பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை: அன்வாரின் விளக்கம் தேவை

இராகவன் கருப்பையா – இஸ்ரேல் போரில் காயமடைந்தவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் பிரதமர் அன்வாரின் முடிவு அதிக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எதிரணி அரசியல் தலைவர்கள் உள்பட கிட்டதட்ட எல்லா அரசியல்வாதிகளும் மவுனமாக இருக்கின்றனர். எனினும் பொதுமக்களும் சமூக ஆர்வளர்களும் தங்களுடைய கருத்துகளையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய வண்ணமாக உள்ளனர்.

அன்வார் செய்த முடிவு மனிதாபிமான அடிப்படையில் சரியாக தோன்றும். பாலஸ்தீனின் அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டன், சிரியா மற்றும் லெபனான் போன்ற நாடுகளே அவர்களை அவ்வளவாக கவனிக்கவில்லையாதலால் அவர்களுடைய நிலை பரிதாபம்தான்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இந்த இஸ்ரேலியப் போரில் இதுவரையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் எத்தனை பேரை இங்கு அழைத்து வர அன்வார் முடிவு செய்துள்ளார்,எத்தனை பேருக்கும் இங்கு சிகிச்சை வழங்கப்படும், எவ்வளவு நாள்களுக்கு இந்நடவடிக்கை நீடிக்கும் மற்றும் இதற்கெல்லாம் எவ்வளவு பணம் செலவாகும் போன்ற விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க அன்வார் கடப்பாடு கொண்டுள்ளார்.

மனிதபிமான அடிப்படையில் புனிதமான சேவையாக இதைக்கருதினாலும், அன்வாரின் இந்த நடவடிக்கை அரசியல் சாயையை கொண்டுள்ளது.

சிகிச்சைக்குக் கொண்டுவரப்படுவோரில் பெரும்பாலோரின் வீடுகள் போரில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ‘வீடிழந்த அவர்களை சிகிச்சைக்குப் பிறகு அன்வார் எங்கே அனுப்புவார்’, எனும் கேள்வியும் எழுத்துள்ளது.

மவுனம் கலைந்து பொதுமக்களின் ஐயப்பாடுகளுக்கு விளக்கமளிக்க வேண்டியது அவருடைய கடமையாகும். சிலர் எண்ணுவதைப் போல இது ஒரு அரசியல் முடிவல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில் மக்களின் வரிப்பணத்தில்தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பது எல்லாரும் அறிந்த ஒன்று.

நம் நாட்டின் சுகாதார சேவைகளில் குளறுபடிகளும் குறைபாடுகளும் நிறையவே உள்ளன என்பதும் ‘உள்ளங்கை நெல்லிக்கணி’. மற்ற பல மேலை நாடுகளில் உள்ளதைப் போல நாம் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்காக நோயாளிகள் மாதக் கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். அவர்களில் சிலர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பரிதாபகரமாக இறந்தும்விடுகின்றனர்.

பணி ஓய்வு பெற்றுள்ள, எவ்வித வருமானமும் இல்லாத ஆயிரக் கணக்கானோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிற போதிலும் குறிப்பிட்ட சில மருந்துகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் சொந்த செலவில் தனியார் மருந்தகங்களில்தான் தேவையான மருந்துகளை வாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.

போதுமான அளவு நிபுணத்துவ மருத்துவர்களும் நம்மிடையே இல்லை. இதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் இன பாகுபாடு அண்மையில் குறுக்கே நின்றதையும் நாம் அறிவோம்.

இத்தகைய அவலங்கள் அனைத்தும் காலங்காலமாக நாம் எதிர்நோக்கி வரும் குறைபாடுகள் எனும் உண்மையும் எல்லாருக்கும் தெரியும்.

இப்படிப்பட்ட சூழலில் ‘பாலஸ்தீனர்களை இங்கு கொண்டு வந்து சிகிச்சையளித்தால் வரி செலுத்தும் நமது நிலைமை மேலும் மோசமாகாதா’, என்பதுவே வெகுசன மக்களின் ஆதங்கமாக உள்ளது. ‘தனக்கு மிஞ்சியதுதானே தானம்’ என்பதுவே அவர்களுடைய நிலைப்பாடாகும்.

‘முகநூல்’ மற்றும் ‘டிக் டொக்’ போன்ற சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும் சமூக ஆர்வளர்களும் தங்களுடைய கருத்துகளை உக்கிரமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெகுசன மக்களின் அபிலாஷைகளையும் எண்ணங்களையும் உதாசீனப்படுத்தக்கூடாது என்பது அன்வாருக்கும் தெரியும். எனவே இவ்விவகாரத்தில் பொது மக்களின் கருத்துகளுக்கு அன்வார் செலிசாய்க்க வேண்டியது அவசியமாகும்.