ஆங்கில மொழி வீழ்ச்சிக்கு யார்தான் பொறுப்பேற்பது?

இராகவன் கருப்பையா – ஒரு காலத்தில் மலேசியர்களிடையே ஆங்கில மொழியின் ஆளுமை இதர நாடுகளுக்கு இணையாக உயர் நிலையில் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.

கடந்த 1969ஆம் ஆண்டு வரையில் நம் நாட்டில், குறிப்பாக நகர் புறங்களில் பிரதான தொடர்பு மொழியாக இருந்த ஆங்கில மொழியின் பயன்பாடு பிறகு சன்னம் சன்னமாக குறையத் தொடங்கியது வருந்தத் தக்க ஒன்றுதான்.

தமிழ், மலாய், சீன பள்ளிகளுக்கு நிகராக நாடு தழுவிய நிலையில் இருந்த ஆங்கிலப் பள்ளிகள் கடந்த 1970ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நம் நாட்டில் அம்மொழி தேய்மானத்திற்கு இலக்கானது என்பது வெள்ளிடை மலை.

ஆரம்பப் பள்ளிகளின் முதல் வகுப்புத் தொடங்கி இடைநிலைப் பள்ளிகளில் 5ஆம் படிவம் வரையில் மலாய் மொழிக்கு நிகராக ஆங்கில மொழியும் கட்டாயப் பாடமாக இருந்தது அம்மொழிக்கு ஒரு பொற்காலம் என்றால் அது மிகையில்லை.

அந்த காலக் கட்டத்தில் கல்வி பயின்ற மலேசியர்களின் ஆங்கில மொழி ஆளுமைக்கு இன்று வரையிலும் நிகரில்லை என்ற உண்மையையும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.

உலகின் பிரதான தொடர்பு மொழியாக இருக்கும் அம்மொழி தற்போது நம் நாட்டின் பல நிலைகளில் கண்டுள்ள சரிவுக்கு அரசியல்தான் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

தங்களுடைய சுய லாபத்திற்காக அரசியல் எனும் போர்வைக்குப் பின்னால் மறைந்து கொண்டு இன்று வரையிலும் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் சில அரசியல்வாதிகளின் போக்கினால் பாதிக்கப்பட்ட பல்வேறு விஷயங்களில் ஆங்கில மொழியும் ஒன்று என்பது நிதர்சனம்.

மொழி, இனம், சமயம், ஆகிய அம்சங்களை மட்டுமே தங்களுடைய அரசியல் பயணத்திற்கு அவர்கள் உரமாக பயன்படுத்தியதால் ஆங்கில மொழி சன்னம் சன்னமாக ஒதுக்கப்பட்டு உதாசினப்படுத்தப்பட்டது.

ஆங்கில மொழி கற்பது சிரமம் என குறிப்பிட்ட ஒரு சாரார் அதனைக் கண்டு பயப்படும் அளவுக்கு அம்மொழி பரிதாபகரமான ஒரு நிலையை அடைந்துள்ளது என்பதும் வருந்தத் தக்க ஒன்று. ஆரம்பப் பள்ளிகள் தொடங்கி பல்கலைக்கழகம் வரையில் உள்ள எண்ணற்ற மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களில் பலரும் கூட ஆங்கில மொழியைக் கண்டு அஞ்சுகின்றனர்.

சர்வதேச மாநாடுகளில் நமது தலைவர்களில் சிலர் ஆங்கிலத்தில் தடுமாறிய கேலிக் கூத்துக்கு உள்ளான காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டிய காணொளிகளும் கூட நமக்கு வேதனையை ஏற்படுத்தின.

இதற்கு எல்லாமே அரசியல்தான் காரணம் என தாராளமாகக் கூரலாம்.   மலாய் மொழிதான் தேசிய மொழி, நாட்டின் அதிகாரத்துவ மொழி. இதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. எல்லாராலும் ஏற்றுக்க கொள்ளப்பட்ட ஒன்று. அம்மொழிக்கு எவ்விதமான பங்கமும் இல்லை.

எனினும் மலாய்க்காரர்களின் ஆதரவை பெறும் ஒரே நோக்கத்தில், ‘மலாய் மொழியைக் காப்பாற்ற வேண்டும்’ என ஆங்கிலத்தை ஒதுக்கி வீண் விதண்டாவாதம் செய்யும் சில அரசியல்வாதிகள் இன்னமும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.

இதனால் ஆங்கில மொழிக்கு ஏற்படும் அவலத்தைதைப் பற்றியோ நாடுக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியோ அவர்களுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை. ‘மலாய் மொழிக்குக் காவலன்’ எனும் பெயரை சம்பாதிப்பது மட்டுமே அவர்களுடைய ஒரே நோக்கம்.

பிரதமர் அன்வார் கூட அண்மையில் செய்த ஒரு திடீர் அறிவிப்பு நாடலாவிய நிலையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது, அரசாங்க அலுவலகங்களுக்கு வரும் கடிதங்கள் மலாய் மொழியில் இல்லையென்றால் உடனே அவை திருப்பி அனுப்பப்படும் என மிகக் கடுமையான ஒரு விதிமுறையை பிரகடனம் செய்தார்.

சரவாக் மாநிலம் உள்பட பலருக்கு அந்த அறிவிப்பு ஏற்புடையதாகப் படவில்லை. “எங்கள் மாநிலத்தில் அப்படி செய்யமாட்டோம், எந்த மொழியில் கடிதங்கள் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்,” என சரவாக் மாநில அரசாங்கம் உடனே அறிவித்தது.

மலேசியாவில் சீரான ஒரு கல்விக் கொள்கை இல்லாததும் ஒரு பின்னடைவுதான். ஒவ்வொரு முறை கல்வியமைச்சர் மாறும் போது, கொள்கைகளும் திட்டங்களும் மானாவாரியாக மாற்றப்படுகின்றன. பல வேளைகளில் அவற்றில் தூர நோக்கு இருப்பதில்லை. ஆங்கிலம் தொய்வடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்பதில் ஐயப்பாடு இல்லை.

நம் நாட்டில் ஆங்கிலம் கற்பிக்க சிங்கப்பூரிலிருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவர் என அண்மையில் பிரதமர் செய்த ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து அம்மொழி சம்பந்தமான விவாதம் மீண்டும் இங்கு தலை தூக்கியது குறிப்பிடத்தக்கது.