தவிர்த்திருக்கப்பட வேண்டிய அனாவசிய மரணங்கள் -1

(பகுதி 1)- இராகவன் கருப்பையா –  கடந்த சில வாரங்களில் ஒட்டு மொத்த சமூகத்தையும் உலுக்கிய பரிதாபகரமான இரு மரணங்கள் உண்மையிலேயே தவிர்த்திருக்கப்பட வேண்டிய அசம்பாவிதங்கள்.

‘டிக்டொக்’ பிரபலம் ராஜேஸ்வரியும் பணி ஓய்வு பெற்றவர் என்று நம்பப்படும் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நமக்கெல்லாம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்கொலை என்பது ஆண்டுக் கணக்கிலோ, மாதக் கணக்கிலோ, பல வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டோ முடிவெடுக்கப்பட்டும் ஒரு துரதிர்ஷ்டம் இல்லை.

அனேகமாக அதற்கான காரணங்கள் சம்பந்தப்பட்வர்களின் மனங்களை நீண்ட நாள்களாகவே வருத்தியிருக்கலாம். ஆனால் தன் உயிரை சுயமாக மாய்த்துக் கொள்வதற்கான ஒருவரின் முடிவு பெரும்பாலும் கடைசி  நேரங்களில்தான் மேற்கொள்ளப்படுகிறது.

இத்தகைய மன உளைச்சலில் அவதிப்படுபவர்களிடம் குறைந்தது 10 அல்லது 15 நிமிடங்கள் யாராவது ஆறுதலாகவும், பாசமாகவும், பரிவுடனும், தன்முனைப்பாகவும் பேசினால் தனது முடிவை அவர் மாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நமது நண்பர்களோ உறவினர்களோ மன உளைச்சலில் இருந்தால் அவர்களை தனிமையில் விடாமல் அவர்களிடம் பேசினால் ஒரு பொன்னான உயிரைக் காப்பாற்றக் கூடிய சாத்தியம் உள்ளது என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அண்மையில் நிகழ்ந்த விசித்திரமான ஒரு சம்பவம் நம் சமூகத்திற்கு வியப்பையும் கூடவே சோகத்தையும் கொண்டு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பணி ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர் என்று நம்பப்படும் ஒருவர் முதல் நாள் இரவு நண்பர்களுடன் தமாஷாக பேசிக் கொண்டிருக்கும் போது, மறுநாள் தாம் தற்கொலை செய்து கொளாளப்போவதாகக் கூறிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.

சொன்ன மாதிரியே அதற்கு அடுத்த நாள் தனது உயிரை அவர் மாய்த்துக் கொண்டதுதான் பெரும் அதிர்ச்சி என்பது மட்டுமின்றி அதிகமானோரை துயரத்தில் ஆழ்த்தியது.

உளவியல் வல்லுனர்களின்  கூற்றுப்படி, முதல் நாள் அவருடன் உரையாடிய நண்பர்கள் அவருடைய மன நிலையை அறிந்து அதற்கேற்றவாறு அவருடன் நாசூக்காக பேசியிருந்தால் ஒருவேளை அவரைக் காப்பாற்றியிருக்கலாம்.

இந்த சோகத்திலிருந்து நாம் மீள்வதற்குள் ராஜேஸ்வரியின் மரணம் ஈட்டி போல் நம்மைத் தாக்கியது. இவ்வாறு மரணத்தைத் தழுவுபவர்கள் நமக்கு நண்பர்களாகவோ உறவினர்களாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

மனிதாபிமானக் கோணத்தில் பார்க்கும் போது அந்த மரணங்களின் பின்னணி அல்லது அவை நிகழ்ந்த விதம் நம் மனங்களை வெகுவாக பாதிக்கவே செய்கிறது.

சம்பந்தமே இல்லாத, சற்றும் அறிமுகம் இல்லாதவர்ளின் இயங்கலை வழியிலான பகடி வதையினால் மனமுடைந்து ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாகத் கூறப்படுகிறது.

அந்த இளம் பெண்ணின் துயரமான முடிவும் கூட தவிர்த்திருக்கப்பட வேண்டிய ஒரு அனாவசிய மரணம்தான் என்பதில் துளியளவும் ஐயமில்லை.