தமிழ் எழுத்தாளர்களுக்கு யார்தான் ஆதரவளிப்பது?

இராகவன் கருப்பையா – அண்மைய காலமாக நம் நாட்டில் தமிழ் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் சற்று அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் ஒரு விஷயமாகும்.

நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை மற்றும் பயண நூல்கள் என எண்ணற்ற புத்தகங்கள் தொடர்ந்தாற் போல் வெளியீடு கண்டு வருவது தமிழ் வளர்ச்சிக்கு பெரியதொரு ஊக்குவிப்பாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எனினும் இத்தகைய முன்னெடுப்புகளுக்கு பொது மக்களின், குறிப்பாக தமிழ் மொழி ஆர்வளர்களின் ஆதரவு எவ்வகையில் உள்ளது என்பது கேள்விக்குறிதான்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இளய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் உருவாகின்றனரா என்பதுதான்.

இவ்விரு அம்சங்களுக்கு இடையேயும் தொடர்பு இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் தங்களுடைய படைப்புகள், குறைந்த பட்சம் ‘கை கடிக்காத’ அளவுக்கு விற்பனையானாலே போதும் எனும் அவல நிலையில் நிறைய எழுத்தாளர்கள் உள்ளனர் என்பது வேதனையான விஷயம். ஆதாயம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, செலவுத் தொகை கிடைத்தாலே மகிழ்ச்சிதான் என்றொரு நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கின்றனர்.

நூல் வெளியீடு செய்வதில் இளையத் தலைமுறை ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு இப்படிப்பட்ட ஒரு சூழல் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடும் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

மொழியோ இலக்கியமோ வியாபாரப் பொருள்கள் இல்லை என்பது  உண்மைதான். இருப்பினும் அவற்றை உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு பணம் அவசியம் தேவை என்பதை நாம் மறுக்க முடியாது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது ‘கம்பச் சித்திரம்’ ஒன்றுமில்லை. மனமிருந்தால் மார்கம் உண்டு என்பதைப் போல தமிழ் மொழி மீது ஆர்வம் உள்ள நம் சமூகத்தைச் சார்ந்த அமைப்புகள் நொடிப் பொழுதில் இதற்கு தீர்வு காண முடியும் என்கிறார் எழுத்தாளரும் நாடறிந்த தன்முனைப்புப் பேச்சாளருமான மு.கணேசன்.

நாடளாவிய நிலையில் உள்ள ம.இ.கா. கிளைகள், ஒவ்வொரு முறை ஒரு நூல் வெளியீடு காணும் போதும் தலா ஒரு புத்தகத்தை வாங்கினாலே போதும் என்று அவர் குறிப்பிட்டார். இவ்வாறான ஒரு நடைமுறையை அமுல்படுத்துமாறு ம.இ.கா தலைமையகம் தனது கிளைகளுக்கு பணிக்க வேண்டும்.

இதே போன்ற முன்னெடுப்புகளை எம்.ஐ.பி.பி. எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, உரிமை, மக்கள் சக்தி, மற்றும் ஐ.பி.எஃப் போன்ற கட்சிகளும் மேற்கொண்டால் படைப்பாளர்களுக்கு அது ஒரு உந்துதலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதை விடுத்து மொழி வார்ச்சியிலும் அக்கட்சிகள் முக்கிய பங்காற்றுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

இவற்றுக்கு அப்பாற்பட்டு நாட்டிலுள்ள 520கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகளும் கூட ஒரு பிரதான பங்காற்ற முடியும் என முன்னாள் தமிழ் பள்ளி ஆசிரியருமான கணேசன் கூறினர்.

எல்லா பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்கள் வாங்குவதற்கென்று மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை அரசாங்கம் வழங்குகிறது. எனவே இந்த நூல்களை வாங்குவதற்கு பண பற்றாக்குறை என்ற பேசுக்கே இடமில்லை என்றார் அவர்.

இவ்விஷயத்தில் சிலாங்கூர், கோலசிலாங்கர் மாவட்டத்தில் உள்ள ஹோப்ஃபுல் தோட்டத் தமிழ் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி மகேஸ்வரி சற்று வித்தியாசமானவர். கிள்ளான் பள்ளத்தாக்கில் நடைபெறும் பெரும்பாலான நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்குச் சென்று தனது சொந்த செலவிலேயே புத்தகங்களை வாங்குகிறார்.

அந்நூல்களை படித்து விட்டு பிறகு தனது பள்ளியின் நூலகத்தில் அவற்றை அவர் சேர்த்துவிடுகிறார். இவரைப் போல இதர பல இடங்களிலும் இலைமறை காயாக ஒரு  சில ஆசிரியர்கள் இருக்கக் கூடும்.

இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக எழுத்தாளர் சங்கங்கள்தான் இருக்க வேண்டும் என்றால் அது மிகையில்லை. குறிப்பாக கெடா மாநில எழுத்தாளர் இயக்கம், பேரா மாநில எழுத்தாளர் சங்கம், ஜொகூர் மாநில எழுத்தாளர் சங்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் பினேங் மாநில எழுத்தாளர் சங்கம் போன்ற வசதி படைத்த எழுத்தாளர் அமைப்புகள் இதுகுறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

மகேஸ்வரியைப் போல கெடா மாநில எழுத்தாளர் இயக்கத் தலைவர் முனைவர் மாரி சச்சிதானந்தமும் ஒவ்வொரு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் கனிசமான அளவு புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்.

‘புத்தகங்களை வாங்கிக் கொள்கிறேன், நன்கொடை வழங்குகிறேன்,’ என நூல் வெளியீடுகளின் போது மேடைகளில் முழங்கும் அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் எல்லாம் பல வேளைகளில் வெறும் ‘வெத்து வேட்டாக’த்தான் முடிகிறது. அவர்களை நம்பி ஏமாந்த எழுத்தாளர்கள்தான் ஏராளம்.

தமிழ் ஊடகங்கள் கூட தங்களுடைய நூலகங்களுக்கென பல பிரதிகளை வாங்கி ஆதரவு வழங்குவதை ஒரு வழக்கமாகக் கொள்ளலாம். யார் செய்தாலும் செய்யாவிட்டாலும் தமிழ் நாளிதழ்களும் வார, மாத இதழ்களும் இதனை செய்வதற்கு காரணம் சொல்லவே கூடாது.

ஆக நம் சமூகத்தைச் சார்ந்த இந்த அமைப்புகள் சற்று சிரத்தையெடுத்து இத்தகைய முனைப்புகளில் கவனம் செலுத்தினால் நடப்பு எழுத்தாளர்களுக்கு அது உற்சாகமாக இருப்பது மட்டுமின்றி புதிய எழுத்தாளர்கள் துளிர்விடுவதற்கும் ஒர் உந்துதலாக அமையும்.