சமீபத்தில் அன்வாரின் அரசியல் செயலாளர் அமாட் பார்கான் பவுசி மக்கோத்தா குவாந்தனில் உள்ள சுல்தானா அஜா கல்சோம் பள்ளியையும் மற்றும் அதன் சுற்றுச்சூழல் வசதிகளையும் பிரதமர் அன்வார் பார்வையிட்ட படங்களை அவரின் முகநூலில் 11/08/2024=இல் பதிவிட்டார்.
அதோடு நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளியின் சுற்றுச்சூழல் எப்போதும் நல்ல நிலையில் இருப்பதாகவும், அதை தொடர்ந்து உறுதி செய்வதாகவும், இதனால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள் என்றும் அவரது கருத்தை முகநூலில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், அந்தப் பள்ளியிலிருந்து சுமார் 900 மீட்டர் அருகில் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி உள்ளது. அது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கொள்கலனில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நம் மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் கொள்கலனில் தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பள்ளியின் நிலமை பற்றி பிரதமருக்கும், அரசியல் செயலாளருக்கும் தெரியுமா? என்ற கேள்வி எழுகிறது.
காரணம், அரசியல் செயலாளர் வருகை புரிந்த அந்த பள்ளியிலிருந்து சுமார் 900 மீட்டர் மிக அருகாமையில்தான் ஜெராம் தமிழ்ப்பள்ளி அமைத்துள்ளது.
அந்த பள்ளிக்கு நிலம் மற்றும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை புதியக் கட்டுமான வேலைகள் நடை பெறாமல், பள்ளி மாணவர்கள் மிக மோசமான சூழ்நிலையில்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பள்ளியின் அமைப்பு முறையால் தற்போது குரங்குகளும் தினமும் வந்து போவதும் மாணவர்களின் உணவை எடுத்து பகிர்ந்து உண்பதும், அதைத்தடுக்க வேலி அமைப்பதும் பள்ளிப்பணிகளாக உள்ளன.
இவற்றை ஒட்டி புறப்பாட நடவடிக்கைகளும் புறந்தள்ளப்பட்டு, இவர்களின் சவால்களுக்கு சவாலாக உள்ளன.
இப்படி இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி இருப்பதை அரசியல் செயலாளர் அமாட் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்ற நிலையும் இருக்கலாம். ஆனால் அவரின் கவனதிற்கு கொண்டு செல்ல நமக்கு வக்கில்லையா என்ற வினாவும் எழுகிறது.
கு. கணேசன்- உரிமைக் கட்சியின் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆவார். .