குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் ம.இ.கா.வில் மீண்டும் அணிகளும் பனிப்போரும்

இராகவன் கருப்பையா – தேசிய முன்னணி கட்சியின் முதுகெழும்பாக திகழ்ந்த அம்னோவின் ஆட்டம் மாற்றம் கண்டு வரும் அரசியலால் வெகுவாக அடங்கி விட்டதும், அதன் பின்னணியில் இன-சமயவாத கட்சியான பாஸ்  எழுச்சி கண்டு வருவதும் ஒரு சிறுபான்மை  இனமான இந்தியர்களுக்கு ஒரு மாபெரும் சவாலாக உருவாகி உள்ளது.

இந்த யதார்த்தத்தின் இடையே, மஇகாவின் தற்போதைய நிலை நமக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறது.

இவ்வாரம் நடந்து முடிந்த ம.இ.கா.வின் கட்சி தேர்தல்களின் அதிர்ச்சி தரும் முடிவுகள் அக்கட்சி தனது பழைய அவல நிலைக்குத் திரும்பியுள்ளதைப் போலான ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

மற்றத் தலைவர்களோடு ஒப்பிடுகையில் அக்கட்சியின் மிகவும் பலம் பொருந்திய ஒரு தலைவராகக் கருதப்பட்ட அதன் முன்னாள் உதவித் தலைவர் டி.மோகன் தனது பதவியைத் தற்காக்கத் தவறிவிட்டார்.

ம.இ.கா.வின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் தனக்கு எதிராக திரைமறைவில் அரங்கேற்றிய சூழ்ச்சியே தனது தோல்விக்குக் காரணம் எனும் மோகனின் பகிரங்கக் குற்றச்சாட்டு அனைவருடைய புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் சாமிவேலு அதிகாரத்தில் இருந்த சமயத்தில் அவருக்கும் அப்போதைய துணைத் தலைவர் சுப்ரமணியம் சின்னையாவுக்கும் இடையில் அரசியல் பகைமை சற்று தீவிரமாக இருந்தது எல்லாருக்கும் தெரியும். எனவே இயல்பாகவே சாமிவேலு அணி, சுப்ரமணியம் அணி என அக்காலக்கட்டத்தில் ம.இ.கா. பிளவுபட்டிருந்தது.

அந்த பிளவு கொஞ்ச நஞ்ச காலமில்லை. நீண்ட நாள்களாகவே சாமிவேலுவுக்கும் சுப்ரமணியத்திற்கும் இடையில் ஒரு பெரும் அரசியல் போராட்டமாகவே இருந்தது அப்பட்டமான ஒரு விஷயம்.

சுப்ரமணியம் முழு அமைச்சராகவோ கட்சியின் தேசியத் தலைவராகவோ ஆகிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சாமிவேலு எவ்வாறான சதித்திட்டங்களை எல்லாம் தீட்டினார் என்பது அரசியல் வட்டாரத்தில் ‘உள்ளங்கை நெல்லிக்கணி’.

சுப்ரமணியத்தை வீழ்த்திவிட்டு, அரசியல் அனுபவம் இல்லாத தனது பத்திரிகைச் செயலாளர் பழனிவேலுவை ம.இ.கா.வின் தலைவராகத் திணிக்க வகை செய்ததும் சாமிவேலுதான்.

அதனைத் தொடர்ந்து பழனிவேலு – சுப்ரமணியம் சதாசிவம் காலத்தில் அக்கட்சியில் அணி இருந்ததாகத் தெரியவில்லை.

அதே போல விக்னேஸ்வரன் – சரவணன் கூட்டணியிலான தலைமைத்துவத்திலும் அணி இல்லை எனும் சூழல்தான் நிலவி வருகிறது.

எனினும் இளைஞர் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகள் உள்பட நீண்ட நாள்களாக ம.இ.கா.வின் சக்திமிக்க ஒரு அரசியல் சின்னமாக விளங்கிய மோகனின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு இப்போது  சூழ்ச்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது.

சுமார் 28 ஆண்டுகளாக அக்கட்சியின் உறுப்பினராக இருந்துவரும் அவர் தொடர்ச்சியாக 3 தவணைகளுக்கு உதவித் தலைவர் தேர்தலில் முதல் நிலையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறை ஜொகூர் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முதல் நிலையிலும்,  முன்னாள் துணையமைச்சர் முருகையா 2ஆம் நிலையிலும் நெல்சன் 3ஆவது நிலையிலும் வெற்றி பெற்றனர்.

மோகனோடு ஒப்பிடுகையில் அரசியலில் நெல்சன் ஒரு கத்துக்குட்டிதான். இருந்த போதிலும் விக்னேஸ்வரன் மறைமுகமாக ஒரு அதிகாரத்துவ அணியை அமைத்து தன்னை வீழ்த்தியுள்ளதாக மோகன் குற்றஞ்சாட்டினார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த விக்னேஸ்வரன் இவ்வாறு செய்வார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.

வெகு விரைவில் ம.இ.கா.வின் அடுத்த நிலைக்கு உயர மோகன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. இதனைத் தடுக்கத்தான் இந்த மறைமுக நாடகம் என்றும் சொல்லப்படுகிறது.

தலைநகரில் அண்மையில் நடைபெற்ற மாபெரும் விருந்து நிகழ்ச்சியொன்றில் பேசிய ஒரு பிரமுகர், அங்கு வருகை புரிந்திருந்த மோகனை ‘அடுத்த ம.இ.கா. தலைவர்’ என்றுதான் அறிமுகப்படுத்தினார்.

மோகன், கட்சியின் துணைத்தலைவர் சரவணனைத் தாண்டி மேல் நிலைக்குச் செல்ல வேண்டும் எனும் தோரணையில் அந்த பிரமுகர் அப்படி பேசியதாகத் தெரிகிறது.

அப்படியொரு எண்ணம் மோகனுக்கு இருந்ததா தெரியவில்லை. ஆனால் இது போன்ற சலசலப்புகள் கட்சியின் மேலிடத்தில் ஒருவித ஆட்டத்தை  ஏற்படுத்தியிருக்கலாம்.

ஒட்டு மொத்தமாக இவைகளுக்கு மத்தியில் இருப்பது கண்டிப்பாக கட்சி அரசியல் பலம் சார்ந்தது என்பதை விட கட்சியின் சொத்து மதிப்பைதான் அதிகம் சார்ந்து இருக்கும் என்றும் எண்னத்தோன்றுகிறது.