பகுதி 2 – ~இராகவன் கருப்பையா – தற்கொலை என்பது ஒருவரின் மனதானது முழுமையாக ஒருவகையான விரக்தியால் நிரம்பி தனது நிலைப்பாடி மரணத்தை தவிர மாற்று வழி இல்லை என்ற உந்ததலுக்கு ஆளாகும் .
இது கோழைத்தனமும் துணிச்சலும் கலந்த ஒரு துயரச் சம்பவம். ஏனெனில் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல், மன உளைச்சலை சமாளிக்க இயலாமல் அல்லது கடுமையான விரக்திக்கு உள்ளாகிதான் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார். இதனை கோழைத்தனம் என்று வகைப்படுத்தலாம்.
ஆனால் சுயமாக மரணத்தைத் தழுவ தயாராகும் ஒருவருக்கு, அப்படியொரு முடிவை எடுக்க கண்மூடித்தனமான, அசாத்திய துணிச்சல் வேண்டும் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
எனினும் சமீப காலமாக நம் சமூகத்தை சோகத்தில் ஆழ்த்தி வரும் தற்கொலைச் சம்பவங்களில் பெரும்பாலானவை சமூக வலைத்தளங்களில் 3ஆம் தரப்பினரால் உந்தப்பட்டு நிகழும் துயரங்கள் என்பது மிகவும் வருந்தத் தக்க ஒன்றாகும்.
இயங்கலை வழியிலான இத்தகைய பகடி வதைகளினால் மன உளைச்சலுக்கு ஆளாகி நம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆகக் கடைசியாக, நம் சமூகத்தினர் மட்டுமின்றி ஒட்டு மொத்த மலேசியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது ‘டிக் டொக்’ புகழ் ராஜேஸ்வரியின், தவிர்த்திருக்கப்பட வேண்டிய அனாவசிய மரணம்தான்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள், தம்மை பகடி வதை செய்த இருவருக்கு எதிராக ராஜேஸ்வரி காவல் துறையில் புகார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய மன நிலை அறிந்து காவல் துறை அதிகாரிகள் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நேர்மறையான ஆலோசனைகளை வழங்கினார்களா அல்லது அது தங்களுடைய வேலையில்லை என்றெண்ணி ஒன்றும் செய்யவில்லையா தெரியவில்லை.
எனினும் அவரை பகடி வதை செய்த ஒரு பெண்மணியை காவல் துறையினர் துரிதமாகக் கைது செய்து உடனே நீதிமன்றத்தில் ஏற்றியது பாராட்டத்தக்க ஒன்று.
ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் சில அமைச்சர்கள் உள்பட இலட்சக் கணக்கானோரின் சினத்திற்கு வித்திட்டது. குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்தப் பெண்ணுக்கு வெறும் 100 ரிங்கிட் மட்டுமே அபராதம் என்பது சட்ட ரீதியான ஒன்றுதான் எனும் போதிலும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய போது பந்தாவாக அவர் நடந்து வந்த விதம் பலரை கோபத்தின் உச்தத்திற்கு கொண்டு சென்றது.
ராஜேஸ்வரியைப் போலவே பகடி வதைகளுக்கு ஆளாகி தங்களுடைய உயிர்களை பரிதாபகரமாக மாய்த்துக் கொண்ட மேலும் இரு இந்திய பெண்களையும் நாம் நினைவு கூறத்தான் வேண்டும்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் 3 பிள்ளைகளுக்குத் தாயான ‘டிக் டொக்’ புகழ் ஷஷிகலா நடராஜா(வயது 44) பகடி வதை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு முன் கடந்த 2020ஆம் ஆண்டில் பினேங் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது திவ்ய நாயகி ‘டிக் டொக்’ தளத்தில் அவமானப்படுத்தப்பட்டதால் துயரம் தாளாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இவர்கள் எல்லாருமே கொஞ்சமும் அறிமுகம் இல்லாத, மற்றவர்களின் துன்பத்தில் சுய இன்பம் காணும் சில தரம் கெட்ட ஜென்மங்களின் அறிவிலித்தனமான பகடி வதைகளுக்கு இலக்காகி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
நம் சமூகத்தைச் சேர்ந்த பல பெண்கள் தற்போது ‘டிக் டொக்’ போன்ற சமூக வலைத்தளங்ளை பயன்படுத்தி வியாபாரத் துறையில் கோலோச்சி வருகின்றனர்.
அண்மையில் ஒரு பெண் ‘ஆண் வீரியம்’ தொடர்பான மருந்து வகைகளை கொஞ்சமும் விரசம் இல்லாமல் விளக்கம் சொல்லி பயனீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இது, அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொருளை வினியோகம் செய்யும் சாதாரணமானதொரு வியாபாரம்தான். சீனப் பெண்களும் மலாய்க்காரப் பெண்களும் கூட இவ்வாறு செய்கின்றனர்.
ஆனால் நம் இனத்தைச் சேர்ந்த சில தறுதலைகள் இந்தியப் பெண்களை மட்டுமே குறி வைத்து கிண்டலும் கேலியும் செய்து கேவலமாகவும் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் விமர்சனம் செய்து இன்பம் காண்கின்றனர்.
உள்நாட்டில் மட்டுமின்றி அனைத்துலக நிலையிலும் கூட இன்று புகழ்பெற்ற தொழில் முனைவர்களாகவும் வெற்றி பெற்ற தொழிலதிபர்களாகவும் இருப்பவர்களில் பெரும்பாலோர் தொடக்க காலத்தில் சாதாரண விற்பனையாளர்களாகத்தான் இருந்திருக்கின்றனர்.
ஆக வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் நம் பெண்களை ஊக்கப்படுத்தி ஆதரவளிக்காவிட்டாலும் பரவாயில்லை, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர்களை அவமானப்படுத்தி அதில் சுகம் காணக் கூடாது.