சிலாங்கூரில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான நிதி

இராகவன் கருப்பையா – உதவி நிதி தேவைப்படும் நம் சமூகத்தைச் சார்ந்த உயர்கல்வி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு சிறிய தொகையை வழங்கி வந்த சிலாங்கூர் மாநில அரசாங்கம், பண பற்றாக்குறையினால் இவ்வாண்டு சவாலை எதிர்நோக்கியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் டிப்ளோமா பயிலும் நம் மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட்டும் பட்டபடிப்பை மேற்கொள்வோருக்கு 5 ஆயிரம் ரிங்கிட்டையும் மாநில அரசு வழங்கிவந்துள்ளதாகத் தெரிகிறது.

இவ்வாண்டு நிறைய பேருக்கு இன்னமும் அந்த உதவித் தொகை சென்று சேராத நிலையில் பல மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரமறிய முனைந்த போது சரியான பதில் கிடைக்காமல் இருக்கின்றனர்.

இதற்கிடையே இவ்வாண்டு உதவித் தொகை வழங்குவதில் ஏன் இந்த தாமதம் என அத்திட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டுவிடம் வினவியபோது, இம்முறை அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதால் பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டைவிட இம்முறை மூன்று மடங்கு  அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு எத்தனை மாணவர்கள் விண்ணப்பம் செய்தார்கள், இவ்வாண்டு 300% கூடுதல் என்றால் அதன் எண்ணிக்கை என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

அதேபோல இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநில அரசாங்கம் எவ்வளவு தொகையை ஒதுக்கியது, இவ்வாண்டு எவ்வளவு ஒதுக்கப்பட்டது எனும் கேள்விக்கும் அவர் பதிலுரைக்கவில்லை.

இந்த சிக்கலை சமாளிப்பதற்கு, தகுதி பெறும் எல்லா மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கும் பொருட்டு, கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் இம்முறை குறைவானத் தொகையை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக பாப்பாராய்டு கூறினார்.

நாட்டிலேயே மிகவும் செழிப்பமான மாநிலமாகக் கருதப்படும் சிலாங்கூர் இச்சிறிய சவாலை சமாளிக்க முடியாமல் மாணவர்களுக்கானத் தொகையை குறைக்க எண்ணுகிறது என்பது நமக்கு வேடிக்கையாகத்தான் உள்ளது.

இதனிடையே சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை தேவையில்லாமல் விரயமாக்குகிறது எனும் தோரணையிலான ஒரு செய்தியை இணைய ஊடகம் ஒன்று பிரசுரம் செய்துள்ளது.

மாநில அரசுக்குச் சொந்தமான 2 நிறுவனங்களைச் சேர்ந்த 15கும் மேற்பட்ட இயக்குனர்களும் உயர் அதிகாரிகளும் இம்மாத பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு 4 நாள் உள்ளாசப் பயணம் ஒன்றை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ‘இப்போது மலேசியா (Malayaia Now) எனும் அந்த ஊடகம் குறிப்பிட்டது.

‘கும்புலான் ஹர்த்தானா சிலாங்கூர்’ மற்றும் ‘சென்ட்ரல் ஸ்பெக்ட்ரம்’ ஆகிய அந்த 2 நிறுவனங்களின் உயர் அதிகாரிகளோடு மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரியும் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்நிறுனங்களின் வாரிய நிர்வாகக் கூட்டங்களையும் அங்கேயே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த அந்த ஊடகம், இப்படிப்பட்ட ஒரு உள்ளாசப் பயணம் எந்த காலத்திலும் நடைமுறையில் இல்லாத ஒன்று என தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பங்கேற்பாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயணத்திற்கு எத்தனை மில்லியன் ரிங்கிட் செலவாகும் எனும் விவரத்தை மாநில அரசாங்கம் வெளியிடவில்லை.

இந்தியர்களுக்கு ஒதுக்கப்ட்ட நிதி சார்பாக தொடர்புகொண்ட போது, விரைவில் சிலாங்கூர் மந்திரி பெசார் விளக்கம் அளிப்பார் என்று பாப்பாராயுடு ஒரு குறிஞ்செய்தி வழி தெரியப்படுத்தினார்.