கல்வியில் பாராபட்சம் காட்டுவது கடும் துரோகமாகும்

கி.சீலதாஸ் – பல உலக நாடுகள் ஜனநாயகத்தைத் தங்களின் அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் என்றவுடன் அது பொதுவாக மக்களின் நலனைக் குறித்ததாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். ஜனநாயகம் என்ற போர்வையின் அடியில் அராஜக ஆட்சி தலைவிரித்தாடுவதும் உண்டு. நாட்டுக்கு நாடு ஜனநாயகத் தத்துவம் பல வேறுபாடுகளுடன் செயல்படுவது ஆச்சரியமல்ல.

மலேசியாவும் ஜனநாயகத்தைத் தனது அரசியல் கோட்பாடாகக் கொண்டிருக்கிறது. இதற்குச் சான்று நமது அரசமைப்புச் சட்டத்தின் அமைப்பைப் பார்க்கும் போது அதனுள் இணைந்திருக்கும் ஜனநாயகத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம்.

அரசமைப்புச் சட்டம்

நாட்டு நிர்வாகம் எவ்வாறு இயக்கப்பட வேண்டும், அதற்கான சட்டங்கள், வழிமுறைகள் என்ன என்பதை அரசமைப்புச் சட்டம் வழிகாட்டுகிறது. நாட்டு நலன் எனும்போது அது மக்களின் நலனை உட்பட்டதாகும்.

இவற்றைக் குறித்து சட்டங்கள் இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றிருக்கிறது என்றால் அந்த அதிகாரத்தை வழங்குவது அரசமைப்புச் சட்டம். நாடாளுமன்றம் அமர்வில் இல்லாத போது சட்டம் இயற்றும் தகுதியை அமைச்சரவை கொண்டிருக்கிறது.

இது தற்காலிக ஏற்பாடு. மாமன்னரின் ஒப்புதல் தேவை. அந்தச் சட்டத்தை அங்கீகரித்து நிரந்தரப்படுத்தும் அதிகாரம் அல்லது அதை ரத்து செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு.

எனவே, அரசமைப்புச் சட்டத்தின் பலத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் வழிமுறையைக் காட்டும் அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மக்கள். மக்களின் நலனும் நாட்டு நலமும் தான் முக்கியம். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

நாட்டு மக்களின் விருப்பத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் உத்திரவாதம் அளிப்பது அரசமைப்புச் சட்டம். அடிப்படை உரிமைகள் என்றால் என்ன என்பதை விளக்கப்படாவிட்டாலும் அடிப்படை மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பு உண்டு என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சமயம், கல்வி, மனிதனின் அடிப்படை உரிமைகள் யாவும் அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்புக்கு உட்பட்டவையாகும்.

நீதித்துறை

அதுபோலவே நாட்டை நீதி தவறாமல் பரிபாலனம் செய்யும் பொறுப்பு ஆட்சி செய்வோருக்கு உண்டு. அதில் நீதித்துறை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கருவியாக இயங்குவதையும் மறுக்க முடியாது.

ஆட்சி நிர்வாகிகளின் தவறான போக்கை வெட்டி சாய்க்கும் கோடாரியாகவும், மக்களுக்குத் தீங்கு வராது காக்கும் கவசமாகவும் விளங்குவது நீதித்துறை. இந்த அதிகாரத்தையும் நல்குவது அரசமைப்புச் சட்டம்தான்.

கல்வியும் சுகாதாரமும்

கல்வி என்றால் அது நாடு செம்மையாகச் செயல்பட உதவும் பலவிதமான கல்விகளைக் குறிக்கிறது. ஆரம்பக்கல்வி, இடைநிலைப்பள்ளி, கல்லூரி கல்வி யாவும் பொது அறிவை வளர்க்கும் தரத்தைக் கொண்டிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால், மக்களின் சுகாதாரம் அதிமுக்கியமானதாகும். சமுதாயத்திற்குத் தேவையான மருத்துவர்களைத் தயார்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உண்டு. எனவே, தரமான மருத்துவக் கல்வி தேவை. சிறப்பான மருத்துவக் கல்வி பெற்றவர்கள் தேவை. புதுப்புது நோய்கள் உருவாகின்றன. அவற்றைத் தவிர்க்கும் நூதன மருத்துவ ஆய்வு தேவைப்படும்.

இதற்குத் தரமான, திறமையான மாணவர்கள் தேவை. அவர்களை எப்படி திரட்டுவது? இதுவே அரசின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றும் விந்தை அல்லவே.

