியர்கள் ஓய்வு பெற்றாலும் அவர்கள் ஆளுமையின் தாக்கம் மாணவர்களின் மனதில்  என்றும் நிறைந்திருக்கும்.

அனைத்து ஆசிரியர்களிக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்