இராகவன் கருப்பையா – ஆறாம் படிவம், ‘ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘ஏ லெவல்’ போன்ற, பல்கலைக்கழக நுழைவுத் தகுதி வகுப்புகளோடு ஒப்பிடுகையில், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் மிகவும் தரம் குன்றிய ஒன்றுதான் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
இதற்கு மூலக்காரணம் நுழைவுத் தகுதி இல்லாத ஆயிரக் கணக்கான மலாய்க்கார மாணவர்கள் மானாவாரியாக அந்த வகுப்புகளில் சேர்க்கப்படுவதுதான் எனும் உண்மை எல்லாரும் அறிந்த அப்பட்டமான ஒன்று.
முன்னாள் பிரதமர் மகாதீர் கடந்த காலங்களில் பல தடவை இதனை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது பின் தங்கியுள்ள மலாய்க்கார மாணவர்கள் புறவழியாக பல்கலைக்கழகங்களில் நுழைய வகை செய்வதற்காகவே மெட்ரிக்குலேஷன் வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனால்தான் நம் இன மாணவர்கள் 9 அல்லது ’10ஏ’க்களை பெற்றுள்ள போதிலும் இடம் கிடைக்காத நிலையில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான ‘ஏ’க்களை பெறும் மலாய்க்கார மாணவர்களுக்கு அதில் இடம் வழங்கப்படுகிறது.
ஜுன், ஜுலை, ஆகஸ்ட், ஆகிய 3 மாதங்களில் கட்டம் கட்டமாக இந்த மெட்ரிக்குலேஷன் வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஜுன் மாதத்தில் சேர்க்கப்படும் மாணவர்கள் மட்டுமே முழுமையானக் கல்வியைப் பெறுகின்றனர் எனும் விவரம் நிறைய பேருக்குத் தெரியாது.
அதற்கு அடுத்த 2 மாதங்களிலும் சேர்க்கப்படும் மாணவர்கள் கணிசமான அளவு முதல் கட்டக் கல்வியை இழந்துவிடுவதால் இறுதித் தேர்வில் அவர்கள் முழுமையான மதிப்பெண்களை பெற இயலாமல் பரிதவிக்கின்றனர்.
இது அரசாங்கத்திற்கும் தெரியாமல் இல்லை. ஆனால் இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்கு கல்வி அமைச்சு எம்மாதிரியான முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது என்றுதான் தெரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பெரும் போராட்டங்களுக்கிடையே மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் இடம் கிடைத்தும் இத்தகைய குளறுபடிகளில் நம் சமூகத்தைச் சார்த்த எண்ணற்ற மாணவர்கள் மாட்டிக் கொண்டு தவிப்பதாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில் உள்ள எண்ணற்ற பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி நம் அண்டை நாடான சிங்கப்பூரில் உள்ள உயர் கல்விக் கூடங்களில் கூட நமது மெட்ரிக்குலேஷன் கல்விச் சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை என கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் கூறினார்.
இதற்கிடையே மெட்ரிக்குலேஷன் தகுதியைக் கொண்டு உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. அந்த பாடத்திட்டங்களை நிறைவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பது கிட்டதட்ட உறுதி.
அதே வேளையில், வரும் காலங்களில் நம் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் தரமானக் கல்வியை பெற வேண்டுமென்றால், மெட்ரிக்குலேஷன் மோகத்தை விட்டு வெளியேறி, ‘ஃபவுண்டேஷன்’ அல்லது ‘ஏ லெவல்’ கல்வியைப் பெறுவது குறித்தும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
இந்த பாடத்திட்டங்களை பெறுவதற்கு எண்ணற்ற தனியார் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் முழு உபகாரச் சம்பளங்களை வழங்குகின்றன. பொருளகங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்கள் கூட உபகாரச் சம்பளங்கள் வழங்குகின்றன.
சற்று சிரத்தையெடுத்து முயற்சி மேற்கொண்டால் எதுவுமே சாத்தியமாகும் என்பதை நம் மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.