இராகவன் கருப்பையா- அமைச்சரவையிலோ ஜி.எல்.சி. எனப்படும் அரசாங்க நிறுவனங்களிலோ பதவிகள் வழங்கப்படாமல் ம.இ.கா. ஓரங்கட்டப்பட்டுள்ளது, அதன் அரசியல் பலவீனத்தைக் காட்டுகிறது. தொடர்ந்து பழைய அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில் அங்கீகாரம் கிடைக்கும் என அது எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.
அடிப்படையில், ஒரு அரசியல் கட்சியின் பலமானது, எந்த அளவுக்கு தேர்தல் காலத்தில் வாக்காளர்களின் ஆதரவை அது திரட்ட இயலும் என்ற அரசியல் கணத்தில்தான் உள்ளது.
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக இருக்கும் ம.இ.கா.வுக்கு கடந்த காலங்களில் கிடைத்த இந்தியர்களின் வாக்குகளைப் போல மீண்டும் அதே அளவில் கிடைக்கும் என்ற நிலை தற்போது இல்லை.
இனமும் சமயமும்
அதோடு மலாய்க்காரர்களின் அரசியல் ஒரு புதிய பரிணாம பாதையில், இனமும் சமயமும் இணைந்து, பெரிக்காத்தான் என்ற பெயரில் ஊடுருவி உள்ளது. இதன் தாக்கம் தொடர்ந்து வலுவாகி வருகிறது.
பெரும்பான்மையான தொகுதிகளில் ‘மலாய்-இஸ்லாம்’ வாக்காளர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதனால் பக்காத்தான் ஹராப்பானில் உள்ள தேசிய முன்னணி கூட்டணி பலத்த போட்டியை எதிர்நோக்கும் சூழலில் உள்ளது.
நிலைமை இப்படி இருக்கையில் வெற்றி பெறக்கூடிய ஒரு தொகுதியை பக்காத்தான் ஹரப்பான் ம.இ.கா.வுக்கு விட்டுக் கொடுக்கும் சாத்தியம் என்ன?
இதனால் ம.இ.கா. தலைமைத்துவம், குறிப்பாக அக்கட்சியின் தலைவர் விக்னேஸ்வரனும் அதன் துணைத் தலைவர் சரவணனும் அதிக விரக்தியில் உள்ளதாகத் தெரிகிறது.
அண்மைய வாரங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் அவர்கள் ஆற்றிவரும் உரைகளில் இந்த நிலைப்பாடு வெளிப்படையாகவே காட்டப்படுகிறது.
“தேவை எற்பட்டால் தீர்க்கமாக முடிவெடுப்போம், அடிமைகளாக, அகதிகளாக இருக்க முடியாது, மரியாதை கிடைக்கும் இடம்தான் முக்கியம்”, போன்ற சாயல்களில் அவர்கள் ஆக்ரோஷமாக பேசி வருகின்றனர்.
நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பேசக்கூடிய ஒருவர் அமைச்சரவையில் நியமிக்கப்படவில்லை என்பதும் ஒரு பெரிய குறைபாடுதான்.
இருந்த போதிலும் கூட்டணியிலிருந்து வெளியேறக் கூடும் எனும் சாயலில் மிரட்டி வருவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை ம.இ.கா. தலைவர்கள் உணர வேண்டும்.
ஏனெனில் ஆளும் கூட்டணிக்கு அரசியல் பலம் சேர்க்கும் அளவுக்கு ம.இ.கா.விடம் வலுவில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று. அக்கட்சியிடம் இருப்பதோ ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதிதான். அதுவும் கூட தேசிய முன்னணியின் ஆதரவில் கிடைத்த வெற்றி.
அன்வார்
தேசிய முன்னணியும் பக்காத்தானும் தற்போது ஒரே அணியில் இருப்பதால் அடுத்த பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டியிட ம.இ.கா.வுக்கு இடம் கிடைக்குமா என்று கூட தெரியாது.
பல சந்தர்ப்பங்களில் தனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்குதான் அவ்வார் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
எதிர்கட்சிகளோடு இணைய நினைத்தால் அவர்கள் மட்டும் என்ன, தங்கக் தட்டு வைத்தா வரவேற்பார்கள்? ம.இ.கா.வின் பலம் என்ன என்று அவர்களுக்கு மட்டும் தெரியாதா என்ன?
ஏற்கெனவே எம்.ஐ.பி.பி. எனப்படும் ‘மலேசிய இந்திய மக்கள் கட்சி’ எதிரணியில் இணைந்துள்ளது. பினேங் மாநில முன்னாள் துணை முதல்வர் ராமசாமி தலைமையிலான ‘உரிமை’ கட்சியும் அவர்களுடன் சேர எண்ணியுள்ளதைப் போல் தெரிகிறது.
இப்படிபட்ட சூழலில் ம.இ.கா.வின் நிலைப்பாடு என்ன? இதர இந்திய கட்சிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ம.இ.கா. பரந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் அது மட்டுமே பலமல்ல.
மற்ற புதிய கட்சிகளோடு ஒப்பிடுகையில் பொருளாதார பலத்தில் முன்னணி வகிக்கும் ம.இ.கா., அதனையே ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு நாடு தழுவிய நிலையில் களமிறங்கி நம் சமூகத்தின் மேம்பாட்டுக்கு பாடுபடுவது அவசியமாகும்.
“ம.இ.கா.தான் எனக்கு கை கொடுத்தது. ம.இ.கா. இல்லையென்றால் இந்த அளவுக்கு நான் கல்வியில் உயர்ந்திருக்க முடியாது. நான் தொழிலில் வெற்றி பெற ம.இ.கா தான் உதவியது”, என நாடளாவிய நிலையில் பி40 தரப்பினர் சொல்லும் அளவுக்கு அக்கட்சி உழைப்பைப் போட வேண்டும்.
இப்படிச் செய்தால்தான் ஓரளவாவது நம் சமூகத்தின் அபிமானத்தை அக்கட்சி மீண்டும் பெற வாய்ப்பிருக்கிறது. அரசாங்க நிறுவனங்களிலோ அமைச்சரவையிலோ பதவிகள் வழங்கப்பட்டால் கட்சி வலுவடைந்துவிட்டது என்று பொருள்படாது.
மாற்றுச் சிந்தனை
மலேசிய சோசியலிஸ்ட் கட்சி ஒரு நல்ல உதாரணம். தொடர்ந்து தேர்தல்களில் களமிறங்கித் தோல்வியுற்றாலும் தொடர்ந்து சேவை மையங்களை அமைத்து மக்களுக்குச் சேவை செய்து வருகின்றனர்.
ம.இ.கா.வின் தலைவர்கள் மாற்றுச் சிந்தனையுடன் சமுதாயத்திற்கு சேவை செய்ய முன்வர வேண்டும்.