சர்ச்சைக்குள்ளான புலியும், பல் வளராத குட்டிப் புலியும்

இராகவன் கருப்பையா- கடந்த வாரம் ‘புலி’ சம்பந்தப்பட்ட இரு விஷயங்கள் நாட்டு மக்களின் ஆழமான சிந்தனையைத் தூண்டும் அளவுக்கு கவனத்தை ஈர்த்து கடும் விவாதங்களை முடுக்கிவிட்டுள்ளது.

முதலாவது, புலி சின்னமுடைய மதுபான நிறுவனம் ஒன்று சீனப்பள்ளிக்கு நிதி ஆதரவு வழங்கிய, சர்ச்சையாக்கப்பட்ட ஒரு நிகழ்வு.

இரண்டாவது, நம் நாடு உண்மையிலேயே ஒரு காலத்தில் ‘ஆசிய புலி’யாக இருந்ததா அல்லது அந்த சொற்றொடர் முன்னாள் பிரதமர் மகாதீரால் வெறுமனே கிளப்பிவிடப்பட்ட ஒரு புரளியா என்பதாகும்.

மதுபானம், சூதாட்டம் மற்றும் சிகரெட் போன்றவை தொடர்பான நிறுவனங்கள் பள்ளிகளுக்கு நிதி ஆதரவு வழங்குவதில் தவறில்லை. ஆனால் அவற்றை அப்பட்டமாக விளம்பரப்படுத்தும் வகையில் எந்த ஒரு சின்னமும் பள்ளி வளாகத்தில் இருக்கச் கூடாது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் அல்லது பள்ளி வாரியம் வழியாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் விதிமுறைகள் குறிப்பிடுவதைப் போல் தெரிகிறது.

இது நியாயமான ஒன்றுதான். இருந்த போதிலும் சமயக் காவளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் சில அரசியல்வாதிகள் இவ்விகாரத்தை பூதாகரமாக்கி அறிவிலித்தனமாக நடந்து கொள்கின்றனர்.

புலி சின்னமுடைய ‘டைகர் பீர்’, ‘கார்ஸ்பர்க் பீர்’, கெந்திங் மலையில் உள்ள சூதாட்ட மையங்கள், ‘மெக்னம்’, ‘டோட்டோ’, மற்றும் ‘கூடா’  போன்ற சூதாட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தும் பில்லியன் கணக்கான ரிங்கிட்டிலிருந்துதான் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை அந்த அரசியல்வாதிகள் உணர மறுக்கின்றனர். கொஞ்சமும் ரோஷமில்லாமல் முரட்டுத்தனமாக வாதிடுகின்றனர்.

இது தொடர்பான விவாதங்கள் இன்னமும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், மலேசியா எந்த காலக்கட்டத்திலும் ‘ஆசிய புலி’யாக இருந்ததில்லை. நம் நாடு ஒரு வெறும் ‘குரங்கு’தான் என மூத்த அரசியல்வாதியான தெங்கு ரஸாலி ஹம்சா அதிரடியாக அறிவிப்பு ஒன்றை செய்து மற்றொரு ‘புலி’ விவாதத்தைத் தூண்டிவிட்டுள்ளார்.

தமது ஆட்சி காலத்தின் போது மலேசியா ‘ஆசிய புலி’யாக இருந்தது என மகாதீர் மட்டும்தான் சுயமாக தம்பட்டம் அடித்துத் திரிந்தார்.

விளையாட்டுத்துறையில் வேண்டுமென்றால் ஒரு காலக் கட்டத்தில் நம் நாடு ‘ஆசிய புலி’யாக இருந்தோம் என்று தாராளமாகக் கூறலாம்.

கடந்த 1960ஆம் ஆண்டுகளில் ஆசியாவே அதிரும் வகையில் மணி ஜெகதீசன், ஆசிர் விக்டர், யோகேஸ்வரன் மற்றும் ராஜாமணி போன்ற எண்ணற்ற தலைச்சிறந்த ஒட்டப்பந்தய வீரர்களைக் கொண்டிருந்த நம் நாடு துளியளவும் ஐயமில்லாமல் ‘ஆசிய புலி’தான்.

அதே போல 1970ஆம் அண்டுகளில் பூப்பந்தாட்டம், கால்பந்து மற்றும் ஹொக்கி, ஆகிய விளையாட்டுகளில் மலேசியா கோலோச்சியதையும் நாம் மறந்துவிட முடியாது.

விளையாட்டுத் துறையில் பிறகு சன்னம் சன்னமாக இன பாகுபாடு உடுருவியதைத் தொடர்ந்து அந்த கவுரவமும் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’க் கதையானது.

நாட்டில் ஊழல் மிஞ்சிப் போய்விட்ட நிலையில் பொருளாதாரத்துறையில் நாம் ‘ஆசிய புலி’யாக உருவெடுக்க தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே போல அரசியல்வாதிகளிடையே தீவிரமான இனவாதமும் மதவாதமும் என்றும் இல்லாத அளவுக்கு தலை தூக்கியுள்ள நிலையில் வேறு எந்தத் துறையிலும் நாம் ‘ஆசிய புலி’யாக உருவெடுக்க வாய்ப்பில்லை என்றால் அது மிகையில்லை. மாறாக பல்வேறுத் துறைகளில் மலேசிய தற்போது பின்நோக்கித்தான் பயணிக்கிறது.

மலேசியா எப்போதுமே ஒரு ‘ஆசிய புலி’யாக இருந்ததில்லை என 5 ஆண்டுகளுக்கு முன் பொருளாதார வல்லுனர் ஒருவர் கருத்துரைத்ததையும் நாம் இங்கு நினைவிற் கூறத்தான் வேண்டும்.

சிங்கப்பூர், ஹொங்கொங், தைவான் மற்றும் கோரியா ஆகிய நாடுகளை மட்டுமே ‘ஆசிய புலி’களாகக் கருத முடியுமே தவிர மலேசியா, பல் வளராத ஒரு ‘குட்டிப் புலி’ என மெடலின் பெர்மா எனும் அந்த பொருளாதார மேதை கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

பூமிபுத்ரா மற்றும் புதிய பொருளாதார கொள்கையின் கீழ் இனங்களுக்கிடையே காலவரம்பின்றி நீடிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் சமத்துவமின்மையின் தாக்கம்  அதற்கு ஒரு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.