நீதித்துறை மிகவும் முக்கியமானது என்று சொன்னால் போதாது. அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். சுயேச்சையான நீதித்துறை தேவை. எதற்கும் அஞ்சாத, அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்தும் நீதிபதிகள் தேவை.

நீதி பரிபாலனம் எனின் வழக்குரைஞர்களும் தேவை. எனவே, அளவு மீறிய வருமானத்தைக் குறிக்கோளாகக் கொள்ளாத, உண்மைக்குக் குரல் தரும் நேர்மையான வழக்குரைஞர்கள் தேவை. இவையன்றி நாட்டு நிர்வாகத்தைச் செம்மையாக வழிநடத்தி செல்ல திறமையான நிர்வாகிகள் தேவை.

காவல் துறை

நாட்டில் சட்ட ஒழுங்கு காணப்பட வேண்டும். திறமையான காவல் துறை தேவை. நீதியான முறையில் தேர்தல் நடக்க வேண்டுமானால் அதை நடத்தும் பாராபட்சமற்ற நிர்வாகிகள் தேவை. எனவே, நாட்டின் ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் ஆளுமையுடைய அதிகாரிகள் தேவை. நிர்வாக முறையைக் கற்றவர்கள் தான் ஒவ்வொரு பொறுப்பை ஏற்க முடியும் என்ற அரசமைப்புச் சட்டம் சொல்லவில்லை.

ஆனால், இவற்றைக் கவனிக்கும் விதிகள் உள்ளன. அந்த விதிகளை இயற்றப்படும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்திருக்கிறது அரசமைப்புச் சட்டம்.

கல்வியில் வேறுபாடு காட்டப்பட மாட்டாது

கல்விக்கான உரிமையைப் பற்றி நம் அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? எந்த குடிமகனுக்கும் (குடிமகள் உட்பட) சமயம், இனம், மரபு வழி அல்லது பிறப்பிடம் போன்ற காரணத்தால் கல்வியில் வேறுபாடு காட்டப்பட மாட்டாது என்கிறது அரசமைப்புச் சட்டத்தின் 12(1)ஆம் பிரிவு.

இது அற்புதமான தூர நோக்குடைய அரசமைப்புச் சட்டத்தின் எதிர்பார்ப்பு. இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து நல்ல உயர்கல்வி பெற முற்படும் சிறுபான்மை சமூகத்தின் வழி தோன்றல்களுக்கு பல்கலைக்கழக நுழைவு மறுக்கப்படுவது நியாயமா என்று வேதனைப்பட்டு அழும்போது, சிறுபான்மையினரைக் குறிவைத்து அர்த்தமற்ற, தேவையற்ற ஆனால், இனத்துவேஷத்தை வெளிப்படுத்தும் நிபந்தனைகள், கருத்துக்கள் பரவுவதை, பரப்புவதை அரசு யாதொரு நடவடிக்கையும் எடுக்காமல் வாளா இருப்பது நல்ல விவேகமான அரசியல் நடவடிக்கை அல்லவே.

மறுக்கப்படுவது வெறுக்கத்தக்கது

பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவில் தகுதியுள்ள எல்லோருக்கும் கல்வி கிடைக்கும்படி செய்ய வேண்டும், செயல்பட வேண்டும். உயர்கல்வி பெறுவதற்கான தகுதி கொண்டவர்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படுவது மனித நேயத்தை மதிக்காத செயல் – வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது. சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் உயர்கல்வி நடவடிக்கை நாகரிக்கமற்ற மனித நேய மீறல் என்றாலும் தகும்.

எல்லா மலேசியர்களுக்கும் கல்வி பெறுவதில் உரிமை உண்டு என்பதை அரசு துணிந்து செயலாற்ற வேண்டும். கல்வியில் பாராபட்சம் காட்டுவது கடும் துரோகமாகும். தேர்தலை மட்டும் நம்பி நடத்தப்படும் அரசியல் வாழ்க்கை நிரந்தரமானது எனக் கருதுவது ஆபத்தாகும்.

அதே வேளையில்,,  சிறுபான்மையினர், இந்தக் கொடுமையிலிருந்து எவ்வாறு மீளுவது என்பதைச் சிந்தித்து நல்ல முடிவெடுக்க வேண்டும். அதில் ஒன்று சிறுபான்மை இயக்கங்கள் தங்கள் சமூகத்தின் நலிவு நிலையை மாற்ற பொருளாதார உதவியை நல்கும் மனப்பக்குவமும் பெற வேண்டும்.