இராகவன் கருப்பையா – அரசாங்க அலுவலகங்களில், குறிப்பாக பொது மக்களுடனான தொடர்புகள் இருக்கக் கூடிய இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மறைக்காணிகள் அடிக்கடி பழுதடைவது வேடிக்கையாக உள்ளது.
முறையான பராமரிப்பு இல்லையா, தரக்குறைவான கருவிகள் பொருத்தப்பட்டுள்னவா அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் வேண்டுமென்றே அவை பழுதாக்கப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை.
இதன் தொடர்பான புகார்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிற போதிலும் சம்பந்தப்பட்ட இலாகாக்கள் அவற்றை கண்டு கொள்வதாகவும் தெரியவில்லை.
குறிப்பிட்ட சில இடங்களில் அரங்கேற்றப்படும் குற்றச்செயல்களை முடி மறைப்பதற்காக வேண்டுமென்றே இந்த கருவிகள் செயலிழக்கச் செய்யப்படுகிறது என்று கூட நமக்கு எண்ணத் தோன்றுகிறது.
காலங்காலமாக காவல் துறையினரின் தடுப்புக்காவல் மையங்களில் இது போன்ற புகார்களை கேட்டுக் கேட்டு நமக்கும் புளித்துப் போய்விட்டது.
குறிப்பாக தடுப்புக் காவல் கைதிகள் காவல் நிலையங்களில் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்களில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை கண்டறிய முற்படும் போது, ‘மறைக்காணி பழுது’ என்றுதான் பல வேளைகளில் சொல்லி சமாளிக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும் கூட இத்தகைய சாக்குப் போக்குகளை முழுமனதோடு ஏற்றுக்கொள்வதில்லை. இதில் ஏதோ சூது இருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
இதே போலத்தான் ஜொகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா அரசாங்க மருத்துவமனையில் அண்மையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடல் நலக்குறைவால் அம்புலன்ஸ் வாகனத்தில் அங்கு கொண்டுவரப்பட்ட இந்திய குடும்ப மாது ஒருவர் அவசரப் பரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மயக்கமுற்றிருக்கிறார்.
சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த அவரது குடும்பத்தினர் கவனித்த போது அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 9 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைம் பணப்பையில் அவர் வைத்திருந்த 200 ரிங்கிட்டையும் காணவில்லை.
அது பற்றி அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களை வினவிய போது அவர்கள் கொஞ்சமும் பரிவில்லாமல் எகத்தாளமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியதும் காவல் நிலையத்தில் புகாரளித்த அவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது காவல்துறை அதிகாரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு மறைக்காணியைப் பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்த போது, அந்தக் கருவி பழுதடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.
ஆக இதுபோன்ற சம்பவங்களுக்கு யார்தான் பொறுப்பேற்பது? யாரை நாம் குற்றம் சொல்வது? குற்றவாளிகளை எப்படி அடையாளம் காண்பது?
காவல் நிலையங்களும் மருத்துவமனைகளும் பொதுமக்களுக்கு எந்நேரத்திலும் சேவையாற்றக் கடப்பாடுக் கொண்டுள்ள அரசாங்க இலாகாக்களாகும்.
ஆனால் இத்தகைய குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருக்குமேயானால் அந்த இலாகாக்கள் மீதான மக்களின் நம்பிக்கை தளர்ந்துவிடும்.
எனவே இந்த ‘செயலிழக்கும் மறைக்காணிகள்’ தொடர்பான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களாவது தலையிட்டு அதற்கு ஒரு தீர்வுகாண வேண்டும்.